மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

ரசிகர்களையும் என்னையும் பிரிக்க முடியாது: ரஜினி

ரசிகர்களையும் என்னையும் பிரிக்க முடியாது: ரஜினி

தன்னையும் தனது ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி நிர்வாகிகளை நியமனம் செய்துவருகிறார். அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

மன்றத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், “ஒழுங்கு நடவடிக்கை எனது ஒப்புதலின் பேரிலேயே எடுக்கப்படுகிறது. தன் குடும்பத்தைப் பராமரிக்காமல் மன்றப் பணிகளுக்காக யாரும் வர வேண்டாம், 30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ அரசியலில் ஈடுபடுவதற்கோ முழுத் தகுதி ஆகிவிட முடியாது. சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் அவதூறு பரப்புகிறவர்கள் என் ரசிகராக இருக்க முடியாது” என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார். மற்றவர்களைப் போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும் என்று தனது அறிக்கையில் அவர் கேள்வியும் எழுப்பியிருந்தார். இது ரஜினி மக்கள் மன்றத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் இன்று (அக்டோபர் 26) சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா மண்டபத்தில், மக்கள் மன்றத்தினருடன் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார். இதில் நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் சேர்த்துக்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்ட ரஜினிகாந்த், “என்னை வாழவைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு, நான் கடந்த 23ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், மக்கள் மன்றச் செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளைச் சொல்லியிருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும், அதில் உள்ள உண்மையையும் நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களைப் போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். என்னையும் உங்களையும் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்தப் பாதையில் போனாலும், அந்தப் பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்குத் துணை இருப்பான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018