மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 டிச 2018

சினி டிஜிட்டல் திண்ணை: ஆட்டத்தில் இல்லாத ரஜினி - விஜய்!

சினி டிஜிட்டல் திண்ணை: ஆட்டத்தில் இல்லாத ரஜினி - விஜய்!

டேட்டா ஆன் செய்ததும் மளமளவென வந்த மெஸேஜ்களை ஓரம்தள்ளிவிட்டு முதலில் வாட்ஸ் அப்பைத் தேடிச் சென்றது ஃபேஸ்புக். கடந்த வாரம் ரஜினி பற்றிய தகவலைச் சொல்ல, வாட்ஸ் அப் காத்திருந்ததை அறியாமல் சைன்அவுட் செய்ததை சினி டிஜிட்டல் திண்ணையில் படித்ததால் இந்த அவசரம். எதிர்பார்த்தது போலவே வாட்ஸ் அப் ஒரு மெஸேஜைப் போட்டு வைத்திருந்தது.

“ரஜினிக்கு அடுத்த படம் பேட்ட. ஆனால், அவருடைய கவலை எல்லாம் அதற்கடுத்து முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தைப் பற்றியது தான். ரஜினி படம் என்றாலே பிரச்சினை வரும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால், கதைத் திருட்டு விவகாரத்தில் சிக்கியதால் வழக்கத்தைவிட அந்தப் படத்துக்கு கெடுபிடிகள் அதிகமிருக்கும் என சினிமா வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தான் சர்கார் பிரச்சினையின்போது, ‘நம்ம படத்துக்கு எந்தப் பிரச்சினையும் வந்துடாதுல்ல’ என ரஜினி தரப்பிலிருந்து கேட்கப்பட்டிருக்கிறது. இதுதான் முருகதாஸை வெளியே வந்து பதில் சொல்ல வைத்ததும்கூட. சர்கார் பிரச்சினையின்போது சன் பிக்சர்ஸின் புரமோஷனை உடைக்க லைகா முயன்றதுபோல, லைகாவின் புரமோஷனில் சன் பிக்சர்ஸும் கற்களை வீசி வருகிறது. பேட்ட திரைப்படத்தின் புரமோஷனை, பட ரிலீஸுக்கு 30 நாட்களுக்கும் மேலாக இருக்கும்போதே தொடங்கிவிட்டது சன் பிக்சர்ஸ்” என்று வாட்ஸ் அப் அனுப்பிய தகவலை ஷேர் செய்துவிட்டு ஃபேஸ்புக் டைப் செய்யத் தொடங்கியது.

“லைகாவுக்கு 2.0 படத்தில் முதலீடு செய்த பணத்தைவிடவும், தியேட்டர்களைப் பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட அனைத்தும் சொதப்பியதுதான் பிரச்சினை. 3D தரத்தில் 2.0 ரிலீஸ் செய்து கல்லா கட்ட வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களை நினைக்க வைத்தது லைகா. ஆனால், அடுத்த 3D படத்துக்கு எங்கே செல்வீர்கள் என்ற கேள்வியும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டதால் தியேட்டர் உரிமையாளர்கள் பின்வாங்கினார்கள். மெட்ராஸ் படத்தில் சுவர் பிடிப்பது என்பார்களே; அதுபோலவே தியேட்டர்களைப் பிடிக்க நினைத்தது லைகா. தமிழ்நாட்டிலுள்ள தியேட்டர்களில் 3D அமைக்க 5 லட்சம் வரையில் கடன் கொடுத்து தியேட்டர் உரிமையாளர்களைத் தன்வசப்படுத்த நினைத்தது. அதன்பின் வெளிநாட்டில் உருவாகும் 3D படங்களையும் லைகா சார்பில் தமிழகத்தின் அனைத்து மூலைகளுக்கும் கொண்டுவருவதாகக் கூறியது. ஆனால், இதற்கு மசியவில்லை தியேட்டர் உரிமையாளர்கள். நினைத்ததுபோல நடந்திருந்தால், அனைத்து தியேட்டர்களும் லைகாவின் வசத்துக்குச் சென்றிருக்கும். அதன்பின் எந்தத் தியேட்டரில் எந்தப் படம் ஓட வேண்டும் என்ற முடிவையும் லைகா போன்ற நிறுவனம் எடுத்திருக்கும். இந்த நிலைக்கு வந்துவிடக் கூடாது என தியேட்டர் உரிமையாளர்கள் எடுத்த முடிவினால், லைகாவின் திட்டம் தவிடுபொடியானது. ரஜினியின் படம் என்ற இமேஜுக்குக்கூட தியேட்டர் உரிமையாளர்கள் மசியாததாலும், 2.0 வியாபாரத்தில் அவர்கள் காட்டிய கெடுபிடியினாலும் ரஜினியின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் முடிவைக் கைவிட்டது சன் பிக்சர்ஸ். முருகதாஸ் ரஜினி இணையும் படத்தைத் தயாரிப்பதிலிருந்து சன் பிக்சர்ஸ் ஒதுங்கிவிட, அந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் கையிலெடுத்திருக்கிறது. மார்கெட்டின் டாப்பில் இருக்கும் நடிகர் ரஜினியா, விஜய்யா என்ற விவாதம் மட்டுமே மக்களுக்குத் தெரியும்படி விவாதங்களை நடத்த வைத்துவிட்டு, அவற்றுக்குப் பின்னால் இருந்துகொண்டு ஆட்டுவிக்கும் சக்திகள் யார் என்பதை சர்கார் - 2.0 - பேட்ட - ரஜினி, முருகதாஸ் இணையும் திரைப்படம் ஆகியவற்றின் மூலமாகவே சுலபமாக தெரிந்துகொள்ளலாம்” என்று ஃபேஸ்புக் போட்ட போஸ்டுக்கு லைக் போட்டு ஷேர் செய்தது வாட்ஸ் அப்.

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

ஞாயிறு 2 டிச 2018