மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

89 கோடி பணப்பட்டுவாடா: எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

89 கோடி பணப்பட்டுவாடா: எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல் இணை ஆணையர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு இடைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அதில் பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்கள் அடிப்படையில் தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்குப் பதிவில் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. இதன் அடிப்படையில் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த பணப்பட்டுவாடா தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் வைரக்கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மேலும் பணப்பட்டுவாடா செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட மருது கணேஷ் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்குகளை விசாரித்து வந்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

வழக்குப் பதிவு ரத்து

இதனிடையே, “பணப் பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் அபிராமபுரம் காவல்நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாக, யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தனி நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் வழக்குப் பதிவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

நீதிபதிகள் அதிர்ச்சி

இந்நிலையில் இரண்டு நீதிபதிகள் அமர்வில் விசாரணையில் இருந்த வழக்குகள் மீண்டும் இன்று காலை (டிசம்பர் 3) நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 89 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை, தனி நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் செய்துவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இணை ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிடப்பட்ட நிலையில், FIR ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அரசு எப்படி தெரிவிக்க முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் மூன்றாவது நபர் எப்படி வழக்கை ரத்து செய்ய கோர முடியும் என்றும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பிற்பகலில் மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “ஏற்கனவே நீதிமன்றம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டும், கிழக்கு மண்டல இணை ஆணையர் ஏன் இது வரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மேலும் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்த நரசிம்மன் யார் என்றும் கேள்வி எழுப்பினர்.

வருமான வரி சோதனையை தொடர்ந்து கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் கடந்த ஓராண்டாக வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018