மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

பாஜகவுக்கு எதிராக மாபெரும் பேரணி!

பாஜகவுக்கு எதிராக மாபெரும் பேரணி!

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அப்பாற்பட்ட கட்சிகள் இணைந்த மாநில அளவிலான பேரணி இடதுசாரிகள் சார்பாக பாட்னாவில் நேற்று (அக்.25) நடைபெற்றது.

பாட்னாவில் "பாஜகவை வீழ்த்துவோம், நாட்டைக் காப்பாற்றுவோம்" பேரணிக்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று முன்தினம் மாலை முதலே மக்களும், தொண்டர்களும் குவிந்த வண்ணம் இருந்தார்கள். இதனால் இப்பேரணியில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மக்கள் பங்கேற்று இருப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது.

இடதுசாரிகள் சார்பாக சிபிஎம் நாடாளுமன்ற தலைவர் முகமது சலீம், சிபிஐ (எம்எல்) பொதுச் செயலாளர் பட்டாச்சாரியார், சிபிஎம் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜேஎன்யூ முன்னாள் மாணவ சங்க தலைவர் கன்னையா குமார் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இந்தப் பேரணியில் இடதுசாரிகள் மட்டுமின்றி பல்வேறு தேசிய தலைவர்களும் கலந்துகொண்டனர். குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேசஷ்வி பிரசாத் யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ், பீகார் முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தானி அவம் மோர்சாவின் நிறுவனருமான ஜித்தன் ராம் மற்றும் பலர் பங்கேற்றார்கள்.

இதனை தொடர்ந்து காந்தி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தலைவர்கள் பங்கேற்றுப் பேசியதாவது:

குலாம் நபி ஆசாத்

"நாட்டிலேயே முதன்முறையாக முதலமைச்சர் கடத்தப்பட்டு இருப்பதை நான் பீகாரில் தான் பார்க்கிறேன். நிதிஷ் பாஜகவால் கடத்தப்பட்டு இருக்கிறார். இந்தக் காந்தி மைதானம் பகுதியில் மிகப் பெரிய கூட்டணி கூடியுள்ளது. இந்த மைதானத்தில் தான் மக்கள் நிதிஷை தேர்ந்தெடுத்தார்கள். இன்று மீண்டும் மக்கள் புதிய முடிவை எடுக்கவேண்டும்"

கன்னையா குமார்

"பாஜகவை வீழ்த்துவது கடினமான காரியம் இல்லை. நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம். பாஜகவை வீழ்த்தி விட்டு, நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

நான் சட்டத்தையும், மருத்துவர்களையும் மதிப்பவன். ஆனாலும் என் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். நாங்கள் அமித் ஷாவின் ஊழல் செய்த மகன்கள் இல்லையே!

பீகாரில் பாஜகவால் குற்றங்கள் நடப்பது இல்லை என்று அமைச்சர் கூறுகிறார். பாஜகவால் குற்றங்கள் நிகழவில்லை என்றால் வேறு யாரால் குற்றங்கள் நடைபெறுகிறது?

நாம் ஒற்றுமையாய் செயல்பட்டு போராட வேண்டியது மிக முக்கியம். போர்க் களத்தில் ஒற்றுமையாய் இருக்க வேண்டியது அவசியமாகும். தேவைப்படும் மாற்றங்கள் அனைத்தையும் பேரணியில் பேசிவிட்டோம். இதற்கு மேல் வித்தியாசமாகப் பேச தேவையில்லை"

தீபங்கர் பட்டாச்சார்யா

மத்திய அரசு ஊடகத்தின் மேல் தாக்குதல் நடத்துகிறது. மத்தியில் ஆட்சியை பாஜக பிடித்தது ஒரு விபத்தால் தான். இந்தப் பேரணி மீண்டும் அப்படி ஒரு விபத்து நேராமல் தடுத்துவிடும். நாட்டில் இயக்கம் தோன்றிட கூட்டணி தேவை. அது இன்று பீகாரால் முன்னெடுக்கப்படுகிறது. இடதுசாரிகளும், ஜனநாயகவாதிகளும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். பீகார் எப்போதுமே ஒரு ஆய்வுக் கூடம் போலத் தான். மீண்டும் நாம் ஒரு புதிய ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும்"

சரத் யாதவ்*

"இன்றைய சூழ்நிலையில் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்து அரசாங்கத்தை அமைத்ததன் மூலம் நிதிஷ் குமார் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்துவிட்டார். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்தை முற்றிலுமாக இந்தியாவை விட்டு வெளியேற்றி விடுவார்கள்"

முகமது சலீம்

"எதிர்க் கட்சிகளுடனான கூட்டணி மட்டும் போதாது. அரசியல் தளத்திலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். நாட்டு மக்கள் போராட்டத்திற்கு தயாராக இருக்கிறார்கள். பீகாருக்கு அதில் முக்கிய பங்கு இருக்கிறது"

இவ்வாறு பேசினார்கள்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018