மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

சிறப்புக் கட்டுரை: அந்நிய முதலீட்டை அறியாத அப்பாவி விவசாயிகள்!

சிறப்புக் கட்டுரை: அந்நிய முதலீட்டை அறியாத அப்பாவி விவசாயிகள்!

இந்திய விவசாயிகளின் நிலை (பாகம் - 7)

இந்தியாவில் விவசாயிகளின் ஒட்டுமொத்த நிலை குறித்து விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. விவசாயிகளின் நிலையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் இந்திய அரசு கூறினாலும், அவர்கள் மகிழ்வாக இல்லை. வேளாண்மை தொடர்பான திட்டங்களும், கொள்கைகளும் பணக்கார விவசாயிகளையே சென்றடைவதாக 50 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். ஏழை சிறு விவசாயிகளும் பயனடைவதாக வெறும் 10 விழுக்காட்டினரே தெரிவித்துள்ளனர். இருதரப்புக்குமே பயனில்லை என்று 8 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய அரசியல் விவகாரங்கள் பற்றி விவசாயிகளின் கருத்துகளை அறிந்துகொள்வதற்காக அரசுத் திட்டங்கள் பற்றிக் கேள்வியெழுப்பப்பட்டது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் பணப் பரிமாற்றம்

ஏறத்தாழ 85 விழுக்காடு விவசாயிகள் 100 நாட்கள் வேலைத் திட்டம் (மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்) பற்றி அறிந்திருப்பார்கள். இத்திட்டம் பற்றி மத்திய மற்றும் தென்னிந்திய விவசாயிகள் அதிக விழிப்புணர்வுடனும், மேற்கிந்திய விவசாயிகள் குறைவான விழிப்புணர்வுடனும் இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்திட்டம் பற்றி அறிந்தவர்களிலும், தங்கள் குடும்பத்தினருக்கு இத்திட்டத்தின் கீழ் வேலை கிடைத்ததாக 44 விழுக்காட்டினர் மட்டுமே தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் குடும்பத்தினருக்கு வேலை கிடைக்கவில்லை என்று 51 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

100 நாட்கள் வேலைத் திட்டம் ஆண்டு முழுவதும் நடைபெற வேண்டுமா அல்லது வேளாண் தொழிலாளர்களுக்கான தேவை இல்லாதபோது மட்டும் நடைபெற வேண்டுமா என்று இந்த ஆய்வில் கேள்வியெழுப்பப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது போலவே, பெரும்பாலான நிலமற்ற தொழிலாளர்கள் 100 நாட்கள் வேலைத் திட்டம் ஆண்டு முழுவதும் நடைபெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பெரு விவசாயிகளோ, வேளாண் தொழிலாளருக்கான தேவை இல்லாதபோது மட்டும் 100 நாட்கள் வேலை இருந்தால் போதும் என்று பதிலளித்துள்ளனர்.

’உங்கள் பணம் உங்கள் கையில்’ திட்டம் பற்றி 70 விழுக்காடு விவசாயிகள் அறிந்துள்ளனர். நிலமற்ற விவசாயிகள் உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம் பற்றி குறைவான விழிப்புணர்வுடன் உள்ளனர். இவர்களில் 13 விழுக்காட்டினர் மட்டுமே இதுபற்றி விழிப்புணர்வுடன் உள்ளனர். ஆனால், பெரு விவசாயிகளில் 54 விழுக்காட்டினர் இத்திட்டம் பற்றி அறிந்துள்ளனர். இதுபற்றிய விழிப்புணர்வில் பிராந்திய அடிப்படையிலான வேறுபாடுகள் ஏதும் இல்லை.

உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம் பற்றி விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. விதைகள், உரங்கள் போன்றவற்றுக்கு மானியம் தேவையா என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. இதில் தெளிவான பதில்கள் கிடைக்கவில்லை. ஏனெனில் 40 விழுக்காடு விவசாயிகள் இதுபற்றிக் கருத்து கூறவே இல்லை. பெரும்பாலும் நிலமற்ற விவசாயிகளே கருத்து கூறவில்லை. நேரடியாக வங்கிக் கணக்குகளுக்கே மானியத் தொகை அனுப்பப்படுவதற்கு 34 விழுக்காடு விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அந்நிய நேரடி முதலீடு

வெறும் 24 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே நிலம் கையகப்படுத்துதல் சட்டம் பற்றிக் கேள்விப்பட்டுள்ளனர். இவர்களில், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தால் விவசாயிகள் பயனடைவதாக 21 விழுக்காட்டினரும், இழப்பதாக 57 விழுக்காட்டினரும் தெரிவித்துள்ளனர். 22 விழுக்காட்டினர் கருத்து கூறவே இல்லை. மேலும், 83 விழுக்காடு விவசாயிகள் அந்நிய நேரடி முதலீட்டைப் பற்றியே கேள்விப்பட்டதில்லை என்று தெரிவித்துள்ளனர். அதுபற்றிக் கேட்டறிந்தவர்களிலும் 51 விழுக்காட்டினர் விவசாயத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது எனவும், 28 விழுக்காட்டினர் அனுமதிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

சுவாரஸ்யமூட்டும் வகையில், நிலமற்ற விவசாயிகள் அதிகளவில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஆதரவளித்துள்ளனர். ஏனெனில், அந்நிய நேரடி முதலீட்டால் அவர்கள் தங்களது உற்பத்தியை நேரடியாகப் பெருநிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வழிவகை ஏற்படும் என்று நம்புகின்றனர். வேளாண்மையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு 40 விழுக்காடு நிலமற்ற விவசாயிகளும், 28 விழுக்காடு சிறு விவசாயிகளும், 26 விழுக்காடு குறு விவசாயிகளும், 23 விழுக்காடு பெரு விவசாயிகளும் ஆதரவளித்துள்ளனர். விவசாயிகளின் பேரம் பேசும் வாய்ப்பை அந்நிய நேரடி முதலீடு பாதிக்கும் என்பதால் பெரு விவசாயிகள் இதற்கு ஆதரவளிப்பதில்லை.

வேளாண் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு

ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா, கிராமின் பந்தரன் யோஜனா, தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம், கிராமின் பீஜ் யோஜனா, கிரிஷி விக்யான் கேந்திரா, கிசான் கிரெடிட் கார்டு, கடன் தள்ளுபடித் திட்டம் போன்றவை பற்றி விவசாயிகள் அறிந்துள்ளனரா எனவும், பயனடைந்துள்ளனரா எனவும் கேள்வியெழுப்பப்பட்டது. இவை பற்றி விவசாயிகள் பெருமளவில் விழிப்புணர்வற்றே இருந்துள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் இத்திட்டங்களின் பயன்களைப் பெறவில்லை.

குறைந்தபட்ச ஆதரவு விலை

குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றிய விவசாயிகளின் விழிப்புணர்வும் மிகக் குறைவாக உள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற விவசாயிகளில் 62 விழுக்காட்டினருக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றிய விழிப்புணர்வு இல்லை. 38 விழுக்காட்டினர் இத்திட்டம் பற்றி அறிந்துள்ளனர். திட்டம் பற்றி விழிப்புணர்வு உள்ளவர்களிலும், அரசு நிர்ணயிக்கும் பயிர் விலை திருப்திகரமாக இல்லையென்று 64 விழுக்காட்டினரும், திருப்திகரமாக இருப்பதாக 27 விழுக்காட்டினரும் தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்காக உருவாக்கப்படும் திட்டங்கள் பற்றி அவர்கள் முழுமையாக விவரமறியாமல் இருக்கிறார்கள் என்பதே இந்த ஆய்வின் வாயிலாகத் தெரியவருகிறது. மண் பரிசோதனை, உரப் பயன்பாடு உள்ளிட்ட அரசு வழங்கும் வேளாண் உதவிகளும் நன்மை பயப்பதாகத் தெரியவில்லை. இத்திட்டங்கள் பற்றி வேளாண் துறையிடமிருந்து தகவலோ, உதவியோ வருவதில்லை என்று சுமார் 75 விழுக்காடு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் பங்கெடுப்பு

விவசாயிகள் தங்களது உரிமைக்காகப் போராட்டம் நடத்துவதற்கு ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் போன்றவை சரியான வழிமுறைகளா என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, சரி என்று 67 விழுக்காட்டினரும், தவறான வழிமுறை என்று 7 விழுக்காட்டினரும், சூழலுக்கு ஏற்ப ஏற்கலாம் என்று 35 விழுக்காட்டினரும், அதுதான் ஒரே வழியென்றாலும் ஏற்க முடியாது என்று 10 விழுக்காட்டினரும் தெரிவித்துள்ளனர். எனினும், கடந்த ஐந்தாண்டுகளில் 18 விழுக்காட்டினர் மட்டுமே ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் ஆர்ப்பாட்டங்களிலும், வேலைநிறுத்தங்களிலும் பங்கேற்றதே இல்லையென சுமார் 75 விழுக்காடு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

2014 மக்களவைத் தேர்தலில் மிக முக்கியமான பிரச்சினை என்னவென்று விவசாயிகளிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, வாக்குச் செலுத்தப் போகும்போது விலை உயர்வே பெரும் பிரச்சினையாக உள்ளதாகப் பெரும்பாலான விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விலை உயர்வுடன், வேலையின்மை, நீர்ப்பாசனம், ஊழல் போன்றவையும் முக்கிய பிரச்சினைகளாக இருப்பதாக 17 விழுக்காடு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

(முற்றும்)

-அ.விக்னேஷ்

இந்திய விவசாயிகளின் நிலை-1

இந்திய விவசாயிகளின் நிலை-2

இந்திய விவசாயிகளின் நிலை-3

இந்திய விவசாயிகளின் நிலை-4

இந்திய விவசாயிகளின் நிலை-5

இந்திய விவசாயிகளின் நிலை-6

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

திங்கள் 3 டிச 2018