மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

சிபிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் போராட்டம்!

சிபிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் போராட்டம்!

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி நாடு முழுவதுமுள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு இன்று (அக்டோபர் 26) போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மத்தியப் புலனாய்வு அமைப்பின் இயக்குநராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்ச புகார் தொடர்பாக மோதல் ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் அந்தந்தப் பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களைக் கட்டாய விடுப்பில் அனுப்பியது. தொடர்ந்து, சிபிஐயின் இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதால்தான் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மாற்றப்பட்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். ரஃபேல் விமானம் குறித்து யார் விசாரணை நடத்தினாலும் இதுதான் கதி என்று பிரதமர் மோடியின் நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து அலோக் வர்மாவைக் கட்டாய விடுப்பில், அனுப்பியதற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் அனைத்து காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், மாநிலத் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், ‘சட்டவிரோதமாகவும், அரசியல் அமைப்புக்கு எதிராகவும் சிபிஐ இயக்குநரைக் கட்டாய விடுப்பில், மோடி - அமித் ஷா கூட்டணி அனுப்பியது, இந்தியாவையும் சிபிஐ அமைப்பையும் அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. ரஃபேல் விவகாரம் தொடர்பான பயத்தினால்தான் சிபிஐ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘ரிசர்வ் வங்கி, அமலாக்கத் துறை, மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம், தேர்தல் ஆணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்டவற்றை பாஜக அரசு வரிசையாக இழிவுபடுத்தி வருவதைக் கவனத்துக்கு உட்படுத்த உள்ளோம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டப்படி பணி நியமனம் செய்யும் அதிகாரம் கொண்டவர்களின் (பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர்) ஒப்புதலுக்குப் பிறகே அலோக் வர்மாவை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018