வடசென்னை: படக்குழு எடுத்த திடீர் முடிவு!


தனுஷ் நடித்துள்ள வடசென்னை படம் தொடர்பான முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரகனி, அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி, பவன் உள்ளிட்டோர் நடித்திருந்த படம் வடசென்னை. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இந்தப் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொண்டிருந்தார். லைக்கா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டிருந்த இந்தப் படத்தை தனுஷே தயாரித்தும் இருந்தார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அக்டோபர் 17ஆம் தேதி இப்படம் வெளியானது. கலவையான விமர்சனத்தையே பரவலாகப் பெற்ற நிலையில், படத்தில் வடசென்னை குறித்து சில காட்சிகள் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன எனக் கூறி இந்தப் படத்திற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் கிளம்பின.
அந்த எதிர்ப்புகள் படக்குழுவின் காதுகளை எட்டவே இயக்குநர் வெற்றிமாறன் பகிரங்கமாக தனது வருத்தத்தைத் தெரிவித்தார். எந்த மக்களையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை எனும் விதமாகக் கூறிய அவர், சர்ச்சைக்குரிய சில காட்சிகள் விரைவிலேயே படத்திலிருந்து நீக்கப்படவிருப்பதாகவும் கூறினார்.
அந்த வகையில் தற்போது படத்தில் சில காட்சிகள்,குறிப்பாக அமீர் மற்றும் ஆண்ட்ரியா இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அதற்குப் பதிலாக அமீர், ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட இரண்டு காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு தற்போது தெரிவித்துள்ளது.