மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 டிச 2018

விபத்தில் மரணம்: உடன்பிறந்தவர்களுக்கு இழப்பீடு!

விபத்தில் மரணம்: உடன்பிறந்தவர்களுக்கு இழப்பீடு!

மோட்டார் வாகன விபத்தில் மரணமடைந்தவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாதபட்சத்தில் உடன்பிறந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

வேலூரைச் சேர்ந்த கணபதி கல்குவாரியில் தொழிலாளியாக இருந்து வந்தார். 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் லாரி விபத்தில் சிக்கி கணபதி பலியானார். சகோதரர் மரணத்துக்கு இழப்பீடாக 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமென்று கோரி, கணபதியின் சகோதரி மல்லிகா வழக்கு தொடர்ந்தார். 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்த வழக்கை வேலூர் விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மல்லிகா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு, நேற்று (டிசம்பர் 1) நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கணபதியின் வாரிசு என்பதற்கான எந்த ஆதாரத்தையும் தீர்ப்பாயத்தில் மல்லிகா தாக்கல் செய்யவில்லை என்பதால் இழப்பீடு கோர முடியாது என்று யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது.

திருமணமாகாத கணபதிக்கு நேரடி வாரிசு இல்லாத நிலையில் மல்லிகாவை வாரிசு என்று குறிப்பிட தாசில்தார் மறுத்துவிட்டதால், மல்லிகாவுக்கு இழப்பீடு கோர உரிமையில்லை என கூற முடியாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முரளிதரன், குஜராத்தைச் சேர்ந்த ராமன்பாய், பிரபாத்பாய் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டினார். “ஒரே குடும்பத்தில் அண்ணன், தங்கை, குழந்தைகள் ஒன்றாக வசிக்கும்போது குடும்பத்தைக் காப்பாற்றியவர் விபத்தில் பலியானால், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இழப்பீடு தர மறுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்பதைச் சுட்டிக்காட்டினார். கணபதிக்கு வாரிசாக மல்லிகாவைத்தான் கருத வேண்டுமென்று தெளிவுபடுத்தி, வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

விபத்தில் பலியான கணபதிக்கான இழப்பீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாயை, வழக்கு தொடர்ந்த தேதியிலிருந்து 7.5 சதவிகித வட்டியுடன் 8 வாரக் காலத்தில் அவரது சகோதரி மல்லிகாவிடம் வழங்க வேண்டுமென்று யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார் நீதிபதி முரளிதரன்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

ஞாயிறு 2 டிச 2018