மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

சிபிஐ இயக்குனர் கொள்கை முடிவு எடுக்கத் தடை!

சிபிஐ இயக்குனர் கொள்கை முடிவு எடுக்கத் தடை!

சிபிஐயின் இடைக்கால இயக்குனராக நள்ளிரவில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவ் முக்கிய கொள்கை முடிவுகள் எதுவும் எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 26) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐக்குள் கடந்த சில நாட்களாக நடந்து வரும் குழப்பங்கள் மத்திய அரசின் மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. ரஃபேல் ஊழல் வழக்கை விசாரிக்கத் தொடங்கியதால்தான் சிபிஐயின் இயக்குனர் அலோக் வர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகிறது காங்கிரஸ் கட்சி. மேலும் நாட்டிலுள்ள அனைத்து சிபிஐ அலுவலகங்கள் முன்னும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. மத்திய பாஜக அரசு சிபிஐயை தனது கைப்பாவையாக பயன்படுத்தி சிபிஐ இயக்குனரை மாற்றியதை கண்டித்தும் சிபிஐயின் தன்னாட்சி அதிகாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் இன்று இந்த ஆர்பாட்டம் நடைபெறுகிறது.

டெல்லி சிபிஐ அலுவலகத்தை நோக்கி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேரணியாகச் சென்று போராட்டம் நடத்தினார். தமிழகத்திலும் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இதற்கிடையில் சிபிஐயின் இயக்குனர் பதவியில் இருந்து தன்னை விடுவித்ததை எதிர்த்தும், நாகேஸ்வர ராவை இடைக்கால இயக்குனராக நியமித்ததை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவோடு, ‘காமன் கேஸ்’ என்ற தொண்டு நிறுவனமும் சிபிஐ இயக்குனர் மாற்றப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அலோக் வர்மாவுக்காக மூத்த வழக்கறிஞர் நாரிமன் ஆஜரானார். “சிபிஐ இயக்குனர் என்பவர் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட கமிட்டியால் நியமிக்கப்படுபவர். அவரை மத்திய அரசு இரவோடு இரவாக மாற்றுவதற்கு அதிகாரம் இல்லை” என்று வாதாடினார்.

“மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கு எதிரான புகார்களை விசாரித்து இரு வாரங்களுக்குள் முடிக்க வேண்டும். இந்த விசாரணையை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக் கண்காணிப்பார்” என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், மேலும், “ இடைக்கால சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கும் நாகேஸ்வர ராவ் முக்கிய கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது. தவிர அவர் நியமிக்கப்பட்ட 23 ஆம் தேதியில் இருந்து சிபிஐ புலனாய்வு அதிகாரிகளை இடம் மாற்றுவது, குறிப்பாக அலோக் வர்மாவின் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களில் இருந்த அதிகாரிகளை இடம் மாற்றல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை சீலிடப்பட்ட கவரில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018