மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

மாப்பிள்ளைன்னா அது மாவட்டச் செயலாளர்தான்!

மாப்பிள்ளைன்னா அது மாவட்டச் செயலாளர்தான்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் 2019- மக்களவைத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டிருக்கிற தொகுதிப் பொறுப்பாளர்களின் கூட்டம், மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் நேற்று (அக்டோபர் 25) காலை 10 மணியளவில் தொடங்கியது.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, மாநில மகளிர் அணி புரவலராக மிகச்சிறப்பாக பணியாற்றிய திருமதி. நூர்ஜகான் பேகம் அவர்களுடைய மறைவுக்காக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் தொகுதிக்கு இரண்டு பேர் வீதம் பொறுப்பாளர்கள் கட்சித் தலைவர் ஸ்டாலினால் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நியமனம் வெளியானபோதே திமுகவின் சீனியர் மாவட்டச் செயலாளர்கள் இதை ரசிக்க வில்லை. ’நாம இருக்கும்போதே இது என்ன பொறுப்பாளரு? அதிமுக பாணியில இருக்கே?’ என்றெல்லாம் அவர்கள் தங்கள் வட்டாரத்தில் வெளிப்படையாகவே திமுக தலைமையின் நடவடிக்கையை விமர்சித்தனர்.

“வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை தொகுதி பொறுப்பாளர்களாக நியமித்திருப்பது எப்படி சரியாக வரும்?. தொகுதி நிலவரம், தொகுதியில் செல்வாக்கான மனிதர்கள், ஜாதிய அமைப்புகள் குறித்து வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நிர்வாகிகளுக்கு என்ன தெரிந்துவிடப் போகிறது? வெளியூரில் இருந்து வந்து எப்படி முகாமிட்டு அவர்கள் வேலை பார்க்க முடியும்? அப்படி வெளியூரில் இருந்து வருகின்றவர்கள் சொல்வதை உள்ளூர் நிர்வாகிகள் அத்தனை பேரும் அப்படியே கேட்டு செயல்படுவார்களா? இப்படி நடைமுறைக்கே சாத்தியமற்ற ஒன்றுதான் இந்த அறிவிப்பு” என்பது திமுகவினரின் குமுறல்.

கூட்டம் தொடங்கியதும் முதல் குண்டைப் போட்டது சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் தான்.

“தலைவர் அவர்களே... நீங்கள் உத்தரவு போடுகிறீர்கள். மாவட்டச் செயலாளர்களாகிய நாங்க அதை செயல்படுத்துறோம். தலைவராக இருக்கும் நீங்க முதல்வராகவும் வரணும்னு கடுமையா உழைக்கிறோம். ஆனா, இந்த பொறுப்பாளர்கள் அப்படி இப்படினு போடுறது எதுக்காகனு தெரியலை. நாங்க சரியா செயல்படலையா? மாவட்டச் செயலாளர்களை மீறி பொறுப்பாளர்கள் என்ன செய்யப் போறாங்க? அவங்களோட பொறுப்பும் அதிகாரமும் என்னானு ஒரே குழப்பமா இருக்கு” என்று கொளுத்திப் போட்டுவிட்டார்.

இதையடுத்து கூட்டத்தில் சலசலப்பு கிளம்பியது. ஜெ.அன்பழகனின் இந்த பேச்சை எதிர்பார்க்காத சில சீனியர் மாவட்டச் செயலாளர்கள், ‘ஆமாங்க.... அன்பழகன் கேக்கறதுல ஒரு நியாயம் இருக்கு. பொறுப்பாளர்கள்னு போட்டு தேர்தல் பணி பாதிச்சுடக் கூடாது” என்று சலசலப்பைக் கிளப்பினர்.

ஆங்காங்கே கூட்டத்தில் இதுபற்றி முணகல்களும் சலசலப்புகளும் எழுந்தன. உடனே ஸ்டாலின் தன் அருகே இருந்த துரைமுருகனைப் பார்த்தார்.

உடனே உட்கார்ந்தபடியே பேசிய துரைமுருகன், “இதோ பாருங்க... ஒவ்வொரு எம்பி சீட்டையும் வெற்றி பெறுவதற்காகத்தான் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்காங்க. இதுல அதிகாரம் எங்கயும் பறிபோகலை. ஏம்ப்பா அன்பு... கல்யாணத்துல என்ன நடக்குது?

வாழைமரம் கட்டுறது, சமையல் வேலை பாக்குறது, வரவேற்குறதுனு ஆயிரம் வேலை இருக்கு. எல்லாத்தையும் மாப்பிள்ளையா பாத்துக்கிட்டிருக்காரு? தாலி கட்ற வேலைதான் மாப்பிள்ளையோடது . கல்யாணத்துக்கு ஒத்தாசைக்கு ஆட்களைப் போட்டா மாப்பிள்ளைக கோவப்படலாமா? ஆயிரம் பேர் வந்தாலும் தேர்தல்ங்குற கல்யாணத்துக்கு மாவட்டச் செயலாளரான நீங்கதான் மாப்பிள்ளை. பொறுப்பாளர்கள்லாம் உங்களுக்கு ஒத்தாசைக்கு நியமிக்கப்பட்டவங்கதான். அவங்களை சரியா பயன்படுத்திக்கங்க” என்று விளக்கம் சொல்லி இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அந்த நேரம் பார்த்து தகுதி நீக்கத் தீர்ப்பில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று நீதிபதி உத்தரவிட்ட தகவல் அரங்கத்துக்குள் வந்து சேர்ந்தது. இதைக் கேள்விப்பட்டதும் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிய துரைமுருகன், ‘கோவிந்தா கோவிந்தா...’ என்றார் தனது பாணியில்.

அதன் பின் இதுபற்றியே பலரும் பேசிக்கொள்ள ஸ்டாலின் பிறகு எல்லாருக்கும் அறிவுரை சொல்லிப் பேசினார்.

“பொறுப்பாளர்களுக்கு மாவட்டச் செயலாளர்களும், மாவட்டச் செயலாளர்களுக்கு பொறுப்பாளர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இது தலைமையின் உத்தரவு” என்று பேசினார் ஸ்டாலின்.

ஆனாலும் இந்த விவகாரத்தில் மா.செ.க்கள் இடையே இருக்கும் மனக் கசப்பு நேற்றைய கூட்டத்தில் வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. துரைமுருகன் பாஷையில் சொல்வதானால் தேர்தல் என்னும் திருமணத்தில் மாப்பிள்ளைகளான மாவட்டச் செயலாளர்களும், ஒத்தாசை செய்ய வரும் பொறுப்பாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் கல்யாணம் நல்லபடியாக முடியும்!

-ஆரா

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018