மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 டிச 2018

சிறப்புக் கட்டுரை: பெண்ணின் உடல் யாருக்குச் சொந்தம்?

சிறப்புக் கட்டுரை: பெண்ணின் உடல் யாருக்குச் சொந்தம்?

சேது ராமலிங்கம்

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்னதாக நெதர்லாந்தைச் சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் தமிழகத்தில் பெண்களின் மகப்பேறு சார்ந்த உரிமைகள் தமிழகத்தில் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்திருந்தார். அவர் மேற்கொண்ட ஆய்வும் அதில் அவர் வந்தடைந்த முடிவுகளுக்குள் போகும்முன்னர், மகப்பேறு சார்ந்த பெண்களின் உரிமைகள் என்றால் என்பதைப் புரிந்துகொள்வோம்.

மகப்பேறு சார்ந்த உரிமைகள்

ஐநாவின் மகப்பேறு சார்ந்த உரிமைகள் (Reproductive Rights of Women) என்ற உடன்பாடு பெண்கள் விரும்பும்போது மட்டுமே உறவு கொள்ளும் உரிமை, கருத்தரிக்கும் உரிமை, கருக்கலைக்கும் உரிமை, குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை எனத் தனது உடல்மீது ஒரு பெண் கொள்ளக்கூடிய முழு உரிமைகளையும் அங்கீகரிக்கிறது. அது சட்டமாக்கப்பட்டுப் பல ஆண்டுகளாகி விட்டன. இந்த உரிமை குறித்து பெரும்பாலான பெண்களுக்கே தெரியாது. ஏனென்றால் ஆண் மையம் கொண்ட இந்தியச் சமூகத்தில் இவற்றை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

பெண்ணின் ஒழுக்கத்துக்கான வரையறை

தற்போதைய ஆய்விலிருந்தே தொடங்குவோம். தமிழகத்தில் செங்கல்பட்டு, மதுரை, நாகை ஆகிய சில மாவட்டங்களிலும் சென்னை, மதுரை, தஞ்சை அரசு மருத்துவமனைகளிலுள்ள மகப்பேறு மருத்துவமனைகளிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. செங்கல்பட்டில் உள்ள கிராமம் ஒன்றிலிருந்து ஆய்வைத் தொடங்கினோம். சமீபத்தில் திருமணமாகியிருந்த ஒரு பெண்ணிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. முன்பின் தெரியாத ஒருவரைத் திருமணம் செய்துகொண்டது குறித்து என்ன உணர்கிறீர்கள் என்று கேட்டோம். திருமணத்துக்குப் பின்னர் நடந்தது குறித்துப் பேசுமாறு ஊக்கமளித்தோம். நீண்ட நேரத் தயக்கத்துக்குப் பின்னர், அவர் தயங்கியபடியே தனக்கு நேர்ந்த அனுபவங்களைப் பேசினார். அவர் கூறியது எங்களுக்கே அதிர்ச்சியாக இருந்ததது. திருமண உறவில் நேரிட்ட வன்முறையை அழுதுகொண்டே பேசினார்.

திருமணம் முடிந்த மறுநாளே கணவரின் தாயாரும் அவரின் உறவுப் பெண்களும் அவரது உடைகளில் ரத்தக் கறை உள்ளதா என்று பரிசோதித்தனர். அதைப் பார்த்த அவர் பதற்றத்துடன் அவர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் அளித்த பதில், ஒரு பெண் கன்னித்தன்மை உள்ளவளா என்பதை அவளின் உடையில் ரத்தக் கறை இருப்பதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். தாம்பத்திய உறவின்போது ஒரு பெண்ணின் கன்னித்திரை கிழிந்து ரத்தம் வந்தால்தான் அவர் திருமணத்துக்கு முன்பு ஒழுக்கமுள்ளவள் என்று தீர்மானிப்பார்களாம். இது ஒரு விதத்தில் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட விர்ஜினிட்டி (virginity) பரிசோதனையாகும்.

கன்னித்தன்மை என்பது கற்பனையே

மருத்துவரீதியாக உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை என்னவென்றால் சைக்கிள் ஓட்டும்போதோ, ஓட்டப் பந்தயம் அல்லது விளையாடும்போதோ அல்லது கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளைப் பயிலும்போதோ ஒரு பெண்ணின் கன்னித்திரை எனப்படும் சவ்வு கிழிந்துவிடும் வாய்ப்புண்டு. இதுதான் அறிவியல் உண்மை. ஐநாவின் உலக சுகாதார அமைப்பும் இதை உறுதி செய்திருக்கிறது. ஆனால், இதற்கும் ஒரு பெண்ணின் ஒழுக்கத்துக்கும் முடிச்சு போடுகிறது ஆணாதிக்கச் சமூகம். அந்த ஆய்வில் கிராமப்புறங்களில் இந்தப் பழக்கம் பரவலாக இருப்பது தெரியவந்தது.

திருமணமான அந்தப் பெண்ணுக்குத் திருமணத்திலும் அதன் பின்னர் வலுக்கட்டாயமான தாம்பத்திய உறவிலும் விருப்பமில்லை. அச்சத்துடனும் ஒருவகை உளவியல் பாதிப்புடனும் அவர் இருந்தார். உடையில் ரத்தக் கறைகள் இல்லை என்பதால் அந்தக் குடும்பத்தில் அவரை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அனுமதியின்றி குடும்பக் கட்டுப்பாடு

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்துக்காக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படும் ஏழைப் பெண்கள் சிலரிடமும் ஆய்வு மேற்கொண்டோம். அவர்களில் யாருக்கும் அடுத்த குழந்தை வேண்டுமா என்பதை முடிவு செய்ய உரிமையில்லை. சந்தித்த இரு பெண்களுக்குமே அடுத்த குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை. ஆனால், கணவர் குடும்பத்தினர் அடுத்த குழந்தை பெற்றுக்கொள்ள நிர்பந்திப்பதாகக் கூறினா்.

அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிரசவித்த பெண்கள் சிலரிடம் ஆய்வுக்காகக் கேட்டபோது தங்களுடைய அனுமதியின்றியே உடலில் குடும்பக் கட்டுப்பாடு சாதனங்களைப் பொருத்திவிட்டதாகவும் அதனால் கடுமையான வலி ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர். இதுகுறித்து மருத்துவர்களிடம் எந்தக் கேள்வியும் கேட்க முடியவில்லை. கருத்தடை சாதனங்கள் வைக்கப்பட்டிருப்பது குறித்து அந்தப் பெண்களின் கணவர்களிடம் முன்னரே தகவல் கூறிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பெண்ணின் விருப்பம் ஒரு பொருட்டே அல்ல

ஆய்வு மேற்கொண்ட 95 விழுக்காடு பெண்கள் தங்களின் விருப்பத்தை மீறியே கருத்தரிப்பதாகவும் குழந்தை பெற்றுக்கொள்வதுகூடக் கணவர் குடும்பத்தின் விருப்பம் என்றும் தெரிவித்தனர். அதே போல் உறவுகொள்வதுகூடக் கணவரின் விருப்பத்துக்கேற்பவே நடக்கும். உடல்நிலை சரியில்லை உள்ளிட்ட எந்த நியாயமான காரணத்தைக் கூறியேனும் மறுப்புத் தெரிவித்தால் அதன் கடுமையான விளைவுகளை அனுபவிக்க வேண்டும். அப்போது அடி உதை, உளவியல் சி்த்ரவதை என அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும் என்றனர்.

ஆய்வில் வந்தடைந்த முடிவு இதுதான்: பெரும்பாலான பெண்களுக்குத் தங்கள் உடலின் மீது எந்த உரிமையும் இல்லை.

உடல் மீதான உரிமை என்பது என்ன?

இந்திய அரசியல் சாசனமும் உலகளவிலுள்ள மனித உரிமைச் சட்டங்களும் ஒரு மனிதனுக்குத் தனது உடல்மீது முழு உரிமை உண்டு. அது ஜனநாயக உரிமை என்று வலியுறுத்துகின்றன. பெண்ணுரிமைச் சட்டங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், நடைமுறையில் பெரும்பாலான பெண்களுக்குத் தமது உடலின் மீது உரிமை இல்லை.

இந்தப் பிரச்சினை இங்கிருந்துதான் தொடங்குகிறதா? இது சர்வதேச அரசியல் என்கிறார் சர்வதேசப் பெண்ணிய ஆய்வாளரான மரியா மீஸ். இவர் எழுதிய ஆய்வு நூலான உலகளாவிய மூலதனத் திரட்டும் தந்தைவழிச் சமூகமும் (Patriarchy and Accumulation on a World Scale Women in the International Division of Labour) என்ற நூலில் பெண்ணின் உடலையும் குறிப்பாக அவளின் பாலியலைக் கட்டுப்படுத்துவதும் ஆணாதிக்கச் சமூகத்தின் அவசியத் தேவையாக உள்ளது என்று விளக்குகிறார்.

மூலதனத் திரட்சியும் பெண்களும்

பொதுவாக உலக அளவில் மூலதனத்தின் திரட்சி எப்படி உருவாக்கப்பட்டது? தொடக்கத்தில் எந்த நாட்டிலும் மூலதனம் என்பதே திரட்டப்படாத நிலை இருந்தது. அன்றைய காலகட்டத்தில், பிரிட்டிஷ் அரசே கப்பல் கொள்ளைகளை நடத்தி மூலதனத்தைத் திரட்டியதாக மூலதனத்தின் வரலாறு கூறுகிறது.

தொழிலாளர்களை நிரந்தரமாக சப்ளை செய்வதற்கான ஒரு பகுதியாக குடும்ப அமைப்பு செயல்படுகிறது. அதாவது தொழிற்சாலைக்கு அல்லது இந்த அரசியல் சமூக அமைப்புக்கு உழைப்பதற்கு இன்னுமொரு தொழிலாளியைப் பெற்று தருவதற்கு ஒரு பெண், மனைவி என்ற பெயரில் முதலாளிய அமைப்புக்குத் தேவைப்படுகிறாள். இதற்காக அவளின் பாலியல் தேவைகள் அவளது உடல் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளும் குடும்ப அமைப்புக்குள்ளும் அதனை அடுத்து அரசியல் சமூக அமைப்புக்குள்ளும் கட்டுப்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், சுரண்டல் அரசியல் பொருளாதார சமூக அமைப்பில் தொடர்ந்து உற்பத்தி நடைபெற வேண்டும். ஒரு தொழிலாளி ஓய்வு பெற்றாலோ அல்லது இறந்து போனாலோ அவனுக்குப் பதிலாக இன்னொரு தொழிலாளி அந்த இடத்தை நிரப்ப வேண்டும். அத்தகைய தொழிலாளியை மறு உற்பத்தி செய்யும் ஒரு பெண் மனைவியாகத் தேவைப்படுகிறாள்.

ஏன் பெண்கள் மீது மட்டும் குடும்பக் கட்டுப்பாடு?

குடும்பத்தில் அந்தத் தொழிலாளியை உயிரோடு வைத்திருக்க, உணவளிக்க, அவன் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவள் செலுத்தும் உழைப்புக்கு எந்தக் கூலியும் அளிக்கப்படுவதில்லை; எந்த அங்கீகாரமும் தரப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிக் கூலி கொடுக்கப்படாத உழைப்பு மூலதனத் திரட்சிக்குப் பெருமளவில் பங்களிக்கிறது. இந்த மூலதனத் திரட்சிக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள பெண்ணின் உடல் முழுமையாகக் குடும்பத்தினாலும் அதற்கு அடுத்தபடியாக சமூகத்தினாலும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. இதனால்தான் அனைத்துக் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களும் கருத்தடை சாதனங்களும் பெண்ணின் மீது குறி வைக்கப்படுகின்றன.

ஆணுக்கு நிரந்தர அறுவை சிகிச்சை வலியுறுத்தப்படுவதில்லை. அவன்மீது குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் வலியுறுத்தப்படுவதில்லை. இத்தனைக்கும் அவன் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டால் எந்தப் பக்க விளைவும் ஏற்படாது. பெண்ணை மையமாக வைத்துக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் உலகளவில் உருவாக்கப்பட்டு அவை நாடளவில் அரசாங்கங்களால் மக்கள்தொகை கட்டுப்பாடுத் திட்டங்களாக உருவாக்கப்படுகின்றன. இதற்கு ஒரு வரலாறு உண்டு என்கிறார் சர்வதேச சுற்றுச்சூழல் விஞ்ஞானியான வந்தனா சிவா.

யுஜெனிக் இயக்கம்

இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய கால கட்டத்தில் ஹிட்லர் தனது நாசிசக் கொள்கையின்படி (ஆரியர்களே ஆளப் பிறந்தவர்கள்) ஒரே மாதிரி ஆரிய இனத்தை உருவாக்க யுஜெனிக் (Eugenic Movement) என்ற இயக்கத்தை உருவாக்கினார். யுஜெனிக் இயக்கம் என்பது மரபணு விஞ்ஞானிகள் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவாகும். இவர்கள் ‘ஆரிய இனத்தின்’ மரபணுக் கூற்றைத் தனியே பிரித்தெடுத்து அதன்படியே ஒரே மாதிரியான ஆரிய மனித இனத்தை உருவாக்க ஆராய்ச்சி நடத்தி வந்தனர். இதற்காக அன்றைய ஹிட்லரின் அரசு ஏராளமான நிதியை ஒதுக்கி மரபணுப் பரிசோதனைக் கூடங்களை நிறுவியது. அன்றைக்கே கருவிலேயே பாலினத்தைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது என்கிறார் வந்தனா சிவா.

ஹிட்லர் போரில் தோல்வியுற்றுத் தற்கொலை செய்துகொண்ட பின்னர் யுஜெனிக் இயக்கம் கலைக்கப்பட்டது. அதிலுள்ள ஹிட்லரால் நியமிக்கப்பட்ட அறிவியலாளர்கள் தஞ்சம் புகுந்த இடம்தான் உலக சுகாதார நிறுவனம். அந்த விஞ்ஞானிகளின் வழித்தோன்றல்கள்தான் குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையைப் பெண்ணை மையப்படுத்தி உருவாக்கி வருகிறார்கள் என்று கூறுகிறார் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென். இந்தக் கொள்கையை எதிர்த்துப் பெண்ணிய இயக்கங்கள் இன்று வரை போராடிவருகின்றன. ஆனால், இந்தப் போக்கு தொடர்கிறது.

பெண்ணின் உடல் அமைப்பை யார் தீர்மானிப்பது?

இதைத் தவிர, பெண்ணின் உடல் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை உலக அளவில் கார்ப்பரேட் அழகு சாதனக் கம்பெனிகள் தீர்மானிக்கின்றன. மெல்லிய உடல், சதைப்பிடிப்பான உடல் என்று ஆணாதிக்கச் சந்தையின் ரசனைக்கேற்ப அவளின் உடலமைப்பின் வடிவத்தையும் தீர்மானிக்கின்றன. இதற்காக அவர்கள் அழகுப் போட்டிகளை நடத்துவது ஊரறிந்த ரகசியம். ஒரு பெண்ணின் உடல் குடும்பத்திலிருந்து தொடங்கி சமூகம் அரசு மற்றும் உலகளாவிய கார்ப்பரேட்டுகள் எனக் கட்டுப்படுத்தப்படுகிறது.

மொத்தத்தில் பெண்ணின் உடல்மீது அவளுக்கே உரிமையில்லை. அவளின் உடல் யாருக்குச் சொந்தம்?

ஆதாரங்கள்:

1. Patriarchy and Accumulation on a World Scale Women in the International Division of Labour ) by Maria Mies

2. Feminist Perspectives on the Body

First published Mon Jun 28, 2010; substantive revision Thu Sep 11, 2014

3. Ecofeminism by Dr.Vandana Shiva and Maria Mies.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

ஞாயிறு 2 டிச 2018