மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

நமக்குள் ஒருத்தி: கண்ணாடி பிம்பங்களைத் தகர்ப்போம்!

நமக்குள் ஒருத்தி: கண்ணாடி பிம்பங்களைத் தகர்ப்போம்!

நவீனா

பெண் எப்போதும் மென்மையாகவே இருப்பதற்காகப் படைக்கப்பட்ட பாலினம் என்பதே சமூகத்தின் கண்ணோட்டமாக இருக்கிறது. அவளைப் பூவாகவும், மென்காற்றாகவும், மெல்லிய பனித்துளியாகவும் கற்பனை செய்து, கவிதைகளையும் புனைவுகளையும் எழுதுவார்கள். உலகில் உள்ள அத்தனை மென்மைக்கும் ஒரே இலக்கணமாகப் பெண்ணை உருவகப்படுத்துவார்கள். உடல் அமைப்பின் ரீதியாக ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குப் பலம் குறைவுதான் என்றாலும், மனவலிமையை ஒப்பிடும்போது ஆண்களுக்கு நிகராக எடுத்த காரியங்களை முழு மனத்திடனுடன் நிறைவேற்றவும், சித்தியாக்கவும் பெண்களுக்குத் திறன் இருக்கிறது.

ஆனால், கண்ணாடி போன்ற மிருதுவான பொருள்களோடு ஒப்பீடு செய்து காலங்காலமாகப் பெண்ணைச் சாந்த சொரூபியாக அவர்களே எண்ணிக்கொள்ளும்படி செய்துவருகிறது. இந்த மனநிலை பெண்ணின் ஆற்றல்களுக்கும் மனவலிமைக்கும் தடைக்கல்லாக வந்து நிற்கிறது. அவளை மென்மையாகவே இருந்து பழகிக்கொள்ளச் செய்கிறது. இந்தக் குணத்தினால் அவர்கள் எளிதில் உடைந்து போகக்கூடிய ஒரு கண்ணாடிப் பொருளாகவே தங்களை நினைத்துக்கொண்டு விடுகின்றனர். தன்னைப் பூவென்றும், பனியின் துளி என்றும் வர்ணிக்கும்போது உவகை கொள்ளும் பெண்கள், சமூகத்தின் கண்களுக்குமுன் அந்த வர்ணனைகளுக்கு ஏற்றபடித் தங்களைக் காட்டிக்கொள்ள முனைகின்றனர். அது அவர்களின் குணாதிசயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி அவர்களை மென்மையான சித்திரப் பாவைகள் போல் மாற்றிவிடுகிறது.

உண்மையில் வீரமும், தைரியமும் பெண்களிடம் அருகிப்போனது சமூகத்தின் சூழ்ச்சியால் ஏற்பட்ட காலத்தின் கட்டாயமாகும். அடிப்படையில் பெண் என்பவள் மகா தைரியசாலி, மனவலிமையின் இருப்பிடம், சக்தியின் ஊற்றுக்கண். சமூகம் அவள்மேல் செலுத்திவந்த அடக்குமுறையின் பெயரில்தான் ஆண்டாண்டுகளாக அவளது குணங்களில் மெல்ல மாற்றங்கள் நிகழ்ந்து, அவள் மிருதுவாகவும், இலகுவாகவும் மாறிப்போனாள். ஆனால், அதன்மூலம் அவள் அடைந்த பலன் ஏதும் இல்லை, இழந்தவை ஆயிரமாயிரம்.

கண்ணாடி பொம்மைகளுடன் பொம்மையாக

டென்னிஸி வில்லியம்ஸ் (Tennessee Williams) எழுதிய கிளாஸ் மெனெஜெரி (Glass Menagerie) அதாவது கண்ணாடி பொம்மைகள் என்னும் நாடகத்தில் லாரா என்னும் மாற்றுத்திறனாளிப் பெண் முக்கிய கதாபாத்திரமாகப் புனையப்பட்டிருப்பார். அவரது காலில் சிறிய குறைபாடு இருக்கும். தந்தை இல்லாமல் தாயினால் வளர்க்கப்படும் லாராவைத் தாய் சிறுவயது முதலே பூவைப் போலப் பொத்திப் பாதுகாத்து வருவார். அதன் நிமித்தம் லாராவுக்கு எதையும் தானாகவே தனியாக நின்று எதிர்கொள்ளும் திறன் இல்லாமல் போயிருக்கும். அவளுடைய குணங்களெல்லாம் முற்றிலும் மிருதுவாக மாறிப்போயிருக்கும். அவளுக்கு எப்போதும் பிடித்தமான ஒரு விஷயம் அவளிடமுள்ள கண்ணாடி பொம்மைகளைப் பார்த்துக்கொண்டே சதா சர்வகாலமும் பொழுதை கழிப்பது மட்டும்தான்.

அந்தக் கண்ணாடி பொம்மைகளுடன் ஒரு பொம்மையாக வில்லியம்ஸ் லாராவைச் சித்திரித்திருப்பார். அந்தப் பொம்மைகளுக்குள் ஒன்றாக மாறிவிடவே லாராவும் ஆசைப்படுவாள். ஒருமுறை ஒரு சிறு சண்டையின்போது அவள் அண்ணன் அவளது கண்ணாடி பொம்மைகள் சிலவற்றை உடைத்து விடுவான். அவை வெறும் பொம்மைகள்தான் என்ற உண்மையைக்கூட உணர முடியாமல், அவை உடைந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல் லாரா இடைவிடாமல் அழுதுகொண்டே இருப்பாள். அவை பொம்மைகள்தான் என்கிற எண்ணத்தைத் தாண்டி அவள் அவற்றைத் தான் என்றே மனதில் வரித்துக்கொள்வாள்.

அவளின் அந்த மென்மையான குணம் அவளையுமறியாமல் அவளிடம் தாழ்வு மனப்பான்மையாக உருவெடுத்துவிடும். தன் மேல் உண்டான நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிடுவாள். யாரிடமும் பேசுவதற்குக்கூடத் தயக்கம் காட்டும் பெண்ணாக இருப்பாள். இதனால் அவளுக்குத் தோழிகளே இல்லாமல் போய்விடுவார்கள். தனிமையிலேயே தன் நாட்களைக் கழித்துவருவாள். பள்ளி நாட்களில் சக மாணவன்மீது அவளுக்கு ஈடுபாடு வரும். ஆனால், தனது தாழ்வு மனப்பான்மையால் அதை அவனிடம் வெளிபடுத்த மாட்டாள். அவனிடம் சொன்னால் அவன் அதை மறுத்துவிடுவான் என்ற தவறான ஓர் எண்ணத்தை மனதில் வளர்த்துக்கொண்டு, தன் காதலை மனதிலேயே புதைத்துக்கொள்வாள்.

சில ஆண்டுகளுக்குப் பின் அந்த மாணவனைச் சந்திக்க நேரிடும் போது மிகுந்த தயக்கத்துடன் அவன் மீது உண்டான காதலைச் சொல்ல முற்படுவாள். அவனுக்கும் அவள்மீது ஈடுபாடு இருந்தது அப்போதுதான் அவளுக்குத் தெரியவரும். ஆனால், அவனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகியிருப்பதை அறிந்த லாரா மீண்டும் தனது தாழ்வுமனப்பான்மைக்கே திரும்பிவிடுவாள். மீண்டும் அந்தக் கண்ணாடி பொம்மைகளுக்குள் ஒன்றாகவே மாறிவிடுவாள். அவளது நிலையை நினைத்து அவளது தாயும் சகோதரனும் மனம் வருந்தியபடியே வாழ்நாட்களை கழித்துக்கொண்டிருப்பதாய் நாடகம் நிறைவுறும்.

பெண்களை அப்படி ஒரு கூட்டுப்புழுவாக, கண்ணாடி பொம்மையாக வைத்திருக்கவே சமூகம் ஆசைப்படுகிறது. ஆனால், பெண்ணின் திறமைகள் பன்முகமானவை. இவ்வாறாக ஒரு பாலினத்தின் திறமைகளை வெவ்வேறு காரணிகளின் மூலம் அடக்கிவைப்பதால் ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றம் பாதிக்கப்படுவதோடு, ஆக்கத் திறனின் சமநிலையும் கேள்விக்குறியாகிவிடும். பெண்கள் இந்தக் கண்ணாடி பொம்மைப் பிம்பங்களைத் தகர்த்து வெளிவரத் தயக்கம் காட்டுவதால் இழப்பு அவர்களுக்கு மட்டுமல்லாமல், சமுதாயத்துக்கும்தான்.

இன்னும் பறக்கலாம்!

(அடுத்த பகுதி அடுத்த திங்களன்று)

(கட்டுரையாளர் : நவீனா, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், இலக்கியம் சார்ந்த படைப்புகளை எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018