மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

சிறப்புப் பார்வை: கீழமை நீதிமன்றங்கள் நோக்கி நீளும் டெல்லியின் கரங்கள்!

சிறப்புப் பார்வை: கீழமை நீதிமன்றங்கள் நோக்கி நீளும் டெல்லியின் கரங்கள்!

ஆரா

ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றக் காவலில் வைக்கும் அதிகாரம் கொண்டவை கீழமை நீதிமன்றங்கள்தான். ஒரு குற்ற வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றாலும், கடைசி வரை அந்த வழக்கின் ஆணிவேராக இருப்பது கீழமை நீதிமன்ற விசாரணையும் அது தொடர்பான ஆவணங்களும்தான்.

இந்திய நீதித் துறையின் ஆணிவேராக இருக்கக்கூடிய கீழமை நீதிமன்றங்களில் சுமார் ஆறாயிரம் நீதிபதி பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அண்மையில் இதுபற்றிச் சுட்டிக்காட்டிப் பேசிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “லட்சக்கணக்கான வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் தேங்கியிருக்கின்றன. அதைத் தவிர்க்க இனி நீதிபதிகள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

தலைமை நீதிபதியின் இந்த, ‘வழக்குத் தேக்கம்’ என்ற ஆதங்கத்தைப் பக்கத் துணையாய் வைத்துக்கொண்டு கிடப்பில் கிடக்கும் தனது ஆயுதத்தை மீண்டும் கையில் ஏந்தியிருக்கிறது மத்திய அரசு. நாடு முழுவதும் இருக்கும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளை மத்திய அரசின் பொதுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுப்பது என்பதுதான் அந்த ஆயுதம். இதற்கான பணிகளை மத்திய சட்ட அமைச்சகம் மீண்டும் புதுப்பித்திருப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கீழமை நீதிபதிகள் நியமன முறை!

கீழமை நீதிமன்ற நீதிபதிகள் என்றால் நீதித் துறை நடுவர் மன்றம், உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மாநகரங்களில் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆகியவை அடங்கும். போலீசார் பதிவு செய்யும் வழக்குகள் இந்தக் கீழமை நீதிமன்றங்களில்தான் முதன்முதலில் விசாரிக்கப்படும். கீழமை நீதிமன்றங்களில் அளிக்கப்படும் தீர்ப்பின் முக்கியத்துவம் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணைகளில் பிரதிபலிக்கும்.

இப்படி இந்திய நீதித் துறைக் கட்டமைப்பின் வலிமையான அடித்தளமாக இருக்கும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் இப்போது வரை அந்தந்த மாநில அரசுகளின் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களின் ஆலோசனையின்பேரில் நியமிக்கப்படுவார்கள். ஆனால், பாஜக அரசு வந்த புதிதிலேயே நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களுக்கு ஒரே தேர்வு முறை என்பதை நடைமுறைப்படுத்த மிகுந்த முயற்சி எடுத்து வருகிறது.

கடந்த வருடம் ஜூன் மாதம் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை மாநில அளவிலிருந்து மாற்றி தேசிய அளவுக்குக் கொண்டுவரும் திட்டம் தொடர்பாக மத்திய சட்டத் துறைச் செயலாளர் சினேகலதா ஸ்ரீவாஸ்தவா உச்ச நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளருக்குக் கடிதம் எழுதினார். அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் இந்தத் திட்டம் தொடர்பாக மாநில அரசுகள் தங்களின் பதிலை ஜூன் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

எதிர்க்கும் உயர் நீதிமன்றங்கள்

இந்தியாவில் மொத்தமுள்ள 24 உயர் நீதிமன்றங்களில் 19 உயர் நீதிமன்றங்கள் இதுபற்றி கருத்து தெரிவித்தன. ஆந்திரா, தெலுங்கானா உயர் நீதிமன்றம், பம்பாய் உயர் நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்றம், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், கர்நாடகா உயர் நீதிமன்றம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், பாட்னா உயர் நீதிமன்றம் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அலகாபாத், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், கேரளம், மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள் இத்திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. சிக்கிம், திரிபுரா ஆகிய இரு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள் மட்டுமே இத்திட்டத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாகத் தெரிவித்தன.

மாநில உரிமைப் பறிப்பு

இந்த விவகாரம் குறித்து அக்டோபர் 22ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை செய்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. இதுபோன்ற விவகாரங்களில் முந்திக்கொண்டு நின்று எச்சரிக்கை மணி அடிப்பவர் அவர்தான்.

“கீழமை நீதிமன்ற நீதிபதிகளை - மாவட்ட அதற்குக் கீழே இருக்கின்ற நீதி விசாரணை நீதிபதிகளை நியமிப்பது என்பது, இந்திய அரசியல் சட்டத்தின் 234, 235, 236 - பிரிவுகளின்படி மாநிலங்களுக்கு உள்ள தனி அதிகாரம் ஆகும். மாநில தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், மாநிலத்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தோடு கலந்து ஆலோசித்து (Consultation) கீழமை நீதித் துறை நடுவர்களை நியமிக்க வேண்டும்.

இது சமூகநீதிப்படி இட ஒதுக்கீட்டு சட்டப்படியே நடைபெற்றாக வேண்டியது சட்டக் கட்டளை - நடைமுறையாகும். வழக்குகள் ஏராளம் நிலுவையில் உள்ளன என்பது உண்மையே; அதற்காகக் காலியாக இருக்கும் கீழமை நீதிபதிகளுக்கான பதவிகளை நிரப்பிட மத்திய அரசே, உள்துறை சட்டத் துறையே ஏற்பாடு செய்வது அநியாயம்” என்கிறார் அவர்.

நீட் மாதிரி நீதித் துறைக்குமா?

‘நீட்’ தேர்வு மாதிரி ஒரு பொதுத் தேர்வை, நாடு முழுமைக்கான ஒரே தேர்வு நடத்தி, அதன்மூலம் இவர்களே தேர்வு செய்வார்களாம். உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி - பைசலாகாத வழக்குகள் இரண்டு லட்சத்துக்கு மேல் தேங்கியுள்ளன என்று கூறியதை ஒரு சாக்காகக்கொண்டு - இப்படி ஒரு மாநில அதிகாரப் பறிப்பு முறையைச் செயல்படுத்திடத் திட்டமிட்டுள்ளார்கள் என்று எச்சரித்துள்ள கி.வீரமணி,

“மாநிலங்களுக்கு மாநிலம் கீழமை நீதிமன்ற விசாரணைகளில் மொழிப் பிரச்சினை உண்டு. பல கலாச்சார மாறுபாடுகள் வழக்குகளில் பிரதிபலிக்கும். தலைமை நீதிபதிகள் உயர் நீதிமன்றங்களில் பிற மாநிலங்களிலிருந்து மாநில உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்படுவதும்கூட வழக்குகள் நிலுவைக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். எனவே, மத்திய அரசின் இந்த மாநில அதிகாரப் பறிப்புத் திட்டத்தை மாநில அரசுகள் கடுமையாக எதிர்க்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய நீதித் துறையின் நிலை!

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் நிலைமை என்ன என்பது பற்றியும் வழக்கு ஒதுக்கப்படும் முறை எப்படி இருக்கிறது என்பது பற்றியும் இந்த வருடத் தொடக்கமான ஜனவரியில் நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பே நடத்தினார்கள். அந்த அளவுக்கு இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் சென்ற இந்திரா பானர்ஜியைத் தமிழகம் மறக்க முடியாது. அவர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை விசாரித்தார்.

நீதிபதி அருண் மிஸ்ராவோடு இணைந்து ஹோட்டல் ராயல் பிளாசா தொடர்பான ஒரு வழக்கை விசாரித்தபோது நீதிபதி இந்திரா பானர்ஜி கூறுகையில், “வழக்கறிஞர்கள் நீதிபதிகளைச் சந்திக்கும் சாதாரண நிகழ்வுகளின்போது, சில மூத்த வழக்கறிஞர்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பது தொடர்பாகப் பேச ஆரம்பித்துவிடுகின்றனர். சிலர் தொலைப்பேசி மூலமும் தொடர்புகொண்டு இதே விஷயத்தைப் பேசுகின்றனர். இதுபோல் நீதிபதிகளின் செல்வாக்கை வழக்கு விசாரணைக்காகப் பெற முயற்சி செய்வது தீவிரமானதாக எடுத்துக் கொள்ளப்படும்” என்றார்.

இதையடுத்து, மூத்த வக்கீல் ஷியாம் திவான், “இந்த வழக்கை விசாரணை செய்வதிலிருந்து நீதிபதி இந்திரா பானர்ஜி விலகிவிடக் கூடாது. அப்படிச் செய்தால் மற்ற நீதிபதிகளும் இதைப் பின்பற்றும் நிலை உருவாகும்” என்று கேட்டுக்கொண்டார். அப்போது, நீதிபதி அருண் மிஸ்ரா, “வழக்கு விசாரணைகளில் நீதிபதிகளின் செல்வாக்கைப் பெறுவதற்கு முயற்சி செய்வது, கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும்” என்று எச்சரித்தார். இதுதான் இன்றைய இந்திய நீதித் துறையின் மேல்மட்ட நிலை.

கீழமை நீதிபதிகளின் பொறுப்பும் சுதந்திரம்!

அதேநேரம் கீழமை நீதிமன்றங்களில் செல்வாக்கு செலுத்தப்படுவதைத் தாண்டிய சுதந்திரம் இருக்கிறது என்பதை அண்மையில் நடந்த சிற்சில சம்பவங்களே எடுத்துக்காட்டுகின்றன. அண்மையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை பெங்களூரு விமான நிலையத்தில் சுற்றிவளைத்த போலீசார், ‘ஏதோ ஒரு கோர்ட்டுக்குப் போய் ரிமாண்ட் செய்துவிடலாம்’ என்ற நினைப்போடுதான் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். திருமுருகன் மீது தேச துரோக வழக்கு போட வேண்டும் என்று அரசியல் அழுத்தத்தில் போலீசார் கோரிக்கை வைக்க, சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதியோ, ‘நீங்கள் குறிப்பிட்டிருக்கும் செய்கைகளுக்காக தேச துரோக வழக்கு போட முடியாது. இவரைச் சிறையில் அடைக்கவும் முடியாது’ என்று மறுத்துவிட்டார்.

இதேபோல நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்மீது ஆளுநர் மாளிகையே புகார் கொடுத்திருந்தபோதும், “இந்த 124 சட்டப் பிரிவு, இந்த வழக்குக்குப் பொருந்தாது’ என்று அன்று மாலையே விடுதலை செய்தார் நீதிபதி.

இவ்விரு வழக்குகளிலுமே அரசியல் அழுத்தங்கள் இருக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், எவ்வித அழுத்தங்களுக்கும் ஆளாகாமல் பொறுப்போடும் சுதந்திரத்தோடும் இந்திய நீதித் துறையின் கீழமை நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

நுழைவுத் தேர்வால் நீதித் துறை சிதையுமா?

நீதிபதி பணிக்குத் தேசிய அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் இடஒதுக்கீட்டுக்குப் பெரும் ஆபத்து ஏற்படும். தமிழகத்தின் சமூக, பொருளாதார, கலாச்சார நடைமுறைகள் குறித்து எதுவும் தெரியாத வடஇந்தியர்கள் தமிழகத்தின் கீழமை நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்டால், நீதி வழங்கும் முறையே சிதைக்கப்பட்டுவிடும். அண்மையில் அஞ்சலகப் பணியாளர் நியமனத்துக்கு நடந்த தேசிய அளவிலான தேர்வில், தமிழே தெரியாத வடஇந்திய மாணவர்கள் தமிழில் அதிக மதிப்பெண் பெற்றதாகக் கூறி, தமிழகத்தில் நியமிக்கப்பட்டனர். அதேபோல் இப்போதும் போட்டித் தேர்வுகளில் முறைகேடு செய்து வடஇந்தியர்கள் தமிழக நீதிமன்றங்களின் நீதிபதிகளாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

பல மாநிலங்களில் கீழமை நீதிமன்ற நீதிபதிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதும் உண்மைதான். மத்திய அரசுக்கு இந்த விஷயத்தில் உண்மையாகவே அக்கறை இருந்தால் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று மாநில அரசுக்குச் சுற்றறிக்கை அனுப்பலாம். மாறாக நாங்களே நிரப்புகிறோம் என்பது அதிகார அத்துமீறலாகும் என்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

நீதி பெறும் உரிமைக்கான தடைக்கல்!

கீழமை நீதிமன்றங்களை நோக்கி மத்திய அரசின் நேரடிக் கரங்கள் நீள்வதால் என்னவாகும் என்று நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்ற வழக்கறிஞரும், வள்ளியூர் வழக்கறிஞர் சங்கத் தலைவருமான தவசிராஜனிடம் பேசினோம்.

“மாவட்ட நீதிமன்றம் என்பது அந்த மாவட்ட எல்லைக்குள் நடைபெறும் பிரச்சினைகள், விவகாரங்களை விசாரித்துத் தீர்த்து வைப்பதற்கான நீதித் துறையின் அமைப்பு. இந்த அமைப்பில் இப்போது வழக்கின் இரு தரப்பினருக்கும் புரிந்த மொழியான அதாவது நம் தாய்மொழியான தமிழிலேயே வாதங்கள் நடக்கும். குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர், அரசுத் தரப்பின் வழக்கறிஞர், நீதிபதி மூவரும் தமிழில்தான் வாதாடுகிறோம். இதே நேரம் மத்திய அரசின் பொதுத் தேர்வு மூலம் நீதிபதியைக் கொண்டுவந்தால் ஒடிசாவில் இருந்து ஒருவர் வள்ளியூர் நீதிமன்றத்துக்கு நீதிபதியாக நியமனம் செய்யப்படலாம். அப்போது வழக்கறிஞர்களுக்குப் பிரச்சினை இல்லை, ஆங்கிலத்தில் வாதாடுவதற்கு! ஆனால் தன் வழக்கின் நிலை என்னவென்று அறியாமல் மக்கள் விழிப்பார்கள். கீழமை நீதிமன்றங்கள் மக்களிடமிருந்து அன்னியப்பட்டுப் போகும் சூழல் உருவாகும்.

நீதி பெறும் உரிமையை மக்களிடமிருந்து பறிப்பதாகவும் இது அமையும். எனவே கீழமை நீதிமன்ற நீதிபதிகள் அந்தந்த மாநிலத் தேர்வாணையம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் ஆலோசனைப்படி நியமிக்கப்படுவதே சாலச் சிறந்தது.

மத்திய அரசு வழக்குகளை சீக்கிரம் முடிப்பதற்காக இதுபோன்ற பொதுத் தேர்வு முயற்சிகளில் இறங்குவதாகக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் மாநிலம் விட்டு மாநிலம் சென்று கீழமை நீதிபதிகள் பணியாற்றும் சூழலில் மொழிப் பிரக்சினை போன்றவற்றால் வழக்குகள் தேங்கும் விகிதம் அதிகமாகுமே தவிர நிச்சயம் குறையப் போவதில்லை” என்றார்.

மக்களின் நீதிபெறும் உரிமையைக் காப்பாற்ற வேண்டியது அனைத்து வழக்கறிஞர்களின், அனைத்து அரசியல் கட்சிகளின் கடமை.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018