மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

ரஜினியை விமர்சித்த திமுக!

ரஜினியை விமர்சித்த  திமுக!

மன்றத்தினரை எச்சரித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இதனை விமர்சித்து திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த நிலையில், இது திமுகவை பாதிக்கும் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டது. இதற்கிடையே திமுக தலைமை, கட்சி மேடைகளில் ரஜினியை விமர்சிக்குமாறு நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து திமுக மேடைகளில் கமலை விட ரஜினி கடுமையாகத் தாக்கப்படுகிறார்.

சில நாட்களுக்கு முன்பு மக்கள் மன்றத்தினருக்கு எச்சரிக்கை விடுத்த ரஜினிகாந்த், “30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழுத் தகுதி ஆகிவிட முடியாது என்றும், சமூக நலனுக்காக நம்முடன் சேர்ந்து செயல்பட விரும்பும் பொதுமக்களுக்கு பொறுப்புகளை வழங்கி நாம் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்” என்பன உள்பட பல்வேறு விஷயங்களைத் தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கையை வைத்து ரஜினியை திமுகவின் அதிகாரபூர்வப் பத்திரிகையான முரசொலி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. முரசொலியின் சிலந்தி பகுதியில் ‘ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப் மே.... மே.... மே....’ என்னும் தலைப்பில் இன்று (அக்டோபர் 26) வெளிவந்துள்ள கட்டுரையில், ரஜினி அறிக்கையின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்டு அதற்கு அப்பாவி ரசிகன் பதில் சொல்வது போல விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது ரஜினியின் அறிக்கையில், “முதலில் நீங்கள் உங்கள் தாய், தந்தை மற்றும் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். அதன் பிறகுதான் மற்றவை எல்லாம்” என்று கூறியிருந்தார்.

இதற்கு அப்பாவி ரசிகன், “ஊருக்குத்தான் உபதேசம், உனக்கில்லையா எனக் கூறியதுதான் எங்களுக்கு இதனை நினைவூட்டுகிறது. உங்கள் குடும்பத்தை மனைவி மக்களைப் பார்த்துக்கொண்டு நீங்கள் இருக்கவேண்டியதுதானே. பின் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என மற்றவர்கள் எங்களைப் பார்த்துக் கேட்டால் என்ன பதில் சொல்வது தலைவா? வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’னு சொல்லி வர்றதுக்கு முன்பே எங்களுக்கு ஆப்பு வச்சிட்டியே தலைவா. இது சரிதானா” என்பதாக பதில் எழுதப்பட்டுள்ளது.

“கடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின்போதே, நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்து பதவி வாங்கணும், பணம் சம்பாதிக்கணும்’ என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன், அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகிவிடுங்கள் என்று நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன்” எனவும் தனது அறிக்கையில் சொல்லியிருந்தார் ரஜினி.

அதற்கு, “அரசியலுக்கு வருவது பதவி வாங்க அல்ல; என்றால் வரும் சட்டசபை தேர்தலில் எல்லா இடங்களிலும் போட்டியிடுவோம் என அறிவித்தது ஏன் தலைவா? பதவிக்காக அரசியல் இல்லை என்றால் பெரியாரைப் போல கட்சி ஆரம்பித்து கொள்கையிலே உறுதியாக நின்று போராட வேண்டியதுதானே. உங்களுக்கு மட்டும் முதல் அமைச்சர் பதவி வேண்டும், நாங்கள் எல்லாம் அதற்கு நாயாய் பேயாய் உழைக்க வேண்டும், ஆனால் நாங்கள் மட்டும் பதவி ஆசைப்படக் கூடாது என்பது எந்த ஊர் நியாயம் தலைவா?” என அப்பாவி ரசிகன் பதில் கூறுவதுபோல கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

இதுவரை திமுக தரப்பிலிருந்து ரஜினியைப் பற்றி மறைமுக விமர்சனமே முன்வைக்கப்பட்டுவந்த நிலையில் தற்போது பகிரங்கமாக விமர்சித்து எழுதப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திர திருமண மண்டபத்தில் இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக ரஜினிகாந்த், மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். இதில் திமுகவின் விமர்சனம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018