மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

சவாலை எதிர்நோக்கி ‘மிஸ்டர் 360’!

சவாலை எதிர்நோக்கி ‘மிஸ்டர் 360’!

தான் களமிறங்கவுள்ள உள்ளூர் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் குறித்து மனம் திறந்துள்ளார் ஏபி டி வில்லியர்ஸ்.

சர்வதேச போட்டிகளிலிருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேனான ஏபி டி வில்லியர்ஸ், தென் ஆப்ரிக்காவில் நடக்கும் உள்ளூர் டி 20 தொடரான ம்ஸான்சி சூப்பர் லீக் எனும் தொடரில் தற்போது விளையாடவுள்ளார். ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரானது நவம்பர் 15ஆம் தேதி துவங்குகிறது. இதில் ஸ்வான் ஸ்பார்டன்ஸ் எனும் அணிக்காக அவர் விளையாடவுள்ளார். அவருடன் இயான் மார்கன், லுங்கி நிகிதி, ஜீவன் மெண்டிஸ் போன்றோரும் அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அந்தப் போட்டியில் பங்கேற்பது குறித்து டி வில்லியர்ஸ் கூறியதாக ஸ்போர்ட்24 எனும் ஊடகம் நேற்று (அக்டோபர் 25) செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “எனது கிரிக்கெட் வாழ்க்கை இந்த சூப்பர் ஸ்போர்ட் பார்க்கில்தான் ஆரம்பித்தது. இங்குதான் கிரிக்கெட் கற்றேன். இங்குதான் வளர்ந்தேன். இங்கு கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் தற்போது சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இந்த தொடரை நல்ல பொழுதுபோக்கான கிரிக்கெட் தொடராக உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்குக் கொண்டுசெல்ல விரும்புகிறோம்.

இந்தத் தொடரை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். நீண்ட நாட்களாக கிரிக்கெட் ஆடவில்லை. ஆனாலும் இதுபோன்ற இடைவெளியொன்றும் எனக்கு புதிதல்ல. ஏற்கெனவே இதுபோல இடைவெளிவிட்டு போட்டிகளில் களமிறங்கியுள்ளேன். அவ்வாறு இடைவெளிவிட்டு களமிறங்கும்போதெல்லாம் மீண்டும் ஃபார்முக்கு வருவது சவாலானதாகவே இருக்கும். அந்த சவாலை தற்போதைய இந்தத் தொடரில் எதிர்நோக்கியுள்ளேன்” என டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

இப்படியாக உள்ளூர் கிரிக்கெட்டில் டி வில்லியர்ஸ் களமிறங்கவுள்ள நிலையில் தனது ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்றுக்கொண்டு சர்வதேச போட்டிகளில் மீண்டும் டி வில்லியர்ஸ் களமிறங்குவார் எனவும் கிரிக்கெட் வட்டாரத்தில் அரசல் புரசலாக கூறப்பட்டுவருகிறது. ஆனால் இதுகுறித்த எவ்வித அதிகாரபூர்வ தகவலும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாக தரப்பிலிருந்தோ, டி வில்லியர்ஸ் தரப்பிலிருந்தோ இதுவரை வெளியிடப்படவில்லை.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018