மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 டிச 2018

அ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய அறிஞருக்கு அஞ்சலி!

அ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய அறிஞருக்கு அஞ்சலி!

ரவிக்குமார்

தமிழறிஞர் அ.அ.மணவாளன் (06.09.1935 - 30.11.2018) மறைவு

தமிழறிஞரும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் மேனாள் தலைவரும் (1989-1996) சரஸ்வதி சம்மான் விருது பெற்றவருமான பேராசிரியர் அ.அ.மணவாளன் நேற்று (நவம்பர் 30) மறைந்தார். அண்மைக் காலமாக உடல் நலிவுற்று மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் 30.11.2018 அன்று இரவு 8 மணிக்குக் காலமானார். அவருக்கு திருமதி சரசுவதி என்ற மனைவியும், சீனிவாசன் (46) ஜகன்மோகன் (45) என்ற மகன்களும், பிருந்தா (52) என்ற மகளும் உள்ளனர்.

தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்த மணவாளன் இந்தி மொழியையும் நன்கு அறிந்திருந்தார். ஒப்பியல் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்.

இலக்கியக் கோட்பாடுகள், விமர்சனம் முதலியவை குறித்து அவர் எழுதியவை 12 நூல்களாக வெளிவந்துள்ளன. நான்கு நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். ஐந்து நூல்களின் தொகுப்பாசிரியராக இருந்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய கட்டுரைகளின் எண்ணிக்கை நூறைத் தாண்டும். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் மட்டுமின்றி அமெரிக்காவின் ஆறு பல்கலைக்கழகங்களில் அவர் மதிப்புறு பேராசிரியராக இருந்துள்ளார்.

கே.கே.பிர்லா அமைப்பு வழங்கும் உயரிய இலக்கிய விருதான சரஸ்வதி சம்மான் விருது 2005ல் இவர் எழுதிய 'ராமகாதையும் ராமாயணங்களும்" என்ற ஆராய்ச்சித் தொகுப்பு நூலுக்காக வழங்கப்பட்டது. அந்த நூல்,

உலகம் முழுதும் வழங்கும் 48 ராமாயணங்கள் குறித்த ஆராய்ச்சித் தொகுப்பாகும். பாலி, சம்ஸ்கிருதம், ப்ராக்ருதம், திபெத்தியன், தமிழ், பழைய ஜாவா மொழி, ஜப்பானிய மொழி, தெலுங்கு, அஸாமி, தாய் மற்றும் காஷ்மீரி ஆகியவற்றில் வழங்கப்படும் ராமாயணக் கதைகளுடன் ஒப்பிட்டுப் படைக்கப்பட்டது அந்த நூல்.

தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள்?

சங்க இலக்கியத்தின் மீது தொடுக்கப்பட்டுவரும் தாக்குதல்களைத் தமது அறிவார்ந்த ஆராய்ச்சிகளின் மூலம் எதிர்கொண்ட ஒருசில தமிழ்ப் பேராசிரியர்களில் மணவாளன் அவர்கள் முக்கியமானவர். தொல்காப்பியம் குறித்த அவரது பார்வை தனித்துவமானது. தொல்காப்பியத்தில் சில விடுபடல்களும், இடைச்செருகல்களும் இருக்கின்றன என்ற கருத்தை அறிஞர்கள் சிலர் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளனர்.பேராசிரியர் மணவாளன் அவர்களும் அத்தகைய கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.

''ஆதியும் அந்தமுமாக இருக்க வேண்டிய நூற்பாக்கள் பொருளதிகாரத்தில் காணப்பெறவில்லை'' என்றார் பேராசிரியர் அ.அ.மணவாளன்.'' பொருளதிகார நூலின் இடையிலேயும் சில நூற்பாக்கள் விடுபட்டிருக்கக் காண்கிறோம். சான்றாக அகத்திணையியலில் தலைவி கூற்றுக்கான நூற்பா காணப் பெறவில்லை... சூத்திரங்களின் விடுபடல் ஒருபுறமிருக்க சில இடைச் செருகல்களும் நிகழ்ந்திருக்கலாமோ என்னும் ஐயம் தோன்றுகிறது. சான்றாக, தாதப்பக்கம், தாபதநிலை, மூதானந்தம், தபுதாரநிலை போன்ற சொற்றொடர்களைக் கூறலாம். இவையெல்லாம் தமிழ்ச் சொல்லும் வடசொல்லும் சேர்ந்த கூட்டுப் பெயர்கள். தொல்காப்பிய இலக்கணப்படி இருமொழிக் கூட்டுச் சொற்கள் அமைவது தொல்காப்பியக் காலத் தமிழ் மரபில் இல்லை.. '' என்றார் அவர்.

இப்படியான தொடரமைப்புகள் பதினெண்கீழ்க்கணக்கு காலத்தில்தான் காணப்படுகின்றன என்று கூறிய பேராசிரியர் மணவாளன், இத்தகைய பாடச் சிக்கல்களை நீக்கித் தொல்காப்பியத்துக்கு செம்பதிப்பு ஒன்றை உருவாக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். ( உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, ஆய்வரங்கச் சிறப்பு மலர், 2010 பக்கம் 92 -93).

வடமொழி என்பது என்ன?

‘தமிழும் சமஸ்கிருதமும்’ என்ற தலைப்பில் 2012 ஆம் ஆண்டு மணற்கேணி நடத்திய ஆய்வரங்கில் பங்கேற்றுக் கட்டுரை வாசித்தார். “சமஸ்கிருத மொழியின் முதற்படிவம் ‘ரிக்’ என்னும் நூல் வடிவம் கொண்டதுதான். பிற்காலத்தே இதனை வேதம் என்னும் தொகைப் பெயருள் சேர்த்து மேலும், யஜூர், சாமம், அதர்வணம் என்னும் சதுர்வேதம் எனப் பெயரிட்டனர்.மொழியமைப்பில் காணுமிடத்து ரிக் வேத மொழியும் ஏனைய மூன்றன் மொழியும் ஒன்றல்ல” என்று அந்த ஆய்வரங்கில் குறிப்பிட்ட அவர், “தொல்காப்பியத்தில் வடமொழி, வடசொல் எனக் குறிப்பிடப்படுபவை சமஸ்கிருதம் அல்ல, அது வடபுலத்தில் வழங்கா நின்ற பேச்சு மொழியாகிய பிராகிருதத்தைத்தான்” என்றார்.

“ஆழ்வார்கள் கால இறுதியில் தோன்றிய ஆசாரியப் பேரறிஞர்கள் ஆழ்வார்களின் பாடல்களுக்கு சமஸ்கிருதம்கலந்த நடையில் விரிவுரைகள் எழுதி வந்தனர். பின்னர் பாரதம், இராமாயணம், பாகவதம் ஆகிய இதிகாச, புராணங்களை சமஸ்கிருத மொழியில் எழுதி அவற்றிற்கு விளக்கவுரை தந்துவந்தனர்.

அந்நிலையில், இராமாயண இதிகாசத்தின் சிலஇடங்களில், தமிழ் நூல்களில் காணப்பெறும் சிலசெய்திகளை சமஸ்கிருதமாக மொழிபெயர்த்து அச்சிட்டுவந்தனர். அதனைப் படிப்பவர்கள் அவற்றை சமஸ்கிருத மூலம்என்றே கருதும் நிலை அதனால் ஏற்பட்டது என்று அவர் விளக்கினார். அதற்கு ஆதாரமாக வான்மீகி எழுதிய இராமாயணத்தில் வடபுலப் பதிப்புக்கும் தென்புலப் பதிப்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஒப்பிட்டுக்காட்டினார்.

‘காற்றையே உட்கொண்டு, வேறு உணவு எதுவுமின்றிச் சாம்பல் படுக்கையில் மனத் தவிப்புடன் கிடப்பாயாக என்று சபிப்பதாகவடபுல வழக்கு வான்மீகம் கூறுகிறது:

வாயுபக் ஷா நிராஹாரா தப்யந்தி பஸ்மஸாயினீ

அத்ருஷ்ய சர்வபூதானாம் ஆஸ்ரமேஸ்மின் பவிஷ்சி (1.47.29)

ஆனால்,

வாயுபக் ஷா சிலாபூத்வா தப்யந்தி பஸ்மஸாயினீ (1.48.34)

என்று தென்புல வழக்கு தர்மாலயா பதிப்பு கூறுகிறது.‘கல் வடிமாகக் கிடப்பாயாக’ என்று தென்புல வழக்குவான்மீகம் கம்பனை அடியொற்றிக் கூறுகிறது (கல்லியல் ஆதி) என எடுத்துக் காட்டினார்.

உலகின் பழமையான மொழி எது?

உலகின் மிகப் பழமையான மொழி, தமிழ் என்று லண்டனிலிருந்து வெளியாகும் மிர்ரர் என்னும் ஆங்கில இதழில் கூறப்பட்ட கருத்தை எடுத்துக்காட்டி, ‘‘இப்போது பேசப்படும் மொழிகளில் தமிழ்தான் மிகப் பழமையான மொழி என்று சமீபத்தில் நடத்தப்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. இதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. சிந்துவெளி நாகரிகம் மற்றும் சுமேரிய நாகரிகக் காலத்தில்கூட, இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்மொழியின் பயன்பாடு இருந்திருக்கிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஆறுகள் குறித்த விவரங்கள் கூட பழங்காலத் தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. உண்மையிலேயே, சமஸ்கிருதம் மட்டுமல்ல அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் முந்தியது தமிழ் ” என்று அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்ட கருத்தை அவர் வழிமொழிந்தார்.

அறிஞர் ஐராவதம் மகாதேவனின் மறைவைத் தொடர்ந்து தமிழறிஞர் மணவாளனும் மறைந்திருக்கிறார். தமிழால் தன்னை உயர்த்திக்கொள்வோர் மலிந்துள்ள இன்றைய சூழலில் இவர்கள் தமது உழைப்பால் தமிழை உயர்த்தியவர்கள். இந்த இழப்புகளைத் தமிழ் அறிவுலகம் எப்படி ஈடுசெய்யப்போகிறது என்ற கேள்வி மனதைக் குடைகிறது.

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

சனி 1 டிச 2018