மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

சிட்லபாக்கம்: சமூக ஆர்வலர்கள் விடுதலை!

சிட்லபாக்கம்: சமூக ஆர்வலர்கள் விடுதலை!

வடிகால் அமைக்கும் பணி குறித்து அதிகாரிகளைக் கேள்வி கேட்டதால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சமூக ஆர்வலர்கள் இரண்டு பேர் இன்று (அக்டோபர் 26) விடுதலை செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித் துறை சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணிகள், பணி ஆணை இல்லாமல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த அக்டோபர் 20ஆம் தேதியன்று, அதே பகுதியில் உள்ள ‘ரைசிங் சிட்லபாக்கம்’ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், அங்கிருந்த அதிகாரிகளிடம் கால்வாய் அமைக்கும் பணிகள் குறித்து கேள்வி எழுப்பினர். உரிய பணி ஆணை இல்லாமல் பணிகள் செய்கிறீர்கள் என்று கூறி, அங்கிருந்த உதவிப் பொறியாளர் வெங்கடேசனிடம் முறையிட்டனர்.

இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு நடந்து கொண்டிருந்த பணிகளை சமூக ஆர்வலர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது, படம் பிடித்துக் கொண்டிருந்த சிவகுமார் என்பவரது கைப்பேசியையும் அதிகாரிகள் பிடுங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

உதவிப் பொறியாளர் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், சிட்லபாக்கம் ஜோதிநகரைச் சேர்ந்த பாலசந்தர் (29) அடிகளார் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி குமார் என்ற குமார சுப்பிரமணியம் (61) ஆகிய இரண்டு பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தார் சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் கிருஷ்ணன். பின்னர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார். ஆனால் சமூக ஆர்வலர்கள் சார்பில் காவல் துறையில் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சமூக ஆர்வலர்கள் இருவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராகக் குரலெழுப்பி வந்தனர் அப்பகுதி மக்கள். அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற்று, இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.

“டெண்டரே விடாமல் முறைகேடாகப் பணிகளை மேற்கொண்ட அதிகாரிகளைத் தட்டிக்கேட்ட தன்னார்வலர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்திருக்கிறார்கள். உள்ளாட்சித் துறையில் சந்தி சிரிக்கும் ஊழல்களைத் தட்டிக்கேட்டால் என்ன தவறு? உடனடியாக அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா உத்தரவின் பேரில் அவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியது அறப்போர் இயக்கம். “ஆட்சியர் பொன்னையா, கைப்பேசியை பிடுங்கிய அதிகாரி, பொய் புகார் என்று தெரிந்தும் வழக்குப் பதிந்த சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் மூவரும் தங்கள் வீட்டு முன் ஒரு வாரமாகக் குழி தோண்டிப் போட்டால் என்ன செய்வார்கள் என்று விளக்கம் அளிப்பார்களா” என்று கேள்வி எழுப்பியிருந்தது. கைது செய்யப்பட்ட இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018