மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

18 பேருடன் தினகரன் இன்று ஆலோசனை!

18 பேருடன் தினகரன் இன்று ஆலோசனை!

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து 18பேருடன் மதுரையில் தினகரன் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று (அக்டோபர் 25) தீர்ப்பு வழங்கிய மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன்,“தகுதி நீக்கம் சட்ட விரோதமானது இல்லை, சபாநாயகர் முடிவில் தவறில்லை. 18 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் உத்தரவு செல்லும்” என்று தீர்ப்பளித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், “அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 18 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களது முடிவின்படி செயல்படுவோம்” என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையே தினகரன் நேற்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்றார். அதே வேளையில் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மதுரை சென்றனர்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று (அக்டோபர் 26) தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் மதுரையிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தினகரன் ஆலோசனை நடத்தவுள்ளார். ஆலோசனையில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா அல்லது நேரடியாக இடைத் தேர்தலை சந்திப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது. தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், “வழக்கை நடத்திக்கொண்டு, தேர்தலையும் சந்திக்கலாம் என்னும் மூன்றாவது வாய்ப்பும் உள்ளது” என்று தெரிவித்திருந்த நிலையில், அதுபற்றியும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மதுரையில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “நல்ல தீர்ப்பு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில், அது ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. 18பேரும் நினைத்திருந்தால் ஆட்சியாளர்களுடன் இணைந்து எவ்வளவோ பலன்களை அனுபவித்திருக்க முடியும். ஆனால் பல தியாகங்களை செய்துவிட்டு இன்று எங்களுடன் நிற்கிறார்கள். அவர்களிடம் ஆலோசித்த பிறகு நாளை (இன்று) முடிவை அறிவிக்கிறேன். இடைத் தேர்தல் வந்தால் 20 தொகுதிகளிலும் நாங்கள்தான் நிச்சயம் ஜெயிப்போம். இந்த ஆட்சி தொடர்ந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதனை எப்படி கையாள்வது என்பது எனக்குத் தெரியும். வானம் ஏறி வைகுண்டம் போனதாக நினைக்கிறார்கள். ஆனால் திரிசங்கு சொர்க்கத்தில்தான் நிற்கிறார்கள். அதனை எப்படி பூமிக்கு இறக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்” என்று தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018