மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

ராகுல் கைதாகி விடுதலை!

ராகுல் கைதாகி விடுதலை!

சிபிஐ இயக்குநரை கட்டாய விடுப்பில் அனுப்பியதற்கு எதிராக நாடு முழுவதுமுள்ள சிபிஐ தலைமை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் இன்று (அக்டோபர் 26) ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார்.

மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப் புகார் தொடர்பாக மோதல் ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களைக் கட்டாய விடுப்பில் அனுப்பியது. தொடர்ந்து, சிபிஐயின் இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

ரஃபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்த நிலையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். அத்துடன் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவைக் கட்டாய விடுப்பில் அனுப்பியதைக் கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில், டெல்லி தயாள் சிங் கல்லூரியில் இருந்து சிபிஐ தலைமை அலுவலகம் வரை காங்கிரஸ் தொண்டர்கள் ஊர்வலமாகச் சென்றனர். இந்தப் பேரணியில், மூத்த தலைவர் அசோக் கெலாட், அகமது படேல், மோதிலால் வோரா, வீரப்பமொய்லி, ஆனந்த் சர்மா, லோக்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலர் டி ராஜா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது , பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டோரைக் கடுமையாக விமர்சித்த ராகுல் சிபிஐ, அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களை மோடி சிதைத்து வருகிறார் என்று குற்றம்சாட்டினார்.

பேரணியின் முடிவில் சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட காங்கிரஸ் தொண்டர்கள் முயன்றனர். அப்போது மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டதாகக் கூறி ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் மூத்த தலைவர்களை கைது செய்து லோதி ரோடு காவல் நிலையத்துக்குக் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். போலீசாருக்கு ஒத்துழைக்க மறுத்த சிலர் குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றப்பட்டனர். லோதி ரோடு காவல் நிலையத்தில் 20 நிமிடம் வைக்கப்பட்ட அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டார்கள் என்று டெல்லி தெற்கு டிசிபி விஜய் குமார் தெரிவித்தார்.

வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் , “பிரதமர் ஓடலாம், ஒளியலாம். இறுதியில் உண்மை வெளிவந்தே தீரும். சிபிஐ இயக்குநரை அகற்றுவது எதுவும் உதவாது. சிபிஐ இயக்குநர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பயம் காரணமாக எடுக்கப்பட்டது” எனக் கூறினார்.

டெல்லியைப் போன்று, சென்னை, புதுச்சேரி, லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத், போபால், சண்டிகர், உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய திருநாவுக்கரசர் , பாஜக அரசு ஜனநாயக நெறிமுறைகளைக் குழிதோண்டி புதைத்து வருகிறது. ரஃபேல் போர் விமான ஊழல் வழக்கை மறைப்பதற்காகப் பிரதமர் மோடி தன்னிச்சையாக முடிவு எடுத்து இருக்கிறார் என்று குற்றம்சாட்டினார். பின்னர் பேரணியாக சாஸ்த்ரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்ற அவர்களைத் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

இதுபோன்று, புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சண்டிகரில் மத்திய அரசினை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தை தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக் காவல் துறையினர் கலைத்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர், கூண்டுக்கிளி போல் ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டார். அவரின் நிலை தான் தற்போது சிபிஐயின் நிலை என காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018