மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 டிச 2018

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சஹா ஃபண்ட் (அங்கிதா வசிஸ்தா)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சஹா ஃபண்ட் (அங்கிதா வசிஸ்தா)

வாரா வாரம் புதுப்புது தொழில்முனைவோரையும், அவர்கள் கண்ட வெற்றியையும் சண்டே சக்சஸ் ஸ்டோரியில் கண்டு வருகிறோம். இந்த வாரம் தொழில் துறையிலும், முதலீட்டுத் துறையிலும் பாலின சமத்துவத்துக்காகச் செயல்பட்டு வரும் சஹா ஃபண்ட் துணை நிறுவனர் அங்கிதா வசிஸ்தாவைக் குறித்துக் காணலாம்.

எம்எஸ்ஆர் தொழில்நுட்பக் கல்லூரியின் எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் பட்டதாரியான இவர், லண்டன் கிரான்ஃபீல்டு மேனேஜ்மெண்ட் பள்ளியில் முதுநிலைப் படிப்பில் நிதி மேலாண்மைப் பிரிவில் கல்வி பயின்றவர். சிக்கல் நிறைந்த வெஞ்சர் கேப்பிடல் துறையில் கால் பதித்த முதல் இந்தியப் பெண்மணி. இவரது சஹா ஃபண்ட், துணிகர மூலதனத் துறையில் பெண்ணால் தொடங்கப்பட்ட முதல் ஆசிய நிறுவனமாகும்.

பொதுவாகவே முதலீட்டுத் துறையில் ஆண்கள்தான் ஆதிக்கம் செலுத்துவர். அதிலும் இந்தியா போன்ற மந்தமான சமூக வளர்ச்சியைக் கொண்ட நாட்டில் பல்வேறு சூழலால், ஆண்களைக் கேள்வி கேட்கும் தன்மையைச் சமூகம் அனுமதிக்காத காரணத்தால் பெண்களின் பங்கேற்பு குறைவாகத்தான் இருக்கும். இந்த நிலையை மாற்ற முயன்று, பெண்களை மையப்படுத்திய தொழில் துறை அமைப்பை உருவாக்கத் தீவிரப் பங்காற்றி வருகிறார் அங்கிதா.

தனது படிப்புகளை முடித்துவிட்டு, லண்டன் ஆரோஸ் கேப்பிடல் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கினார். அந்நிறுவனத்தில் உலகளாவிய நிதி மேலாண்மைக் குழு, முதலீட்டாளர்கள் குழு போன்ற தளங்களில் ஈடுபட்டு வந்தார். அதன் பின்னர் எஸ்பிள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியைத் தொடர்ந்த அங்கிதா, முதலீட்டுத் துறையில் தவிர்க்க முடியாத பெண்மணியாக உருவாகியுள்ளார். தலோன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தில் பணிபுரியும்போது முதலீடு தொடர்பான அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டார். மேலும், தனது பணிக் காலங்களில் இந்தியா, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகளில் இயங்கிவரும் பல்வேறு நிதி நிறுவனங்களோடு இணைந்து சவால்கள் நிறைந்த துணிகர மூலதனத் துறையில் எட்டு வருடங்கள் துணிவோடு செயல்பட்டு வந்தார்.

தன்னுடைய பணிக் காலங்களின்போது பங்கேற்கும் கூட்டங்களிலும், கருத்தரங்கத்திலும் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருப்பதையும், தொழில்முனைவில் பெண்கள் ஆர்வம்காட்டத் தயங்குவதையும் கவனித்தார். மேலும், பெண்களால் முன்னெடுக்கப்படும் நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைத் தவிர்ப்பதையும், சில பெண் முதலீட்டாளர்களே இத்தகைய நிறுவனத்தில் முதலீட்டைச் செலுத்த விரும்பாததையும் உணர்ந்தார்.

பொதுவாக முதலீட்டாளர்கள் ஆண்களாக இருப்பதால், அவர்களின் கேள்விகளுக்குப் பெண்கள் பதில் சொல்லத் தயங்குவதையும் இவர் கவனிக்கத் தவறவில்லை. தொழில் மற்றும் முதலீட்டுத் துறையில் ஆண்களின் ஆதிக்கத்தால்தான் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது; ஆண்களால் பெண்களின் குரலை ஒடுக்க மட்டும்தான் முடியும் என்பதை வெகுவாக உணர்ந்த அங்கிதா, பெண்கள் முதலீட்டாளராகவும், தொழில்முனைவோராகவும், ஒரு நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பாத்திரத்தில் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தார்.

முதலீடு செய்யவே பலர் தயங்கும்போது, பெண்களை ஊக்குவிப்பது எப்படி என்று யோசிக்கும்போது, தானே ஒரு முதலீடு நிறுவனத்தைத் தொடங்கிவிட்டால் என்ன என்ற முடிவுக்கு வந்தார். தனது தொழில்சார் நண்பரான உஷாவை இணைத்து முதலீட்டுத் துறையில் தனக்கிருக்கும் எட்டாண்டுகள் அனுபவத்தின் மூலம் “சஹா ஃபண்ட்” என்ற பெயரில் தனது நிறுவனத்தை 2015 அக்டோபரில் தொடங்கினார். சவால் நிறைந்த துணிகர மூலதனத் துறையில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்து புதிய நிறுவனத்தைத் தொடங்கி மிகத் துணிச்சலாகத் தனது காலடியை எடுத்து வைத்தார்.

சஹா ஃபண்ட் தொடங்கப்பட்டபோது டிஜிட்டல் சுகாதாரத் துறையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது. அப்போது இந்தியாவின் டிஜிட்டல் சுகாதாரம், அந்நிய முதலீடுகளால் வளர்ந்து வந்தபோதும் சஹா ஃபண்ட்ஸின் பங்களிப்பு மறுக்க முடியாத அளவுக்கு வளர்ந்தது. 2015ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டு அதன் முதலீடு 200 கோடி டாலராக உயர்ந்தது. இதன் பிறகு அங்கிதா இ-காமர்ஸ், மொபைல் துறை, ஆராய்ச்சி மற்றும் கல்வி போன்ற துறைகளில் முதலீடு செய்து தனது வளர்ச்சியை உச்சி முகர்ந்தார்.

புதிய முயற்சிகளும், தன்னம்பிக்கையும் உள்ள பெண்களுக்கு சஹா ஃபண்ட் உதவத் தயாராகியுள்ளது. இதன் முழுக் கவனமும் பெண் நிர்வகிக்கும் நிறுவனங்கள் மீதுதான் இருக்கிறது. எவ்வளவு தூரம் இவர் வளர்ந்து வந்தாலும், தன்னுடைய பார்வையை மாற்றிக்கொள்ளாமல் பெண்கள் முன்னேற நிதி தேவைப்படும் வரையில் தான் இயங்கிக் கொண்டிருப்பேன் என்று தளராது, பெண்களின் சிந்தனைகளை அறிந்து அவர்களை ஊக்குவித்து ஆதரித்து வருகிறார். துணிகர மூலதனத் துறையில் நிதி நிறுவனம் தொடங்கிய ஆசியாவின் முதல் பெண்மணி என்ற பெருமையையும் அங்கிதா பெற்றிருக்கிறார்.

ஜெடி நிறுவனம் 2015ஆம் ஆண்டு நடத்திய “பெண் தொழில்முனைவோர் குறியீடு” ஆய்வில், மொத்தம் 77 நாடுகளில் 70ஆவது இடத்தையே இந்தியா பிடித்திருந்தது. இந்தப் பட்டியலில் இந்தியா 25.3 விழுக்காட்டை மட்டுமே பெற்றிருந்தது. ஆனால், 2017ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில், 137 நாடுகளில் இந்தியாவுக்கு 68ஆவது இடம் கிடைத்திருக்கிறது. இந்த முறை இந்தியாவின் மதிப்பெண் 28.4 விழுக்காடாக உயர்ந்துள்ளதென அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

சஹா ஃபண்ட் நிறுவனம் முதன்முதலில் 1.5 மில்லியன் டாலரை முதலீடு செய்தது. இதில் 75 சதவிகிதம் இந்தியாவிலும், 25 சதவிகிதம் வெளிநாட்டிலும் முதலீடு செய்யப்பட்டது. தற்போது வரையில் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரையில் பெண்கள் முன்னெடுக்கும் நிறுவனங்களின் மீது தொடர்ந்து முதலீடு செய்து பெண்கள் மைய நிர்வாக அமைப்பை உருவாக்குவதில் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் அங்கிதா.

முதலீட்டுத் துறையிலும், தொழில் முனைவுத் துறையிலும் பெண்களை மையப்படுத்திய அமைப்பு உருவாக வேண்டும்; பெண்கள் குறைவாக இருக்கும் இத்துறைகளில் அவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகப்படுத்தி, சமத்துவ பாலினத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதிலும் சஹா ஃபண்ட் முன் நிற்கும் எனத் தனது நிறுவனத்தின் குறிக்கோளைத் தெளிவாக இவர் விளக்குகிறார். தொழிலாளர் பங்கேற்பு நிலைகளில் மிகப்பெரிய பாலினப் பாகுபாட்டைக் கொண்டிருக்கும் இந்தியாவிலிருந்து ஒரு பெண், நிதி சேவைகள் துறையில் மிகப் பெரிய உயரத்தை எட்டியிருக்கிறார் என்பதால் இந்தியப் பெண் தொழில்முனைவோர்களுக்கு இவர் மிகப்பெரிய எடுத்துக்காட்டு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

தொகுப்பு: விடுதலை தமிழ்முரசு

சென்ற வார சண்டே சக்சஸ் ஸ்டோரி : சோமசுந்தரம் (ஹெச்.சி.ஆர்கானிக்)

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

ஞாயிறு 2 டிச 2018