அரசியல் படத்தில் யாஷிகா


காதலும் அரசியலும் கலந்து உருவாகியுள்ள பைலட் படம் ஒன்றில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.
துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து எனத் தமிழில் ஒன்றிரண்டு படங்களில் நடித்திருந்தாலும் யாஷிகா ஆனந்த்துக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிதான் தமிழ் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுத்தந்தது. தற்போது அவர் ‘பைலட்’ படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்துள்ளார். முழுநீளத் திரைப்படத்தைவிடக் குறைவான கால அளவில் உருவாகும் படங்கள் பைலட் படங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ‘என்னை மாற்றும் காதலே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை விஜய் தங்கையன் இயக்குகிறார். தீபக் பரமேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
பிரிட்டிஷ் காலப் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக அமைதி வழியில் மக்கள் போராடுகின்றனர். போராட்டத்தைக் காவல் துறை கலவரமாக மாற்றி முடிவுக்குக் கொண்டுவருகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய கால அரசியலைப் பேசினாலும் சமகாலத் தமிழக அரசியலோடு பொருத்திப்பார்க்கும் விதமாக இது உருவாகியுள்ளது. தீவிர அரசியலைப் பேசினாலும் காதலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகளும் படத்தின் தலைப்பும் அதை உறுதிப்படுத்துகின்றன.