மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 நவ 2018

சிறப்புக் கட்டுரை: இந்திய விவசாயிகளின் சமூகப் பொருளாதார நிலை!

சிறப்புக் கட்டுரை: இந்திய விவசாயிகளின் சமூகப் பொருளாதார நிலை!

இந்திய விவசாயிகளின் நிலை - 1

இந்திய விவசாயிகளின் தற்போதைய நிலை என்னவென்பது குறித்து டெல்லியைச் சேர்ந்த சென்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டீஸ் நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு விளக்கும் இந்திய விவசாயிகளின் நிலையை மின்னம்பலம் வாசகர்களுக்காக இன்று முதல் தொடராக வெளியிடுகிறோம்.

ஆய்வைப் பற்றி

2013 டிசம்பர் முதல் 2014 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் 18 மாநிலங்களுக்குச் சென்று 137 மாவட்டங்களில் உள்ள 274 கிராமங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. வடக்கில் இமாசலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், தெற்கில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும், கிழக்கில் அசாம், மேற்கு வங்கம், பிகார் மற்றும் ஒடிசாவிலும், மத்திய மண்டலத்தில் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்திலும், மேற்கில் ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டது.

சுமார் 5,350 குடும்பங்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 16.7 விழுக்காடு பெண்களும், 19.8 விழுக்காடு பட்டியலின மக்களும், 11.9 விழுக்காடு பழங்குடியின மக்களும், 40.3 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட மக்களும், இந்து அல்லாதவர்கள் 13.5 விழுக்காடும் பங்கெடுத்துள்ளனர். ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 4,298 பேர் பெண்கள். 2,114 பேர் இளைஞர்கள். 10 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கொண்ட விவசாயிகளைப் பெரு விவசாயிகளாகவும், 4 ஏக்கர் முதல் 9.99 ஏக்கர் நிலம் கொண்ட விவசாயிகளை நடுத்தர விவசாயிகளாகவும், 4 ஏக்கருக்குக் குறைவான நிலம் கொண்ட விவசாயிகளைச் சிறு மற்றும் குறு விவசாயிகளாகவும், நிலமற்றவர்களை நிலமற்ற விவசாயிகளாகவும் இந்த ஆய்வு கணக்கில் கொண்டுள்ளது.

இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வுக்கு சதீஷ்குமார் வழிகாட்டியாகச் செயல்பட்டுள்ளார். அனுராதா சிங், ஆசிஷ் ரஞ்சன், பனாஸ்மித்தா போரா, தனஞ்செய் குமார் சிங், ஹிமான்ஸு பட்டாச்சார்யா, கே.ஏ.க்யூ.ஏ.ஹிலால், ஜோதி மிஷ்ரா, நிதின் மேக்தா, ராகுல் வெர்மா, ராஜ்னிஷ் குமார், சமீத் ஷர்மா, ஸ்ரேயாஸ் சர்தேசாய் மற்றும் விபா அட்ரி ஆகியோர் இந்த ஆய்வுக் குழுவில் பங்கேற்றுள்ளனர். சுகாஷ் பல்ஷிகார் மற்றும் சந்தீப் சாஷ்திரி மொத்த ஆய்வுக்குமான பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். அதுதவிர, களப்பணிக்கு லோக்நிதி நெட்வொர்க் மாணவர்களிலிருந்து ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒருவர் என்றளவில் சென்றுள்ளனர்.

விவசாயிகளின் சமூகப் பொருளாதார நிலை

இந்த ஆய்வில் பங்கெடுத்த விவசாயிகளில் 90 விழுக்காடு விவசாயிகள் தங்களுடைய மூதாதையர் காலத்திலிருந்தே விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். 75 விழுக்காட்டினர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத் தொழிலைத்தான் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர். 10 விழுக்காட்டினர் மட்டும்தான் அண்மைக் காலங்களில் விவசாயத் துறைக்குள் புதிதாக நுழைந்துள்ளனர். ஆனால், ஆய்வில் அவர்கள் அளித்துள்ள பதில்களின் அடிப்படையில் பார்த்தால், நீண்ட காலமாக இத்துறையில் ஈடுபட்டிருந்தாலும் கூட அவர்களின் சமூகப் பொருளாதார நிலைகளில் பெரும் மாற்றத்தை வேளாண் சமூகம் காணவில்லை என்பதே வெளிப்படுகிறது.

யார் யார், எவ்வளவு நிலம் வைத்துள்ளார்கள்?

ஆய்வில் பங்கெடுத்த 60 விழுக்காடு விவசாயிகள் சிறு விவசாயிகள் (1 ஏக்கர் முதல் 3 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்கள்). 19 விழுக்காட்டினர் நடுத்தர விவசாயிகள் (4 ஏக்கர் முதல் 9 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்கள்). 7 விழுக்காட்டினர் பெரு விவசாயிகள் (10 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள்). ஒட்டுமொத்தமாக 86 விழுக்காடு விவசாயிகளுக்குச் சொந்தமாக நிலம் உள்ளது. எஞ்சிய 14 விழுக்காட்டினருக்குச் சொந்த நிலமே கிடையாது. 65 விழுக்காடு விவசாயக் குடும்பங்களில் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் வேளாண்மைக்கு உதவி செய்கின்றனர். வெறும் 10 விழுக்காட்டினர் மட்டும்தான் ஏதேனும் ஒரு விவசாயச் சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர்.

விவசாயிகள் எந்த வீட்டில் வசிக்கிறார்கள்?

இந்த ஆய்வின் கணக்குப்படி 36 விழுக்காடு விவசாயிகள் குடிசை அல்லது மண்ணால் கட்டப்பட்ட கூரை வீடுகளிலும், 44 விழுக்காடு விவசாயிகள் ஓட்டு வீடுகள் அல்லது ஓடு மற்றும் குடிசைகள் கலந்து கட்டப்பட்ட வீடுகளிலும் வசிக்கின்றனர். 18 விழுக்காட்டினர் மட்டுமே கான்கிரீட் வீடுகளில் வசிக்கின்றனர். 28 விழுக்காடு விவசாயிகள் எழுத்தறிவு அற்றவர்கள். 14 விழுக்காட்டினர் பத்தாம் வகுப்பு வரையிலும் படித்துள்ளனர். 6 விழுக்காட்டினர் மட்டுமே கல்லூரிகளுக்குச் சென்றுள்ளனர்.

இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்களில் சராசரியாக 83 விழுக்காட்டினருக்கு பிரதானத் தொழில் விவசாயம் மட்டுமே. இது ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுபடுகிறது. குறைந்தபட்சமாக தமிழ்நாட்டில் 68 விழுக்காட்டினருக்கு மட்டுமே விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது. அதிகபட்சமாக குஜராத்தில் 98 விழுக்காட்டினருக்கு விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது. 32 விழுக்காடு விவசாயிகள் குடும்பத்தின் கூடுதல் வருவாய்க்காக விவசாயம் மட்டுமின்றி மற்ற வேலைகளையும் செய்கின்றனர். 79 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு விவசாயத்தின் மூலமான வருவாய் மட்டும்தான் குடும்பத்தை இயக்குவதற்கான முக்கிய வருவாய்.

விவசாயிகளிடையே தொடரும் பஞ்சம்

அனைவருக்கும் உணவிடும் விவசாயி பட்டினி கிடப்பது இன்னமும் இந்த நாட்டில் தொடர்கிறது என்னும் அவலத்தை இந்த ஆய்வு வெளிக்காட்டுகிறது. கடந்த ஓர் ஆண்டில் ஒவ்வொரு பத்தில் ஒரு விவசாயியும் தன் குடும்பம் சில சமயங்களில் உண்ண உணவில்லாமல் இருந்ததாகக் கூறியுள்ளார். 61 விழுக்காடு விவசாயக் குடும்பங்கள் ஒரு நாளைக்கு இருவேளை மட்டுமே உண்பதாகவும், 2 விழுக்காடு விவசாயக் குடும்பங்கள் ஒருவேளை மட்டுமே உண்பதாகவும் கூறியுள்ளனர். 34 விழுக்காடு விவசாயக் குடும்பங்கள் மட்டுமே நாள் ஒன்றுக்கு இரண்டு முறைக்கு மேல் உண்பதாகக் கூறியுள்ளனர். ஒட்டுமொத்தமாக 44 விழுக்காடு விவசாயிகள் மூன்று முறை உண்பதாகவும், 39 விழுக்காட்டினர் மதிய உணவு மற்றும் இரவு மட்டுமே உண்பதாகக் கூறியுள்ளனர். அதாவது அவர்கள் காலை உணவை உண்பதே இல்லை.

(தொடரும்...)

-பிரகாசு

முந்தைய கட்டுரை: பணமதிப்பழிப்பை ஏன் நினைவுகூர வேண்டும்?

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

திங்கள் 26 நவ 2018