மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

வதந்திக்கு எதிரான விழிப்புணர்வு: வாட்ஸ்அப் விளம்பரம்!

வதந்திக்கு எதிரான விழிப்புணர்வு: வாட்ஸ்அப் விளம்பரம்!

பயனாளர்கள் இடையே வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுக்கும் வகையில் மூன்று விளம்பரங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது வாட்ஸ்அப் நிர்வாகம்.

தவறான தகவல்கள் மற்றும் அழிவை ஏற்படுத்தும் வதந்திகள் வாட்ஸ்அப்பில் பரவுவதால், பல்வேறு மோசமான விளைவுகள் ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, மாட்டிறைச்சி தொடர்பான கும்பல் படுகொலைகள் வடமாநிலங்களில் நிகழ்வதற்கு வாட்ஸ்அப் தகவல் தொடர்பு அடிப்படையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இன்று (டிசம்பர் 3) டெல்லியில் மூன்று விளம்பரங்களை வெளியிட்டது வாட்ஸ்அப் நிர்வாகம். அபாயகரமான வதந்திகள் பயனாளர்கள் இடையே பரவுவதைத் தடுக்கும் நோக்கில், இந்த விளம்பரப்படங்களை இயக்குனர் சிர்ஸா குகா தாகுர்தா உருவாக்கியுள்ளார்.

இந்த விளம்பரம் 9 மொழிகளில் ஒளிபரப்பாகவுள்ளது. தொலைக்காட்சி மட்டுமல்லாமல் ஃபேஸ்புக், யூடியூப் ஆகிய தளங்களிலும் இது ஒளிபரப்பாகும். டிசம்பர் 7ஆம் தேதியன்று ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வதந்தி பரவுவதைத் தடுக்கும் இந்த விளம்பரங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தங்களுக்குப் பிரியமானவர்களுடன் தொடர்புகொள்வதில் வாட்ஸ்அப் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தியதற்குத் தலைவணங்குகிறோம். அதே நேரத்தில் மக்களுக்கிடையே இவ்வாறு தொடர்பு ஏற்படும்போது தவறான தகவல்கள் பரவுவதையும் எதிர்கொண்டாக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் வாட்ஸ்அப் சார்பாக இப்படங்களைத் தயாரித்த போஸ்கோ ஜுபியாகா.

“இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தின் மூலமாக, வாட்ஸ்அப்பில் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்” என்று கூறியுள்ளார். இந்த விளம்பரப் படங்களில் கதை மாந்தர்கள் வாட்ஸ்அப்பில் வதந்தி பரவுவதை எதிர்கொள்ளும் வழிமுறைகளை விளக்குகின்றனர். வதந்திகளைப் பரப்பும் குழுவில் இருந்து வெளியேறுவது, அம்முயற்சியில் ஈடுபடும் தனிநபர்களை ‘பிளாக்’ செய்வது உட்பட வதந்தி பரவுவதைத் தடுப்பது குறித்த வழிமுறைகள் இதில் விளக்கமாக எடுத்துரைக்கப்படுகின்றன. ‘மகிழ்ச்சியை மட்டுமே வாட்ஸ்அப்பில் பகிர வேண்டும்; வதந்திகளை அல்ல’ என்று இதன் முடிவில் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்தைச் சந்தித்துப் பேசினார் வாட்ஸ்அப் சிஇஓ கிறிஸ் டேனியல்ஸ். அப்போது, தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார் டேனியல்ஸ். இதன் தொடர்ச்சியாக, கடந்த சில மாதங்களாகவே வாட்ஸ்அப்பில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. நட்பு வட்டத்தில் அல்லாதவர்களிடம் இருந்து வரும் பார்வர்ட் தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று பயனாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தானியங்கியாகத் தகவல் அனுப்பும் வாட்ஸ்அப் கணக்குகள் கண்டறிந்து மூடப்பட்டன.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018