மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 நவ 2018

சிறப்புக் கட்டுரை: மரபணு மாற்று விதைகள் லாபகரமானதா?

சிறப்புக் கட்டுரை: மரபணு மாற்று விதைகள் லாபகரமானதா?

இந்திய விவசாயிகளின் நிலை (பாகம் - 4)

இந்திய விவசாயிகளின் தற்போதைய நிலை என்னவென்பது குறித்து டெல்லியைச் சேர்ந்த சென்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டீஸ் நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு விளக்கும் இந்திய விவசாயிகளின் நிலையை மின்னம்பலம் வாசகர்களுக்காகத் தொடராக வெளியிட்டு வருகிறோம். அதன் நான்காம் பகுதி இன்று

இந்தியாவின் பிரதான பயிர்கள் என்றால் அது நெல்லும் கோதுமையும்தான். இந்த ஆய்வின் கணக்குப்படி 41 விழுக்காடு நெல்லும், 21 விழுக்காடு கோதுமையும் பயிரிடப்படுகிறது. 5 விழுக்காடு கம்பும், 4 விழுக்காடு சோளமும், 4 விழுக்காடு உளுந்தும், 2 விழுக்காடு கரும்பும், 2 விழுக்காடு சோயாபீனும், 3 விழுக்காடு பருத்தியும் பயிரிடப்படுகிறது. மற்றவையெல்லாம் சேர்த்து 18 விழுக்காடு பயிரிடப்படுகின்றன.

எந்த விதைகளை விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள்?

இந்த ஆய்வின்படி 70 விழுக்காடு விவசாயிகள் பாரம்பரிய விதைகளையே பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். 63 விழுக்காட்டினர் ஹைபிரிட் விதைகளைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். 4 விழுக்காட்டினர் மட்டுமே மரபணு மாற்று விதைகளைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். இதிலும்கூட மண்டலத்துக்கு மண்டலம் வேறுபாடு காணப்படுகிறது. வடமாநிலங்களைக் காட்டிலும் தென்மாநிலங்களில் பாரம்பரிய விதைகளைப் பயன்படுத்துவது மிகவும் குறைவாக உள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மத்திய மாநிலங்களில் 80 விழுக்காடு அளவுக்குப் பாரம்பரிய விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. வடமாநிலங்களில் இது 77 விழுக்காடாகவும், கிழக்கு மாநிலங்களில் 76 விழுக்காடாகவும், மேற்கில் 62 விழுக்காடாகவும் உள்ளது. ஆனால், தெற்கில் 59 விழுக்காடாக மட்டுமே இருக்கிறது. அதே சமயம் தெற்கில் பயன்படுத்தப்படும் 61 விழுக்காடு விதைகள் ஹைபிரிட் ரகங்களாகும். இது வடக்கில் 68 விழுக்காடாகவும், கிழக்கில் 56 விழுக்காடாகவும், மத்தியில் 60 விழுக்காடாகவும், மேற்கில் 68 விழுக்காடாகவும் உள்ளது. மரபணு மாற்று விதைகளைப் பொறுத்தவரையில் வடக்கு மற்றும் தெற்கில் தலா 5 விழுக்காடும், மத்திய மாநிலங்கள் மற்றும் மேற்கில் தலா 4 விழுக்காடும், கிழக்கில் 2 விழுக்காடும் பயன்படுத்தப்படுகிறது.

மரபணு விதை லாபம் தருகிறதா?

36 விழுக்காடு விவசாயிகள் ஹைபிரிட் விதைகள் லாபகரமானது என்றும், 18 விழுக்காடு விவசாயிகள் உள்ளூர் விதைகள் (பாரம்பரிய விதைகள்) லாபகரமானது என்றும், 32 விழுக்காடு விவசாயிகள் இரண்டுமே லாபகரமானது என்றும் கூறுகின்றனர். 14 விழுக்காடு விவசாயிகள் இதுபற்றி கருத்து எதையும் கூறவில்லை. மரபணு மாற்று விதைகளைப் பயன்படுத்துவதால் லாபம் உள்ளதா, இல்லையா என்ற கேள்வியும் இந்த ஆய்வில் முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்தவர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே மரபணு மாற்று விதைகள் லாபகரமானது என்று கூறியுள்ளனர். ஆனால், 42 விழுக்காடு விவசாயிகள் அதை நாங்கள் பயன்படுத்தியதில்லை என்றும், 38 விழுக்காடு விவசாயிகள் அதைப்பற்றி எந்தக் கருத்தும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

ரசாயன உரங்கள் & பூச்சிக்கொல்லிப் பயன்பாடு

பெரும்பாலான விவசாயிகள் இயற்கை உரங்கள் மற்றும் ரசாயன உரங்கள் இரண்டையுமே பயன்படுத்துகின்றனர். அதாவது 40 விழுக்காடு விவசாயிகள் இரண்டையும் பயன்படுத்துகின்றனர். 35 விழுக்காடு விவசாயிகள் ரசாயன உரங்களை மட்டும்; 16 விழுக்காடு விவசாயிகள் இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்துகின்றனர். இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களைக் காட்டிலும் கிழக்கு மாநிலங்களில் ரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. மற்ற பகுதிகளைக் காட்டிலும் தென்மாநிலங்களில் அதிகளவில் இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பூச்சிக்கொல்லிகளைப் பொறுத்தவரையில் பெரும்பாலான விவசாயிகள் தினசரி பயன்படுத்துவதில்லை. 18 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே தினசரி பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர். 28 விழுக்காடு விவசாயிகள் அவ்வப்போது பயன்படுத்துகின்றனர். 10 விழுக்காடு விவசாயிகள் மிக அரிதாகவும், 30 விழுக்காடு விவசாயிகள் தேவைப்பட்டால் மட்டும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். 13 விழுக்காட்டினர் எப்போதுமே பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதில்லை என்றும் கூறுகின்றனர்.

பெரு விவசாயிகளைக் காட்டிலும், சிறு விவசாயிகளே அதிகளவில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர். 54 விழுக்காடு சிறு விவசாயிகள் தினந்தோறும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர். நடுத்தர விவசாயிகள் 27 விழுக்காடும், பெரு விவசாயிகள் 10 விழுக்காடும் தினசரி பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு 4இல் ஒரு விவசாயி எல்லாப் பயிர்களுக்கும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்றார். 32 விழுக்காடு விவசாயிகள் சில பயிர்களுக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். அதேபோல 32 விழுக்காடு விவசாயிகள் தேவைப்படும்பொழுது மட்டும் பயன்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.

பாசன முறைகள்

40 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே தங்களது வேளாண் நிலத்துக்கு முழுமையான பாசன வசதிகள் உள்ளதாகக் கூறுகின்றனர். அதில் 45 விழுக்காடு விவசாயிகள் பம்புகள், போர் வெல் ஆகியவற்றைத்தான் பாசனங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். 38 விழுக்காடு விவசாயிகள் கால்வாய்களின் மூலம் பாசனம் செய்கின்றனர். பாரம்பரிய முறையில் கிணறுகளையும், குளங்களையும் நம்பி இன்றளவிலும் பல விவசாயிகள் உள்ளனர். அதாவது 34 விழுக்காடு விவசாயிகள் கிணறுகளையும், 30 விழுக்காடு விவசாயிகள் குளங்களையும் நம்பி விவசாயம் செய்கின்றனர். 19 விழுக்காடு விவசாயிகள் ஆற்று நீரையும், 12 விழுக்காடு விவசாயிகள் தண்ணீர் தொட்டிகளையும், 18 விழுக்காடு விவசாயிகள் அரசு கிணற்றுக் குழாய்களையும், 9 விழுக்காடு விவசாயிகள் மற்ற முறைகளையும் நம்பி விவசாயம் செய்கின்றனர்.

மின்சாரம்

பாசன வசதிகள் பெரும்பாலும் மின்சாரத்தை நம்பியே முழுமையடைகின்றன. ஆனால், இந்த ஆய்வு நடந்த நாள் வரையிலான ஒருவார காலத்தில் இந்தியா முழுவதும் 51 விழுக்காடு விவசாயிகள் வேளாண்மைக்கு மின்சாரம் இல்லையென்று கூறியுள்ளனர். அதிலும் கிழக்கு மாநிலங்களில் 87 விழுக்காடு விவசாயிகளும், வடஇந்தியாவில் 46 விழுக்காடும், மத்திய இந்தியாவில் 42 விழுக்காடு விவசாயிகளும், மேற்கிந்தியாவில் 40 விழுக்காடும், தென்னிந்தியாவில் 39 விழுக்காடும் மின்சாரம் இல்லையென்று கூறியுள்ளனர்.

இடையூறின்றி மின்சாரம் கிடைத்தால் கூடுதல் கட்டணம் செலுத்த முன் வருவீர்களா என்ற கேள்வியும் இந்த ஆய்வில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 31 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே கூடுதல் கட்டணம் செலுத்த முயற்சி செய்வதாகக் கூறுகின்றனர். 46 விழுக்காடு விவசாயிகள் இந்த யோசனையை நிராகரிக்கின்றனர். எஞ்சியவர்களுக்கு இதைப் பற்றி எந்தக் கருத்தும் இல்லை. மின்சார வசதி கிடைக்காத விவசாயிகளில் 35 விழுக்காட்டினர் மழையை மட்டுமே நம்பியுள்ளனர். 25 விழுக்காட்டினர் ஜெனரேட்டர்களையும், 14 விழுக்காட்டினர் கால்வாய்களையும் சார்ந்து விவசாயம் செய்கின்றனர். விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து நாளை காண்போம்.

(தொடரும்...)

-பிரகாசு

இந்திய விவசாயிகளின் நிலை-1

இந்திய விவசாயிகளின் நிலை-2

இந்திய விவசாயிகளின் நிலை-3

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

வியாழன் 29 நவ 2018