மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

டெல்லி செல்கிறார் ஸ்டாலின்

டெல்லி செல்கிறார் ஸ்டாலின்

டெல்லியில் வரும் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற இருக்கும் எதிர்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் செல்லக்கூடும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய ஆளுங்கட்சியான பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த ஒருங்கிணைப்புப் பணியை செய்து வருகிறார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சரத்பவார், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த அவர் அண்மையில் சென்னை வந்து திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்தித்துப் பேசினார்.

அப்போது பாஜகவுக்கு மாற்றாக அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் வரும் டிசம்பர் 11ஆம் தேதி நாடாளுமன்றம் கூட இருப்பதை முன்னிட்டு, டிசம்பர் 10 ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்திலேயே அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் இணைத்து சந்திப்பு ஒன்றை நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே நவம்பர் 22 ஆம் தேதி இந்த டெல்லி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நவம்பர் 21 முலாயம் சிங் யாதவ் பிறந்தநாள் என்பதாலும், மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் தலைவர்கள் பிசியாக இருப்பதாலும் ஒத்தி வைக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்து டிசம்பர் 10 ஆம் தேதி இக்கூட்டம் நடக்க இருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, திரிணா மூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொள்கிறார்கள்.

சந்திரபாபு நாயுடுவே ஒவ்வொரு தலைவருக்கும் போன் போட்டு தனிப்பட்ட முறையில் இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அவர் டெல்லி வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். வழக்கமாய் டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் என்றால் திமுக சார்பில் கனிமொழி கலந்துகொள்வார். ஆனால் இம்முறை திமுக தலைவர் என்ற முறையில் ஸ்டாலினே கலந்துகொள்ள திட்டமிட்டிருக்கிறார் என்று திமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

“அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டால்தான் கூட்டம் சிறப்பாக இருக்கும் என்று சந்திரபாபு கருதுகிறார். அதனால் ஒவ்வொரு தலைவரின் வருகையும் அவசியம் என்று அவர் எதிர்பார்க்கிறார். இதை ஸ்டாலினிடமும் அவர் கூறியுள்ளார். மேலும் டிசம்பர் 16 ஆம் தேதி கலைஞர் சிலை திறக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற இருப்பதால் அதற்கான அழைப்பையும் இந்த சந்திப்பின் மூலம் பல்வேறு தலைவர்களுக்கு நேரில் விடுக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது. எனவே திமுக தலைவர் ஸ்டாலின் டெல்லி செல்லலாம் என்ற ஒரு திட்டம் இருக்கிறது” என்கிறார்கள் திமுக சீனியர்கள்.

அப்படி ஸ்டாலின் டெல்லி சென்றால், திமுக தலைவர் ஆனபிறகு அவர் அரசியல் காரணங்களுக்காக டெல்லி செல்லும் முதல் பயணம் இதுவாக இருக்கும்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018