மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

180 கி.மீ. வேகத்தில் ரயில் 18: சாதனை!

180 கி.மீ. வேகத்தில் ரயில் 18: சாதனை!

இந்தியாவின் முதல் என்ஜின் இல்லா ரயில் என்ற சிறப்பைப் பெற்ற ரயில் 18, நேற்று நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தின்போது 180 கி.மீ. வேகத்தைக் கடந்தது. வேறு எந்த ரயிலும் இந்தியாவில் இத்தகைய வேகத்தை எட்டவில்லை என்பதால், இது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

நேற்று (டிசம்பர் 2) ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கோட்டா – குர்லசி ரயில் நிலையம் இடையே நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தின்போது, ரயில் 18 இந்த சாதனையைச் செய்துள்ளது. இந்த ரயிலை பதாம் சிங் குர்ஜார் இயக்க, அவரது உதவியாளராக ஓங்கார் யாதவ் பணியாற்றினார். “இந்த சாதனையில் நாங்களும் பங்கு வகிப்பதில் பெருமையடைகிறோம்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் பதம் சிங் குர்ஜார்.

இந்த ரயில் 18, சென்னை ஒருங்கிணைந்த ரயில்பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎப்) தயாரிக்கப்பட்டது. பெரும்பாலான சோதனைகள் முடிந்துவிட்ட நிலையில், சில சோதனைகள் மட்டுமே மீதமுள்ளதாகத் தெரிவித்தார் ஐசிஎப் பொது மேலாளர் எஸ்.மணி. “வரும் ஜனவரி மாதம் முதல் வணிகரீதியாக ரயில் 18 ஓடத் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். பொதுவாக, இந்த சோதனைகள் மூன்று மாத காலம் தொடரும். ஆனால், இப்போதே எதிர்பார்த்ததைவிட அதிக வேகத்தை ரயில் 18 எட்டியுள்ளது. எல்லாம் சரியாகச் சென்றால், தற்போதைய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாற்றாக இது செயல்படும்” என்று அவர் கூறினார்.

இந்திய ரயில்வே துறையிலுள்ள தண்டவாளங்கள், சிக்னல்கள் சரி செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டால், 200 கி.மீ. வேகத்தைக் கூட ரயில் 18 எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். “இதிலேயே படுக்கை வசதி கொண்ட பெட்டிகளையும் இணைக்கும் எண்ணம் உள்ளது. இதற்காக, இந்த ரயிலில் பெரிதாக மாற்றம் ஏதும் செய்யத் தேவையில்லை” என்று கூறினார் மணி.

16 பெட்டிகள் வரை கொண்ட இந்த எக்ஸ்பிரஸ் ரயிலினால் 15 -20 சதவிகிதம் வரை சக்தி மீதமாகும். சாதாரண பெட்டியில் 78 இருக்கைகளும், எக்ஸிகியூட்டிவ் பிரிவில் 52 இருக்கைகளும் இருக்கும். இந்த ரயிலில் கார்பன் எச்சங்கள் குறைவான அளவில் வெளிப்படும். வழக்கமாக இது போன்ற ரயிலை வடிவமைக்க 4 ஆண்டுகள் தேவைப்படும் நிலையில், 18 மாதங்களில் இதனை உருவாக்கியதாகத் தெரிவித்துள்ளனர் ஐசிஎப் அதிகாரிகள். மெட்ரோ ரயில் போல மின்சாரத்தில் இது இயங்கும்; ரயிலின் இருமுனையிலும் ஓட்டுனருக்கான அறைகள் இருக்கும்.

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்ததினமான வரும் டிசம்பர் 25ஆம் தேதியன்று இந்த ரயில் 18 அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி – வாரணாசி இடையே இந்த ரயில் இயக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும், இது பற்றிய தகவல் ஏதும் முழுமையாக வெளியாகவில்லை.

இந்த ரயில் டெல்லியில் காலை 6 மணிக்கு கிளம்பி வாரணாசியை மதியம் 2 மணியளவில் சென்றடையும். அங்கிருந்து 2.30 மணிக்குக் கிளம்பி, மீண்டும் டெல்லியை இரவு 10.30 மணியளவில் சென்றடையும். இந்த ரயில் கட்டணமானது, வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018