கோவையில் மர்மக் காய்ச்சல்: 3 பேர் பலி!


கோவையில் மர்மக் காய்ச்சலுக்கு இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் வைரஸ், டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தைச் சேர்ந்த 7 வயது நிரம்பிய இரட்டைக் குழந்தைகள், கடந்த வாரம் டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகினர். மதுரையில் பன்றிக் காய்ச்சலுக்கு மூன்று பேர் பலியாகியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலுக்கு 4 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அங்குள்ள மக்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர். திருவள்ளூரில் மர்மக் காய்ச்சலுக்கு நித்தீஷ்வீரா, அனிதா என்ற இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 26) கோவையில் மர்மக் காய்ச்சலுக்கு இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் மர்மக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ராமமூர்த்தி (50) என்பவரும், தருண் என்ற ஒன்றரை மாத குழந்தையும், முகமது அப்துல் என்பவரின் இரண்டரை மாதக் குழந்தையும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அப்துல் குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.