சரிவுப் பாதையில் மின் உற்பத்தி!


இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் அனல் மின் உற்பத்தியில் புதிதாக இணையும் நிறுவனங்களின் எண்ணிக்கை 60 விழுக்காடு சரியுமென்று கிரிசில் ஆய்வறிக்கை கூறியுள்ளது.
கிரிசில் ஆய்வறிக்கையில் இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘இந்திய மின் உற்பத்தித் தொகுப்பில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 35 கிகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் மட்டுமே இணையும். முந்தைய ஐந்து ஆண்டுகளில் 88 கிகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் இந்திய மின் தொகுப்பில் புதிதாக இணைந்திருந்தன. எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளில் 60 விழுக்காடு அளவுக்கு புதிய அனல் மின் நிலையங்கள் உருவாக்கம் சரிவடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2017-18 நிதியாண்டில் 9.38 கிகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் புதிதாக இணைந்துள்ளன. இதில் ஒன்றிய மின் தொகுப்பில் 3.5 கிகா வாட்டும், மாநில மின் தொகுப்பில் 1.26 கிகா வாட்டும், தனியார் மின் தொகுப்பில் 4.28 கிகா வாட்டும் அடங்கும். 2018-19 நிதியாண்டில் ஒன்றிய மின் தொகுப்பில் 4.28 கிகா வாட், மாநில மின் தொகுப்பில் 2.79 கிகா வாட், தனியார் மின் தொகுப்பில் 1.93 கிகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் புதிதாக இணையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அடுத்தடுத்து வரும் 3 நிதியாண்டுகளில் ஒன்றிய மின் தொகுப்பில் மட்டுமே புதிய அனல் மின் நிலையங்கள் ஏற்ற இறக்கத்துடன் இணையும் சூழலில், மாநில அரசின் மின் தொகுப்பிலும், தனியார் மின் தொகுப்பிலும் புதிய அனல் மின் நிலையங்களின் உற்பத்தித் திறன் மிகப் பெரிய சரிவையே சந்திக்கும். எடுத்துக்காட்டாக 2021ஆம் நிதியாண்டில் மாநில மின் தொகுப்பில் புதிய அனல் மின் நிலையங்களின் இணைப்பு 1 கிகா வாட்டாக சரிவடையும் எனவும், 2022ஆம் நிதியாண்டில் தனியார் மின் தொகுப்பில் புதிய அனல் மின் நிலையங்களின் இணைப்பு பூஜ்ஜியத்தை அடைந்துவிடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.’ கிரிசில் நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கையை லைவ் மிண்ட் ஊடகம் பிரத்தியேகமாக வெளியிட்டுள்ளது.