மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 டிச 2018

படைப்பாளியின் குரல்: தமிழ்நாட்டுக்கு இந்தப் படம் பிடிக்கும்!

படைப்பாளியின் குரல்: தமிழ்நாட்டுக்கு இந்தப் படம் பிடிக்கும்!

பாரனே (PAARANE) திரைப்பட இயக்குநர் ஸ்ரீலேஷ் நேர்காணல்

சந்திப்பு: முத்துராசா குமார்

(கேரளாவின் வயநாட்டில் பிறந்து வளர்ந்து தற்போது பெங்களூரில் வசித்துவரும் ஸ்ரீலேஷ் என்ற இளைஞர் மூன்று லட்சம் ரூபாய் தயாரிப்பு செலவில், பதினைந்தே நாட்களில் ‘பாரனே’ (PAARANE) என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இதழியல் படிப்பைப் பயின்றுள்ள ஸ்ரீலேஷ் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் துணை இயக்குநராகவும், திரைக்கதை, வசனத் துறைகளிலும் பணிபுரிந்திருக்கிறார். 112 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தத் திரைப்படம் தென்கர்நாடகாவின் குடகு பகுதிகளில் பேசப்படும் ‘கொடவா’ (KODAVA) மொழியில் எடுக்கப்பட்டுள்ளது. பூர்வீக மக்களின் நில அரசியலையும், அடையாளச் சிக்கல்களையும் பற்றிப் பேசும் ‘பாரனே’ பல சர்வேதேசத் திரைப்பட விழாக்களில் தேர்வாகிவருகிறது. படத்தை உள்ளூரில் வெளியிடும் வேலைகளில் இருக்கும் இயக்குநர் ஸ்ரீலேஷிடம் பேசியதிலிருந்து...)

‘பாரனே’ திரைப்படம் எதைச் சொல்லுகிறது? படத்துக்கான உந்துதல் எங்கு கிடைத்தது?

இன்றைக்கு இந்தியா முழுவதும் அவரவர் நிலங்களில் இருக்கக்கூடிய பூர்வீக மக்களிடம் நிலவக்கூடிய பிரச்சினைகளில் முக்கியமானது அவர்களின் நிலம் சார்ந்த உரிமையும், அடையாளச் சிக்கலும்தான். நாம் வாழும் நிலத்தின் அடையாளங்களை அழித்துவிட்டால் நாம் வாழ்ந்தும் அர்த்தமில்லை.

கேரளா - கர்நாடகா எல்லைப் பகுதியில் இருக்கும் ‘பாரனே’ என்ற கிராமத்தில் வசிக்கும் சொந்த நில மக்களின் அடையாள முரண்கள் பற்றியும் வெளிதாக்கங்களில் இருந்து அந்த நிலத்தை அவர்கள் காப்பது பற்றியும்தான் இந்தப் படம் பேச முயலுகிறது.

இயக்குநர் சனல்குமார் சசிதரனின் ‘ஒழிவுதிவசத்தே களி’ திரைப்படம் வந்த பிறகுதான், ‘பாரனே’வை எடுக்கச்சொல்லிய தூண்டுதல் எனக்குள் வந்தது.

‘கொடவா’ மொழியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நடித்தவர்கள் பற்றிச் சொல்லுங்கள்.

இந்தப் படத்தில் நடித்தவர்கள் யாருமே தொழில்முறை நடிகர்கள் கிடையாது. குடகு பகுதிகளில் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற முகங்களைத் தேடிப்பார்த்து அவர்களிடம் படத்தைப் பற்றி எடுத்துச் சொன்னோம். தினமும் வெவ்வேறு வேலைகளுக்கு ஓடும் அவர்கள், ஆரம்பத்தில் எங்களை நம்பவில்லை. நன்றாக யோசித்து எங்கள்மீது நம்பிக்கை வைத்த பிறகுதான், முப்பத்தியாறு நாட்கள் நடிப்புப் பயிற்சிகளுக்குப் பின் படப்பிடிப்பைத் தொடங்கினோம். அந்த மக்களை கேமரா முன் கையாளுவது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.

குடகுவில் பாரனே கிராமத்தின் வாழ்க்கையைச் சொல்லும் இந்தக் கதையை வேறு எங்கும் போய் நான் எடுக்கவும் முடியாது, சொல்லவும் முடியாது. மேலும், அந்த நிலத்தின் சொந்த மொழியான கொடவாவிலேயே எடுப்பதுதான் சரியான ஒன்றாகவும் இருக்கும்.

படத்தின் தயாரிப்பு செலவுகள் பற்றிச் சொல்லுங்கள்.

பாரனேவை எடுத்து முடிப்பதற்கு மொத்தம் மூன்று லட்ச ரூபாய் ஆனது. படத்தின் தயாரிப்பாளர்கள் சிதேஷ் சி கோவிந்த், ரமேஷ் ஜனமட்டி ஆகியோர் பாரனேவின் மீது அதிகமான நம்பிக்கை வைத்து பணம் கொடுத்து உதவினார்கள். பல நேரங்களில் படத்தில் வேலை செய்த ஒவ்வொருவரும் சாப்பாடு, டீ, காபிகூட இல்லாமல் மிச்சம்பிடித்து மிகக் கடுமையாக உழைத்தனர். முடிந்த அளவு நேரத்தை வீணடிக்காமல் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.

படப்பிடிப்புகளில் எதிர்கொண்ட சிக்கல்கள்?

முன்கூட்டியே தெளிவான முடிவுகளோடும், திட்டங்களோடும்தான் களமிறங்கினோம். ‘நாம் இங்கு ஒன்று செய்ய வந்திருக்கிறோம். அதைச் சரியாக செய்து முடிக்க வேண்டும்’ என்று நாங்கள் எங்களுக்குள் அடிக்கடிச் சொல்லிக்கொண்டோம். ஒட்டுமொத்த குழுவின் எண்ணங்களும், திட்டங்களும் ஒத்துழைத்ததால் சிக்கல் ஏதும் வரவில்லை.

நில அரசியலையும், மக்களின் அசல் வாழ்வியலையும் சொல்ல நீங்கள் ஏன் சினிமா என்ற வடிவத்தைத் தேர்வு செய்தீர்கள்? அதனால் சமூகத்தில் மாற்றம் உண்டாகும் என்று நம்புகிறீர்களா?

சினிமா என்ற வடிவம்மீது எனக்கு அதிகமான நம்பிக்கை இருக்கிறது. நான் தனியாக நின்று நல்லது ஏதாவது சொன்னால், இன்றைக்கு யாரும் என்னைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அதுவே, இங்கு சினிமா என்ற கருவிமூலம் நான் சொல்லுகையில் அது அதிகமான மக்களுக்குப் போய் சேருகிறது. உண்மையாக உழைத்து ஒரு கதையை சினிமா மூலம் சொல்லும்போது சமூகத்தில் சிறு மாற்றமாவது உறுதியாக நிகழும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சமுதாயத்தில் பாரனே எவ்விதமான தாக்கத்தை உண்டு பண்ணும்?

இந்தப் படம் சமுதாயத்தில் என்ன தாக்கத்தை உண்டாக்கப் போகிறது என்பதைத் தாண்டி, குறைந்த பட்ஜெட்களில் இந்த மாதிரியான வாழ்வியல் சினிமாக்களை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை இன்றைய வளரும் இயக்குநர்களிடம் நிச்சயம் விதைக்கும். சமூகத்தின் முக்கிய அங்கமாகி இருக்கும் சினிமாத் துறையில் மாற்றங்கள் உண்டாகி சுயாதீன படங்கள் அதிகமாக வெளிவர ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

சுயாதீன திரைப்படங்கள் பொதுமக்களிடம் போய்ச் சேருகின்றனவா? இந்தப் படங்களுக்கு உண்டான சந்தையும் வரவேற்பும் போதுமான அளவு இருக்கிறதா?

கடந்த ஆறேழு வருடங்களில் சுயாதீன படங்களின் எண்ணிக்கையும் அதற்குண்டான வரவேற்புகளும் அதிகரித்துக்கொண்டுதான் வருகின்றன. திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவது ஒருபுறம் இருந்தாலும், நாம் நல்ல படங்களை உருவாக்கிவிட்டால், சந்தைகளையும் கடந்து அது பலவிதமான தளங்களின் வாயிலாக பொதுமக்களிடம் ஆழமாகப் போய்ச்சேருவதை இப்போது அதிகமாகப் பார்க்க முடிகிறது.

சுயாதீனத் திரைப்படங்களுக்கு சமூக வலைதளங்கள் எப்படியான பக்கபலமாக இருக்கின்றன?

படத்தை எடுப்பதற்கே மிகக்குறைந்த பணவசதிதான் இருக்கும். அவற்றுக்குப் பெரிய பெரிய விளம்பரங்கள் செய்வதற்கெல்லாம் பணம் இருக்காது. எனவே, சமூக வலைதளங்கள்தாம் மாற்றுப் படங்களை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரே ஊடகம். இன்று அவை மிகப்பெரிய உதவியாகவும் பக்கபலமாகவும் இருக்கின்றன. உலகம் தழுவிய மக்களிடம் நம் படங்களை எளிதாகக் கொண்டு செல்ல முடிகிறது.

பாரனேவைப் பற்றித் தமிழ்நாட்டில் என்ன சொல்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?

தமிழ் சினிமாவில் இப்போது நிறைய மாற்றுப் படங்கள் அதிகமாக வருகின்றன. அந்த நம்பிக்கையில் சொல்கிறேன், தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சினிமா இயக்குநர்களுக்கும், விமர்சகர்களுக்கும் ‘பாரனே’ உறுதியாகப் பிடிக்கும்.

இன்றைய அரசியல் சூழல்களில் ஆளும் அரசுகளே ‘வளர்ச்சி’ என்ற பெயரில் பூர்வகுடிகளை அவர்களின் நிலத்திலிருந்தே வெளியேற்றுவது பற்றி?

காலம்காலமாகச் சொந்த நிலத்தில் வாழ்ந்துவரும் மக்களின் நிலங்களை, வீடுகளை, உடைமைகளை அழித்து அவர்களை வெளியேற்றுவது எந்தவிதத்தில் நாட்டின் வளர்ச்சியாகும். இப்படியான வளர்ச்சிகள் யாருக்காகச் செய்து தரப்படுகின்றன? யாரின் பலன்களுக்காக இந்த வளர்ச்சித் திட்டங்கள்? சொந்த மக்களையே பாதிக்கும் இந்த அரசின் திட்டங்கள் வளர்ச்சிகள் அல்ல. இப்படி, அரசுகளே மக்களைத் துன்புறுத்துவதைப் பார்க்கையில் மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது.

வருங்காலத் திட்டங்கள்?

தவற்றைத் திருத்திக்கொண்டு இன்னும் சினிமாவை அதிகமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். குறைந்த செலவுகளில் நிறைய படங்கள் பண்ண வேண்டும். கான் திரைப்பட விழாதான் எனது ஆசையும் கனவும். அதற்கு என்னைத் தயார் செய்தபடி இருக்கிறேன். பெண்ணியம் சார்ந்த ஒரு கதையில் வேலை செய்துகொண்டிருக்கிறேன். அதற்குத் தயாரிப்பாளரையும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

ஞாயிறு 2 டிச 2018