விவி மினரல்ஸ்: உயர் நீதிமன்றத்தில் முறையீடு!


சட்டவிரோதமாக விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜனை அடைத்து வைத்துள்ளதாக, அந்நிறுவனத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது விவி மினரல்ஸ் நிறுவனம். தாது மணல் உற்பத்தியைப் பிரதானமாகக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.வைகுண்டராஜன். இவரது சகோதரர்கள் குடும்பத்தினரும் சில நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். சர்க்கரை தயாரிப்பு, குடிநீர், ஹோட்டல், ஸ்பின்னிங், ஊடகம் உட்படப் பல்வேறு துறை சார்ந்து இந்நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
நேற்று (அக்டோபர் 25) காலை விவி மினரல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் உட்பட 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திசையன்விளை, சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், காரைக்கால், விசாகப்பட்டினம், ஸ்ரீகா குளம் உட்படப் பல்வேறு இடங்களில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது. மத்திய நிதியமைச்சகத்தின் உத்தரவுப்படி, இந்த வருமான வரிச் சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியானது. முறைகேடாகச் சேர்க்கப்பட்ட வருமானத்தை வேறு தொழில்கள் மற்றும் வெளிநாடுகளில் முதலீடு செய்தது, மூன்று ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தாதது உட்படப் பல்வேறு காரணங்கள் இதன் பின்னிருப்பதாகத் தகவல் வெளியானது.
இன்று (அக்டோபர் 26), இரண்டாவது நாளாக விவி மினரல்ஸ் நிறுவனத்தில் சோதனை தொடர்ந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வல்லான்விளை, திசையன்விளை, கனகபுரம், ஆத்தூர், கீரைக்கான் தட்டு ஆகிய ஊர்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் விவி மினரல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.