மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் தொடரும் வேலையின்மை!

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் தொடரும் வேலையின்மை!

பாஸ்கர் திரிபாதி

இந்தியாவில் 2015ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில் 70 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளதாகவும், 2015ஆம் ஆண்டுக்குப் பிறகும் இந்த வீழ்ச்சி தொடர்வதாகவும் ஆய்வு ஒன்று கூறுகிறது.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் இதுகுறித்து தயாரித்துள்ள ஆய்வறிக்கையை 2018 செப்டம்பர் 25ஆம் தேதியன்று வெளியிட்டது. இளைஞர்கள் மற்றும் அதிகம் கல்வி பெற்றவர்களின் வேலைவாய்ப்பு விகிதம் வெறும் 16 விழுக்காடாக மட்டுமே உள்ளது. இவர்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

வேலைவாய்ப்புகள் குறித்து அரசு தரப்புத் தகவல்கள் ஏதும் அண்மையில் வெளியாகாத நிலையில், அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தின் அறிக்கை தேசிய மாதிரி சர்வே அலுவலகம் மற்றும் தொழிலாளர் ஆணையத்தின் வேலைவாய்ப்பு - வேலையின்மை சர்வே (2015-16) ஆகியவற்றின் தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 2015-16ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வே எடுப்பதைத் தொழிலாளர் ஆணையம் நிறுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் தகவல்களும் இந்த அறிக்கையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

2018ஆம் ஆண்டில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தயாரித்த அறிக்கையில், 2017ஆம் ஆண்டில் 1.28 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எனினும் அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தின் அறிக்கை இதற்கு முரணாக உள்ளது.

வேலையில்லா வளர்ச்சியில் இந்தியா

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்ற வாதத்துக்கு இந்த அறிக்கை மேலும் வலுசேர்க்கிறது. “மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதங்கள் அதிகரித்திருந்தாலும், வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் இடையேயான உறவு காலப்போக்கில் வலுவிழந்துவிட்டது” என்று இந்த அறிக்கை கூறுகிறது. ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 10 விழுக்காடு உயர்ந்தால், வேலைவாய்ப்புகள் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே உருவாக்கப்படுகின்றன. 2015ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் வருடாந்தர ஜிடிபி வளர்ச்சி 6.8 விழுக்காடாக இருந்தாலும், வேலைவாய்ப்புகளில் 0.6 விழுக்காடு உயர்வு மட்டுமே ஏற்பட்டுள்ளது.

1970களிலும், 1980களிலும் ஜிடிபி வளர்ச்சி 3-4 விழுக்காடாக இருந்தபோது வேலைவாய்ப்பு உருவாக்க விகிதம் ஆண்டுக்கு 2 விழுக்காடாக இருந்தது. அதாவது இப்போதைய வளர்ச்சி விகிதத்தை விட மூன்று மடங்கு அதிகம். 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு, முக்கியமாக 2000களில் ஜிடிபி வளர்ச்சி 7 விழுக்காட்டை எட்டியது. ஆனால் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஒரு விழுக்காடாகக் குறைந்துவிட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது.

அதிகம் பாதிக்கப்பட்டது யார்?

இந்தியாவில் வேலையின்மை ஒரு பிரச்சினையல்ல; தகுதியில்லாதவர்களைப் பணியமர்த்துவதும், குறைவான ஊதியங்களுமே பெரிய பிரச்சினை என்று கூறப்படுவதுண்டு. ஆனால் இப்போதோ இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு புதிய பிரச்சினை தோன்றியுள்ளது. கல்வித் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பதே அது. இந்த வேலையின்மை விகிதம் தற்போது ஐந்து விழுக்காடாக உள்ளது. இளைஞர்களிடமும், அதிகம் கல்வி பெற்றவர்களிடமும் இந்தப் பிரச்சினை 16 விழுக்காடு இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.

ஏறத்தாழ நாட்டின் அனைத்து மாநிலங்களிலுமே வேலையின்மை பிரச்சினை உள்ளது. எனினும், வட மாநிலங்களான ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பிகார், சத்தீஸ்கர், பஞ்சாப், ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்களில்தான் வேலையின்மை மிகவும் மோசமாக உள்ளது.

ஊதிய வளர்ச்சியே இல்லை

2015ஆம் ஆண்டு வரையிலான 15 ஆண்டுகளில் பெரும்பாலான துறைகளில் ஊதியங்கள் 3-4 விழுக்காடு வருடாந்தர வளர்ச்சியை எட்டியுள்ளன. 67 விழுக்காடு குடும்பங்களின் மாதாந்தர ஊதியம் ரூ.10,000 ஆக உள்ளது. ஏழாம் ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச ஊதியமான 18,000 ரூபாயை விட 44 விழுக்காடு குறைவு. இந்தியத் தொழிலாளர் சக்தியில், மாதம் ரூ.50,000க்கும் மேல் ஊதியம் பெறுவோரின் பங்கு வெறும் 1.6 விழுக்காடு மட்டுமே ஆகும். பெரும்பாலான இந்தியர்களுக்கு வாழ்வுக்கான ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை என்றும், அதனால்தான் அரசுப் பணிகளுக்கான போட்டி கடுமையாக உள்ளதாகவும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. 2015 வரையிலான ஐந்து ஆண்டுகளில் அதிகபட்சமாக வேளாண் துறையில் ஊதியங்கள் அதிகப்படியான வளர்ச்சியை (7%) எட்டியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் அமைப்பு சாரா உற்பத்தித் துறை (4%) உள்ளது.

அதிகரிக்கும் ஒப்பந்தப் பணிகள்

முறைசார்ந்த பணிகளில் நல்ல ஊதியம் வழங்கப்படுவதில்லை. 57 விழுக்காடு முறைசார்ந்த பணியாளர்கள் மாதம் ரூ.10,000க்கும் குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது. 2015ஆம் ஆண்டில் முறைசார்ந்த பணியாளர்களின் சராசரி மாதாந்தர ஊதியம் ரூ.13,562 ஆகவும், முறைசாரா பணியாளர்களின் சராசரி மாதாந்தர ஊதியம் ரூ.5,853 ஆகவும் இருந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. ஆகையால் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒப்பந்தப் பணிகளின் எண்ணிக்கை வலுவாக வளர்ச்சியடைந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

ஊதியத்தில் பெண்களின் நிலை

அகில இந்திய அளவில் 2015ஆம் ஆண்டில் பெண்கள் மாதத்துக்குச் சராசரியாக ரூ.5,200 ஊதியம் பெற்றுள்ளனர். ஆனால் ஆண்களோ ரூ.8,000 ஊதியம் பெற்றுள்ளனர். அதாவது ஆண்களைக் காட்டிலும் பெண்கள் 68 விழுக்காடு மட்டுமே ஊதியமாகப் பெற்றுள்ளனர். 2015ஆம் ஆண்டில் ரூ.5,000 வரை ஊதியம் பெற்ற ஆண்களின் விகிதம் 43 விழுக்காடாகவும், பெண்களின் விகிதம் 71 விழுக்காடாகவும் இருந்துள்ளது. ரூ.10,000க்கும் குறைவாக ஊதியம் பெற்ற ஆண்களின் விகிதம் 82 விழுக்காடாகவும், பெண்களின் விகிதம் 92 விழுக்காடாகவும் இருந்துள்ளது. இந்தப் பாலின இடைவெளி பெரிதளவில் விரிவடைகிறது.

சுய வேலைவாய்ப்பு பெற்ற அல்லது சிறு கடை உரிமையாளர்கள் அல்லது வீட்டிலேயே பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் பெண்கள் போன்றவர்களிடையே இந்த வேறுபாடு மிக அதிகமாக உள்ளது. வேளாண் பணிகளில் இந்த வேறுபாடு குறைவாக உள்ளது. வேளாண் பணிகளில் ஆண்களின் ஊதியத்தில் பெண்களுக்கு 86 விழுக்காடு வழங்கப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது. முதுகலைப் படிப்பு அல்லது அதற்கும் மேல் படித்த பெண்கள் ஆண்களின் ஊதியத்தில் 88 விழுக்காட்டைப் பெறுகின்றனர்.

தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்களிப்பு சுருங்கி வருவதற்கு சமூகக் கட்டுப்பாடுகள், வீட்டு வேலை போன்றவை பொதுவான காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படும். ஆனால் இந்த அறிக்கையில் அவையெல்லாம் ஆரம்ப நிலைக் காரணங்களாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மாறாக, வேலைவாய்ப்புகள் இல்லாததாலேயே பெண்களால் தொழிலாளர் சக்திக்குள் நுழைய முடியவில்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது.

சாதி வேறுபாடுகள்

குறைவான ஊதியம் வழங்கும் பணிகளில் (வேளாண்மை, மீன்பிடித்தல், கைவினைத் தொழில்) பட்டியலினம் மற்றும் பழங்குடி இனங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. இவர்களுக்கு மாதம் ரூ.4,000 முதல் ரூ.8,200 வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. நிர்வாகம், தொழில்நுட்பம், எழுத்தர் பணி போன்ற அதிக ஊதியம் (ரூ.13,000 முதல் ரூ.20,000) வழங்கும் பணிகளில் அவர்கள் மிகவும் குறைவாக இருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. அதுமட்டுமல்லாமல், உயர் சாதியினரின் பிரதிநிதித்துவம் குறைவான ஊதியப் பணிகளில் குறைவாகவும், உயர்வான ஊதியப் பணிகளில் உயர்வாகவும் உள்ளது.

“மறுபுறம், அரசு நிர்வாகத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியினரின் பிரதிநிதித்துவம் சிறப்பாக உள்ளது. பல ஆண்டுகளாக இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின் வெற்றியையே இது காட்டுகிறது” என்று இந்த அறிக்கை கூறுகிறது.

ஊதியத்தில் பாலின இடைவெளியை விட சாதிய இடைவெளியே மிகவும் அதிகமாக உள்ளது. உயர் சாதியினரின் ஊதியத்தில் தாழ்த்தப்பட்டோர் 56 விழுக்காட்டையும், பழங்குடியினர் 55 விழுக்காட்டையும், பிற்படுத்தப்பட்டோர் 72 விழுக்காட்டையும் ஊதியமாகப் பெறுகின்றனர்.

நன்றி: இந்தியா ஸ்பெண்ட்

தமிழில்: அ.விக்னேஷ்

மின்னஞ்சல் முகவரி: [email protected]

நேற்றைய கட்டுரை: அலுவலகங்களில் பெண்களின் நிலை?

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018