மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

3 குழந்தைகள் பெற்ற வேட்பாளர்: உச்ச நீதிமன்றம் கருத்து!

3 குழந்தைகள் பெற்ற வேட்பாளர்: உச்ச நீதிமன்றம் கருத்து!

மூன்று குழந்தைகளைப் பெற்ற நபர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தவர் ஆவார் என்று உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றவராக இருக்க வேண்டும். மூன்றாவது குழந்தை பெற்றால், அவர் தகுதி நீக்கம் பெற்றவராகக் கருதப்படுவார். இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது, இரண்டு குழந்தைகள் மேல் உடையவர்கள் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இப்போதுவரை, இந்த விதி சர்ச்சைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஒடிசா மாநிலம் நவுபடா மாவட்டத்தில் கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர் மினாசிங் மஜ்ஹி. 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூன்றாவதாகக் குழந்தை பிறந்தது. 1995 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில், அவரது முதல் இரண்டு குழந்தைகள் பிறந்திருந்தனர். மூன்றாவது குழந்தை பிறந்தவுடன், அவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து, ஒடிசா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்கு அவரது பதவி நீக்கம் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அவரது சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மஜ்ஹி சார்பில் வாதாடிய புனித் ஜெயின், அவர் தனது மூத்த குழந்தையை 1999ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே தத்து கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தார். இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்புச் சட்டப்படி, தத்து கொடுத்த குழந்தையானது அக்குடும்பத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படும் என்று வாதாடப்பட்டது. அதனால், உயிரியியல் பூர்வமாக மூன்றாவது குழந்தைக்குத் தந்தையானதை அடிப்படையாகக் கொண்டு, மஜ்ஹியின் உள்ளாட்சிப் பதவியை ரத்து செய்தது செல்லுபடியாகாது என்று தெரிவிக்கப்பட்டது. ஒடிசா கிராமப் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை எதிர்த்து, புனித் ஜெயின் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

கடந்த 24ஆம் தேதியன்று, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. “இரண்டு குழந்தைகள் விதியைச் செயல்படுத்துவதன் மூலமாக, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக இருப்பார்களா என்று தெரியாது. பஞ்சாயத்துத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இரண்டு குழந்தைகளைப் பெற்றிருக்க வேண்டுமென்று ஆட்சி மன்றத்தின் நோக்கம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர் நீதிபதிகள். மூன்று குழந்தைகள் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதியை உறுதி செய்து, அவர்கள் உத்தரவிட்டனர்.

இரட்டைக் குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்தால் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பினார் புனித் ஜெயின். ஜனநாயக அமைப்பில் அவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிடுவார்களா என்றார். அப்படியொரு சூழல் ஏற்பட்டால், நீதிமன்றம் தலையிட்டு உரிய தீர்வைக் காணும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018