மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 டிச 2018

மகளிர் ஆணையத்துக்கு கைது அதிகாரம்!

மகளிர் ஆணையத்துக்கு கைது அதிகாரம்!

மத நிறுவனங்களில் பெண்களுக்கான பாலியல் பிரச்சினைகள் குறித்துப் புகார் தெரிவிப்பதற்கான உள் புகார் குழுக்கள் அமைக்கப்படவில்லை என்றும், கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்கார விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பிராங்கோ முலக்கலைப் பெருமைப்படுத்தும் விதத்தில் கத்தோலிக்க தேவாலய நிர்வாகம் செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார் தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மா.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பிஷப் ஆக இருந்துவந்த பிராங்கோ முலக்கல், 2014ஆம் ஆண்டு மே மாதம் குருவிளங்காடு விருந்தினர் மாளிகையில் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம்சாட்டினார் கோட்டயத்தைச் சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி. அதன்பின் பலமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, கடந்த செப்டம்பர் மாதம் கொச்சி நீதிமன்றத்தின் எதிரே சில கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், செப்டம்பர் 21ஆம் தேதியன்று இந்த வழக்கில் பிராங்கோ முலக்கலைக் கைது செய்தனர் கேரள போலீசார்.

கடந்த அக்டோபர் 15ஆம் தேதியன்று, போலீசாரின் விசாரணையில் ஆஜராவதைத் தவிர வேறு விஷயங்களுக்காக கேரளாவுக்குள் நுழையக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம். இதன்பின் ஒரு வாரம் கழித்து, இந்த வழக்கின் முக்கிய சாட்சியான பாதிரியார் குரியகோஸ் கட்டுதரா சூசயா தேவாலயத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.

மகளிர் ஆணையம் ஆய்வு

கன்னியாஸ்திரியை பாலியல் புகார் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மா ஆய்வு செய்தார். இதன்பின், நேற்று (டிசம்பர் 1) அவர் கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கத்தோலிக்க தேவாலய நிர்வாகம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் ஆர்வம்காட்டவில்லை என்று குற்றம்சாட்டினார். இது தொடர்பாக என்டிடிவி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

“தேவாலயங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்கும் வகையில் உள் புகார் குழுக்கள் அமைக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சென்று புகார் தெரிவிக்க, அங்கு எந்தத் தனிநபரும் இல்லை. பெண்கள் புகார் செய்யும் வகையில் உள் புகார் குழுக்களை அமைக்குமாறு தேவாலய நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், இதுவரை அப்படி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை” என்று அவர் கூறினார்.

தேவாலயங்களில் பெண்கள்

எல்லா மத நிறுவனங்களிலும் அங்கு பணிபுரியும் பெண்கள் பாலியல் பாதிப்புகளுக்கு ஆளானால் புகார் தெரிவிக்கும் வகையில், விசாகா எனும் உள் புகார் குழுக்கள் அமைக்கப்பட வேண்டுமென்று தன் பேச்சில் குறிப்பிட்டார்.

“எல்லா மத நிறுவனங்களிலும் இந்த குழு அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக, அதிகளவில் பெண்கள் கன்னியாஸ்திரியைகளாகப் பணிபுரியும் தேவாலயங்களில் அமைக்கப்பட வேண்டும். கோயில்களிலோ, இதர மத நிறுவனங்களிலோ இந்த அளவுக்குப் பெண்கள் பணியாற்றவில்லை. ஆனால், கிறிஸ்துவத்தைப் பொறுத்தவரை, தேவாலயங்களில் நிலைமை அப்படியில்லை” என்று கூறினார். அது மட்டுமல்லாமல், விசாரணைக்காகச் சென்றபோது தேவாலய நிர்வாகத்தில் உள்ளவர்கள் பிராங்கோ முலக்கலைப் பெருமைப்படுத்தும்விதமாகப் பேசியதாகவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு அளிக்க மறுப்பு

கோட்டயத்தில் உள்ள தேவாலய நிர்வாகம், புகார் தெரிவித்த கன்னியாஸ்திரிக்குப் பாதுகாப்பு வழங்கத் தயாராகவில்லை. மாறாக, அவரை அரசு காப்பகத்துக்கு அனுப்புமாறு போலீசாரை வற்புறுத்தியதாகத் தகவல் வெளியானது. இது பற்றிப் பேசிய ரேகா சர்மா, “இப்படித்தான் நமது மத நிறுவனங்கள் பெண்களுக்கு எதிராக இயங்குகின்றன” என்றார்.

எம்.எல்.ஏ.வைக் கைது செய்யும் அதிகாரம்

சமீபத்தில் பிராங்கோ முலக்கல் மீது புகார் தெரிவித்த கன்னியாஸ்திரியை இழிவுபடுத்தும் நோக்கில் கருத்துகளை வெளியிட்டார் கேரள சட்டமன்ற உறுப்பினர் பி.சி.ஜார்ஜ். தேசிய மகளிர் ஆணையம், அவரை விசாரணையில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. ஆனால், உடல்நிலைக் குறைவு காரணமாக ஆஜராக முடியவில்லை என்று தனது வழக்கறிஞர் மூலமாகத் தகவல் அனுப்பியதாகத் தெரிவித்தார் ரேகா சர்மா.

“வழக்கறிஞரின் பதிலில் எனக்குத் திருப்தி இல்லை இந்த விஷயத்தில் கேரள சட்டமன்ற சபாநாயகருக்குக் கடிதம் எழுதியுள்ளோம். அந்த எம்எல்ஏவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளோம்” என்று கூறினார். பி.சி.ஜார்ஜ் நேரடியாக வந்து வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று விரும்புவதாகவும் தன் பேச்சில் குறிப்பிட்டார். “அவரைக் கைது செய்யும் அதிகாரம் கூட எங்களுக்கு உள்ளது. தேசிய மகளிர் ஆணையம் என்பது எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கு மேலானது” என்று கூறினார் ரேகா சர்மா.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

ஞாயிறு 2 டிச 2018