மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

சிறப்புப் பார்வை: சிபிஐ இயக்குநரின் கட்டாய விடுப்பு பின்னணி!

சிறப்புப் பார்வை: சிபிஐ இயக்குநரின்  கட்டாய விடுப்பு  பின்னணி!

சேது ராமலிங்கம்

நாட்டிலுள்ள சாதாரண மக்களிலிருந்து உயர்மட்ட அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரை உள்ளூர் போலீசை நம்புவதில்லை. குற்றச் சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் சிபிஐ விசாரணை வேண்டும் என்றே கோரிக்கை வைப்பது வழக்கமாகிவிட்டது. அதேபோன்று நாட்டின் தலைவர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு தொடங்கி, தற்போதைய ஆணவக் கொலைகள், போலீஸ் டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மர்ம மரணம் வரை அனைத்து வழக்குகளுக்கும் மக்கள் சிபிஐயின் விசாரணையையே நம்புகின்றனர். இதற்குக் காரணம் சிபிஐ, குற்றவாளிகளின் செல்வாக்குக்கும் அரசியல் அதிகாரங்களுக்கும் அடி பணியாது, சிபிஐ ஊழல் புரியாது, சிபிஐ புனிதமானது, அதிபுத்திசாலிகளைக் கொண்டது என்றெல்லாம் மக்கள் மத்தியில் நம்பிக்கைகள் உள்ளன. இந்த நம்பிக்கைகளையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டன தற்போது சிபிஐயில் நடந்துவரும் நிகழ்ச்சிகள்.

விசாரணைகளின் கதி

மொய்ன் குரேஷி என்ற இறைச்சி ஏற்றுமதியாளர் மீதான சிபிஐயின் வழக்கிலிருந்து விடுவிக்க சிபிஐயின் சிறப்பு இயக்குநரான ராக்கேஷ் அஸ்தானா லஞ்சத் தொகையாக ரூ.5 கோடி பெற்றுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டுப் பதவியிலிருந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். இவர்தான், குரேஷி பண மோசடி செய்தார் என்று விசாரணை நடத்தியவர். இவர் குரேஷியின் இடைத்தரகர் மூலம் பேரம் பேசியதற்கான ஆதாரங்கள் அனைத்தும் அலோக் வர்மாவிடம் இருந்தன. பிரதமர் மோடியால் நியமிக்கப்பட்டவர்தான் அஸ்தானா என்பது குறிப்பிடத்தக்கது.

குரேஷியின் வழக்கிலேயே 5 கோடி லஞ்சம் பெற்றவர் எனக் குற்றம்சாட்டப்படும் அஸ்தானாவின் வசம்தான் பல மோசடிப் பேர்வழிகளின் வழக்குகளின் விசாரணைகள் உள்ளன. வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்து வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றவர்களான விஜய் மல்லையா (ரூ.9,000 கோடி), நீரவ் மோடி (ரூ.13,800 கோடி) ஆகியோரின் வழக்குகளின் விசாரணைகளும் உள்ளன.

மோடிக்கு நெருக்கமான அஸ்தானாவின் வழக்கை விசாரித்து வந்தவர் என்பதால் மட்டும்தான் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டாரா? இதை ஆராய்ந்து பார்க்கும்போது அதையும் தாண்டிய பின்னணி உள்ளது தெரியவருகிறது.

முக்கிய ஏழு வழக்குகள்

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கான முக்கிய காரணமாக இருந்தவை முக்கியமான ஏழு வழக்குகளாகும். இதி்ல் முதன்மையானது ரஃபேல் ஊழல் வழக்காகும். இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர்களான அருண்சௌரி, யஷ்வந்த் சின்ஹா மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், மொபைலில் நடந்த பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றை அலோக் வர்மா சேகரித்துவந்தார். இது பாஜகவின் உயர் அதிகார மட்டத்துக்கு எரிச்சலை மூட்டியிருக்கலாம்.

இரண்டாவது அஸ்தானாவுக்கும் வர்மாவுக்கும் இடையில் முரண்பாடுகள் உருவாகக் காரணமாக இருந்த ஒரு வழக்கின் நடைமுறை. பிரதமரின் செயலாளரான பாஸ்கர் குல்பே நிலக்கரி ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. இந்தப் புகாரில் பாஸ்கரின் பங்கு என்ன என்பது குறித்து, புலனாய்வு செய்தபோது அவரை குற்றம்சாட்டப்பட்டவராகச் சேர்க்க வேண்டும் என்று புலனாய்வுக் குழுவினர் (அலோக் வர்மா தரப்பு) கூறினர். ஆனால், அஸ்தானா தரப்பு அவரை சாட்சியாக மட்டும் சேர்த்தால் போதுமானது என்று வற்புறுத்தினர். இதில் மோடியின் செயலாளர் என்ற வகையில் பாஸ்கரைக் காப்பாற்ற மோடியினால் நியமிக்கப்பட்ட சிபிஐயின் சிறப்பு இயக்குநர் அஸ்தானா முயற்சிகளில் ஈடுபட்டதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மருத்துவ கவுன்சில் ஊழல்

இந்திய மருத்துவக் கவுன்சிலில் நடந்த லஞ்ச ஊழல் வழக்கில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஐ.எம்.குடிசி சம்பந்தப்பட்டிருந்தார். அவர் மீதான குற்றப்பத்திரிகையானது தயார் செய்யப்பட்டு வர்மாவின் கையெழுத்திற்காகக் காத்திருக்கிறது.

அலகாபாத்தைச் சேர்ந்த இன்னோர் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.என்.சுக்லா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் ஊழல் புரிந்ததாக விசாரிக்கப்பட்டு வந்தார். இவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை நடத்தப்பட்டதால் இவர் விடுப்பில் செல்ல வைக்கப்பட்டார். இதுதொடர்பான தொடக்க நிலை விசாரணை மேற்கொள்ள தகுந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. அந்த ஆவணங்களில் வர்மா கையெழுத்திடுவதாக இருந்தது.

தேர்தலுக்கு முன் முடக்குவது

வர்மாவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் மற்ற வழக்குகளில் முக்கியமானவை. நிதி மற்றும் வருவாய்த் துறையின் செயலர் ஹஸ்முக் ஆதியா மீதான புகார்கள். இந்தப் புகார்கள் பாஜக எம்.பி.யான சுப்பிரமணிய சுவாமியால் தாக்கல் செய்யப்பட்டவை. இதில் ஹஸ்முக் ஆதியா அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்துப் பொதுத் துறை நிறுவனங்களில் வேலைகளை வாங்கிக் கொடுப்பதற்காக இடைத்தரகராகச் செயல்பட்டார் என்பதுதான் குற்றச்சாட்டாகும். பிற வழக்குகளைப் பொறுத்தவரை அஸ்தானா குரேஷியிடமிருந்து லஞ்சம் வாங்கிய வழக்கு, சாண்டாரேசா மற்றும் ஸ்டெர்லிங் பயோடெக் ஆகிய நிறுவனங்களில் லஞ்சம் வாங்கியதான வழக்கு ஆகியவை முக்கியமானவை. இந்த வழக்குகளில் நடைபெற்றுவந்த விசாரணைகளை முடக்குவதற்காகவே சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதையெல்லாம் தாண்டி முக்கியமானது நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பாஜக ஊழல்கள் தொடர்பான வழக்குகள் வெளிச்சத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான்.

சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர்களின் மீதான சிறப்பு புலனாய்வுக்குழுவின் விசாரணை முடிந்தவுடன் இவர்கள் திரும்ப பதவியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் செய்திகள் கசிந்துள்ளன. ஆனால், தேர்தல்களை முன்னிட்டு இந்த வழக்குகளின் விசாரணைகள் பல காலம் நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது. சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் பதவிக் காலம் வரும் ஜனவரியில் முடிவுறுகிறது. தேர்தலுக்குப் பின்னரே புதிய இயக்குநர் நியமிக்கப்படுவார். அதுவரை தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவ் பதவியில் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதுவரை சிபிஐக்குள் நடந்த நிகழ்ச்சிகள் அந்த நிறுவனம் குறித்த மாய பிம்பங்களைத் தகர்த்து விட்டன. அது ஆளும்கட்சியின் அதிகாரத்துக்கும் பெரு முதலாளிகளுக்கும் அடிபணிந்து சேவை புரியும் ஓர் அமைப்புதான் என்பது தெளிவாகியுள்ளது. பெரும் மோசடிப் பேர்வழிகளை தப்பவைக்க அது எந்த அளவுக்கும் இறங்கி பணிபுரியும் என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது. இந்த நிலையில், சிபிஐ என்ற பிம்பத்தின் சேதத்தைச் சரிசெய்யும் பாஜக அரசின் சமாளிப்பு வேலைகள் எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்பது கேள்விக்குறியே.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018