மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

சிறப்புப் பார்வை: சபரிமலை தீர்ப்பினால் பாஜக கை ஓங்குகிறதா?

சிறப்புப் பார்வை: சபரிமலை தீர்ப்பினால் பாஜக கை ஓங்குகிறதா?

உதய் பாடகலிங்கம்

சபரிமலையில் தற்போது நடைபெற்றுவரும் போராட்டங்களினால் கேரளத்தில் பாஜகவுக்கு ஆதரவான அலை எழுந்துள்ளதா? இந்த கேள்வியை நேரடியாகவும் மறைமுகமாகவும் எழுப்பும் போக்கு ஊடகங்களில் பெருகிவருகிறது. சமீபத்தில் அம்மாநிலத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை முன்னிறுத்தி, இதை நிறுவும் போக்கும் தொடங்கியுள்ளது.

27 பஞ்சாயத்து வார்டுகள், 5 பிளாக் பஞ்சாயத்து வார்டுகள், 6 நகராட்சி வார்டுகள், 1 மாநகராட்சி வார்டில் கடந்த வாரம் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 39 வார்டுகளுக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் 21 இடங்களையும், காங்கிரஸ் 12 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இதர இடங்களில் 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது பாஜக. இந்த நிலையில் உள்ளாட்சிக்கான இடைத் தேர்தல் நடைபெற்று, அதில் பாஜக எழுச்சி பெற்றதாகக் கூறிவருகின்றனர் அக்கட்சியினர்.

சபரிமலை போராட்டம் முன்னெடுக்கப்படும் பத்தினம்திட்டா மாவட்டத்தில் ஓரிடத்தில்கூட பாஜக வெற்றி பெறவில்லை. சபரிமலை கோயிலில் அரசுக்கு எதிராகக் குரலெழுப்பிவரும் பந்தளம் ராஜா குடும்பத்தினரும் இதே பகுதியில்தான் வசித்து வருகின்றனர். இந்தத் தேர்தலுக்கு முன்னதாக, சபரிமலை போராட்டத்தை ஆதரித்து கருத்து தெரிவித்திருந்தார் பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா. பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சபரிமலை பாரம்பரியத்தைக் காக்க முனைவதாகக் கூறினார். ஆனால், தேர்தலில் அந்த முடிவு விஸ்வரூப தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதுவே, சபரிமலை போராட்டத்துக்கு முன்னும் பின்னும் உள்ள கேரள பாஜகவின் நிலை குறித்த ஆய்வுகளுக்கு வழிவகுக்கிறது.

தீர்ப்பு எழுதிய முன்னுரை

கடந்த செப்டம்பர் 28ஆம் தேதியன்று, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோதே, பாஜக இந்த விவகாரத்தின் மூலமாக ஆதாயம் தேடுவதற்கான முன்னுரை எழுதப்பட்டுவிட்டது என்றனர் அரசியல் விமர்சகர்கள். அதற்கடுத்த நாட்களில் அது மெல்ல மெல்ல வெளிப்பட்டது.

இந்த வழக்கு தீர்ப்பை நோக்கி நகர்ந்தபோது, கேரளாவிலுள்ள மார்க்சிஸ்ட் அரசும் திருவாங்கூர் தேவசம் போர்டும் தங்களது நிலைப்பாடுகளைத் தனித்தனியாகத் தெரிவித்தன. நீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தது கேரள மாநில அரசு. மாதவிடாய்க் காலத்தில் பெண்களை அனுமதிப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது என்றும், மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்றும் வாதிட்டது தேவசம் போர்டு. இந்தக் காலகட்டத்தில் கேரள பாஜகவைச் சேர்ந்த தலைவர்களோ, தொண்டர்களோ எந்தவிதக் கருத்தையும் வெளியிடவில்லை. அதேநேரத்தில், மதச் சடங்குகளை மீறக் கூடாது என்ற கருத்தை அவ்வப்போது வெளியிட்டுவந்தது.

ஆதரவு எதிர்ப்பானது!

உண்மையில், ஒருகாலத்தில் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டுமென்ற கருத்தை உரக்க எழுப்பியதும் பாஜக தான். தீர்ப்பு வெளியானதும், அதை வரவேற்றுக் கருத்து தெரிவித்தார் ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் பைய்யாஜி ஜோஷி. இது சங் பரிவார் மற்றும் கேரள பாஜகவினரின் கருத்துக்கு எதிரானதாக இருந்தது. அக்டோபர் 2ஆம் தேதியன்று, கேரளாவில் இந்தத் தீர்ப்புக்கு எதிராக வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் இறங்கும் வரை அவரது கருத்தில் எந்த மாற்றமுமில்லை. அதன்பின், எல்லோரையும் போல அவரும் பாரம்பரியத்துக்கு மதிப்பளிக்கத் தொடங்கினார். அதன்பின், மாதவிடாய் பருவத்தை எதிர்கொள்ளும் பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிப்பது பல்லாண்டு காலப் பாரம்பரியத்துக்கு எதிரானது என்றார் பைய்யாஜி ஜோஷி.

தீர்ப்பு வெளியானதுமே, அதனை அமல்படுத்தும் பணிகளை மாநில அரசு மேற்கொள்ளும் என்றார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து கேரள தேவசம் போர்டு உறுப்பினர்களுடன் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார் அதன் தலைவர் பத்மகுமார். ஆனால், கேரள முதலமைச்சருடன் விவாதித்த பிறகு அவரது முடிவு மாறிப்போனது. தாங்கள் எந்த விதத்திலும் இதில் தலையிடப் போவதில்லை என்றார்.

அதன் பின், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம், கேரள பிராமணர்கள் சங்கம் உட்பட 19 அமைப்புகளின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்த விசாரணை வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம். பாஜகவின் சார்பிலோ, சங் பரிவார் சார்பிலோ, நேரடியாக எந்த மனுக்களும் தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளும் அமைப்புகளும் முதலில் இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் களமிறங்கின. சபரிமலைக்குச் செல்ல எத்தனித்த பெண்களின் மனதை மாற்ற முயன்றன.

ஆதரவு தந்த பாஜக

கடந்த அக்டோபர் 17, நவம்பர் 5 ஆகிய தேதிகளில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது, அங்கு செல்ல முயற்சி செய்த பெண்களைத் தடுத்து நிறுத்தினர் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இதனால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் செல்லவில்லை என்ற நிலை ஏற்பட்டது. நிலக்கல், பம்பை, சபரிமலை சன்னிதானப் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வீடியோ எடுத்தனர் கேரள போலீசார். இதன் மூலமாக, அவர்களது புகைப்படங்கள் தனித்தனியாகச் சேகரிக்கப்பட்டன. சுமார் 1,400 பேர் வரை கைது செய்யப்பட்டனர். நிலக்கல், பம்பை வட்டாரப் பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட வழக்குகள் இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டன. அதுவரை வலதுசாரி அமைப்புகளின் போராட்டத்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டையே கொண்டிருந்தது பாஜக.

களத்தில் இறங்கிய நேரம்

மூன்றாவது முறையாக மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காகக் கடந்த நவம்பர் 16ஆம் தேதியன்று சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டபோது, நேரடியாகக் களத்தில் குதித்தது பாஜக. நவம்பர் 17ஆம் தேதியன்று பூமாதா அமைப்பின் நிறுவனர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் திருப்தி தேசாய், ஆறு பெண்களுடன் சபரிமலைக்குச் செல்ல முயன்றார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொச்சி விமான நிலையத்தை விட்டு அவர் வெளியேறாமல் தடுக்கும் வகையில் ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம், சபரிமலை கர்ம சமிதி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் கொச்சி விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லாமல், அப்படியே புனே திரும்பினார் திருப்தி.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், சபரிமலை தீர்ப்பை அமல்படுத்த மேலும் கால அவகாசம் கேட்டு மனு செய்யும் முடிவை மேற்கொண்டதாக அறிவித்தார் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார். இந்த விவகாரத்தில் மாநில அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று தெரிவித்தார் கேரள பாஜகவைச் சேர்ந்த சுரேந்திரன். இரண்டு நாட்கள் கழித்து, நவம்பர் 18ஆம் தேதியன்று தடையை மீறிச் செல்ல முயன்றபோது சுரேந்திரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர் போலீசார். ஜாமீனில் வெளியே வரமுடியாதபடி, அவரை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கேரளா முழுவதும் பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அடுத்தடுத்து விசிட்

அதன் பின் எந்தவிதப் போராட்டங்களையும் பாஜக முன்னெடுக்கவில்லையே என்ற எண்ணம் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்த நேரத்தில், நவம்பர் 19ஆம் தேதியன்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் நிலக்கல் பகுதிக்குச் சென்றார். சபரிமலை வட்டாரத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட, ஐயப்ப பக்தர்கள் தீவிரவாதிகள் அல்லவே என்றார். ஒரே இடத்தில் 15,000 போலீசார் குவிக்கக் காரணம் என்னவென்று கேள்வி எழுப்பினார்.

அதற்கடுத்த நாள் கேரள எம்.பி. முரளிதரன் அங்கு சென்றார். அதற்கடுத்த நாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலை கோயிலுக்குச் சென்றுவந்தார். இவற்றை வெறுமனே தற்செயலான நிகழ்ச்சிகளாகக் கருதக் கூடாது என்பதற்காகவே, அவை அடுத்தடுத்த நாட்களில் நடந்தது என்பதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

சபரிமலை தீர்ப்புக்கு முன், பின் என்று கூறும் அளவுக்குக் கேரளாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது பாஜக. அதன் ஒரு பகுதியாகவே, உள்ளாட்சித் தேர்தலில் பாஜக எழுச்சி பெற்றதாக அக்கட்சியினர் கூறுவதும் அடங்கும்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018