மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

பக்தர்கள் வருகை: நட்சத்திரங்களை நாட முடிவு!

பக்தர்கள் வருகை: நட்சத்திரங்களை நாட முடிவு!

சபரிமலையில் நடைபெற்றுவரும் போராட்டங்களால் பக்தர்கள் வருகை குறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் பயத்தைப் போக்கும் வகையில் திரை நட்சத்திரங்களைக் கொண்டு விளம்பரங்கள் தயாரிக்கும் முனைப்பில் உள்ளது திருவாங்கூர் தேவசம் போர்டு.

கடந்த நவம்பர் 16ஆம் தேதியன்று மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் இந்த காலகட்டத்தில் அதிகளவில் ஐயப்பனைத் தரிசிக்கப் பக்தர்கள் வருவார்கள். ஆனால், அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தும் வகையில், அங்கு கேரள மாநில அரசினால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோயில் நடை திறக்கப்பட்டபோது அவ்வட்டாரத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால், நூற்றுக்கும் மேற்பட்டோர் குழுவாக ஒருங்கிணைந்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இக்காரணங்களால், கடந்த ஆண்டுகளைவிடத் தற்போது பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் பயத்தைப் போக்கும் வகையில் விளம்பரங்களை வெளியிட முடிவு செய்துள்ளது திருவாங்கூர் தேவசம் போர்டு. இது பற்றி என்டிடிவி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தேவசம் போர்டு உறுப்பினர் பேசுகையில், இது பற்றி வரும் டிசம்பர் 3ஆம் தேதியன்று (இன்று) முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். “திரைப்பட நட்சத்திரங்களை வைத்து விளம்பரங்கள் தயாரிப்பது குறித்து, அப்போது இறுதி முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.

அதே நேரத்தில், தற்போது போலீசாரின் கெடுபிடிகள் குறைந்துள்ளதால் சபரிமலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். “சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதமான அப்பம், அரவணை விற்பனை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. கோயில் நடை திறக்கப்பட்ட முதல் வாரத்தில் விற்பனை மிக மந்தமாக இருந்தது. கடந்த சனிக்கிழமை மாலை வரை 75,000 பக்தர்கள் கோயிலுக்கு வந்துள்ளனர். வெள்ளிக்கிழமை வரை இந்த எண்ணிக்கை 61,000 ஆக இருந்தது. அதாவது, பக்தர்கள் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவது தெரிகிறது” என்று கூறினார்.

அதே நேரத்தில், கேரள மாநிலத்தில் இருந்து அல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகா, ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தான் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்றும் அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018