மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

அனுபவம்: பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே...

அனுபவம்: பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே...

ஆண்களின் துணையின்றிப் பயணம் மேற்கொண்ட பெண்களின் அனுபவங்கள்

எங்கேயோ கேட்ட ஞாபகம்

உலகம் உருண்டை என்று

மண்டியிட்டு வளைந்து

எட்டி

நிமிர்ந்து நடந்து

எப்படிப் பார்த்தாலும்

சதுரமாய்த்தான் தெரிகிறது

என் வீட்டு ஜன்னலில்

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை.

“தனியாவா வெளிய போற?”, “போயிட்டு போன் பண்ணி சொல்லு”, “ஆட்டோ வேண்டாம், கால் டாக்ஸில போ”, “ஆன்லைன்லயே வாங்கிக்க, எதுக்கு கடைக்குப் போய் கஷ்டப்படற?” என்பதெல்லாம் இன்று பெண்களிடம் நாகரிகமாய்த் திணிக்கப்படும் அடிமைத்தனம். பாதுகாப்பு என்கிற பெயரில் ஒருவித சொகுசு வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்தி ஒருகட்டத்தில் அதைத் தாண்டி வெளிவரவே முடியாமல் இறுதிவரை மற்றவர்களைச் சார்ந்தே இருக்கின்ற வாழ்வுதான் இன்றைய பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்களில் பெண்களின் நிலை.

அந்தக் காலத்தில் பெண்கள் ஒன்று கூடுவதற்கென்றே இருந்த பல பண்டிகைகளையும், கோயில் திருவிழாக்களையும் நகரமயமாக்கப்பட்ட சூழலில் இழந்து தனித்தனி உலகில் வெறுமையில் வாழ்கின்றனர் இன்றைய பெண்கள். ஒருகட்டத்தில் தன்னுடைய ஆசைகள், கனவுகள் எல்லாம் எட்டாக்கனியாகி, தனக்கெனத் தனியாக விருப்பமோ, கருத்தோ இல்லாமல் சுயம் இல்லாதவர்களாய் ஆகின்றனர்.

இந்த இஸட் பிரிவு பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்துகொண்டே பெண்கள் படிப்பதால், வேலைக்குச் செல்வதால் முழுவதுமாகப் பெண்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்று கூற முடியாது.

வீட்டுக்குள்ளிருந்து உலகைக் காண புது சாளரம் திறந்ததுபோல ஆர்குட், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் எனச் சமூக ஊடகங்கள் உருவாயின. ஆரம்பத்தில் ஆர்வமாகவும் தனக்கான ஓர் இடம் கிடைத்துவிட்டதைப் போலவும் இருந்தாலும், கம்பிச் சட்டத்துக்குள் உருவாகும் சிந்தனைகளைச் சமூக வலைதளங்களில் பதிவுசெய்துவிட்டுச் செயலாற்றாமல் இருப்பது வீட்டில் இருக்கும் பெண்களைப் பொறுத்தவரை தற்காலிகமான போலி விடுதலை உணர்வையே தருகிறது.

பெண் விடுதலை குறித்த நம் எண்ணத்துக்கும் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் இருக்கும் மிகப் பெரிய இடைவெளியை நடைமுறையில் உணர்ந்தபோது மிகுந்த வேதனை அடைந்தோம். இந்த இடைவெளியை ஒரு பயணத்தைக் கொண்டு நிரப்ப விரும்பினோம். இன்னும் பயணச்சீட்டு பதிவு செய்வது முதல் வங்கிக்குச் செல்வது வரை எல்லாவற்றுக்கும் இன்னொருவரைச் சார்ந்திருக்கும் சமூகத்தில் ஆண் துணை இல்லாமல் பெண்கள் மட்டும் பயணம் செய்வது பற்றிய எங்கள் கனவும், பேச்சும் பலருக்கு வியப்பாகவும், சிலருக்குக் கேலியாகவும் இருந்தது.

திட்டமிடாத பயணம்

“கொச்சி டு கவுஹாத்தி பெண்கள் மட்டும் ஒரு டூர் போகலாம். ராத்திரி ரயிலில் பயணம் செய்வோம். விடியும்பொழுது வரும் ஊரில் பகல் முழுவதும் உலாவுவோம். Not a Much planned trip, Just a kind of Exploring” என்று எனக்கும் திவ்யாவுக்கும் இடையில் விளையாட்டாகப் பயணத்தைப் பற்றிய பேச்சு தொடங்கியது. அவளுக்கு இந்தத் திட்டம் மகிழ்ச்சியளிக்க அவள் தனது தோழிகளிடம் பேசினாள். அன்றே தோழிகளில் பலரும் இப்படி ஒரு பயணத் திட்டத்தில் உடன் வர விருப்பம் தெரிவித்தனர்.

அலுவலகப் பணிச்சுமை, வீட்டில் அனுமதி கிடைக்காதது, அதிக தொலைவு, பயணக் காலம், பொருளாதாரம், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாதது என வெவ்வேறு காரணங்களினால் கூட்டம் விரைவில் கரைந்து நால்வர் குழுவானது.

எங்கு, எதில், எப்படிச் செல்வது என்பதை விடவும், வீட்டில் அனுமதி கிடைப்பதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. திட்டமிடல் இல்லாத பயணத்துக்கு அனுமதி பெற ஒரு திட்ட வரையறை தேவைப்பட்டது. சென்னையிலிருந்து புபனேஸ்வர் வரை என்று முடிவானது.

நான்கு பேரில் திவ்யா மட்டுமே மற்ற மூவருக்கும் பொதுவான நண்பர். இந்தப் பயணத்தின் முதல் நாள்தான் நாங்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கிறோம். பெயரைத் தவிர வேறு எந்த முன்கதைச் சுருக்கமும் தேவைப்படவில்லை. இப்படி முன்னறிமுகம் இல்லாதவர்களுடன் பயணம் செய்வதே புதுமையாக இருந்தது. அந்தப் பயணத்தின் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

நாள் 1: பெரம்பூர், சென்னை

சென்னையில் மழை கொட்டித்தீர்த்து சாலைகள் நீரில் மிதந்த ஒரு நாளில் பெரம்பூரிலிருந்து ரயிலில் விசாகப்பட்டினம் கிளம்பினோம். மறுநாள் அதிகாலை விசாகப்பட்டினத்தில் இருந்து அருக்கு பள்ளத்தாக்கு சென்றோம்.

நாள் 2: அருக்கு பள்ளத்தாக்கு (Araku /Arukku Valley)

விசாகப்பட்டினத்திலிருந்து ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்குச் செல்லும் மலைப்பாதையின் எல்லையில் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து 115 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது இந்த மலைப்பகுதி. இப்போதைய சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிரந்தூல் பகுதி சுரங்கங்களிலிருந்து இரும்பு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை விசாகப்பட்டினத் துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்காக மலைகளைக் குடைந்து 58 குகைகளுடன் சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் அருக்கு பள்ளத்தாக்கு வழியாக ஏற்படுத்தப்பட்ட கொத்தவலசா - கிரந்தூல் ரயில் பாதை 1966இல் இருந்து பயணிகளுக்கான ரயில் பாதையாகவும் ஆனது.

விசாகப்பட்டினத்திலிருந்து ஆந்திர மாநில அரசு சுற்றுலாத் துறை ரயில் - சாலை பேக்கேஜின் மூலம் இந்தக் குகைப் பாதை ரயிலில் அழைத்துச் செல்கிறது. குகைகளைக் கடந்து செல்வது அற்புதமான அனுபவம். இடையிடையே காணும் அருவிகளும் பள்ளத்தாக்கும் இயற்கை அழகின் உச்சம். அக்டோபர் மாதத்தில் பள்ளத்தாக்கு முழுவதும் பளீர் மஞ்சள் வண்ணத்தில் பூத்திருக்கும் அருக்கு மலர்களைக் காண்பதற்காகவே எங்களின் இந்தப் பயணம்.

இந்தியாவில் இருக்கும் 450க்கும் மேற்பட்ட பழங்குடி இனங்களில் 45 வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த பழங்குடி மக்கள் இந்தப் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலைப்பகுதியில் வசிக்கின்றனர். இங்கிருக்கும் நிலங்களை இந்தப் பழங்குடி மக்கள் அல்லாதவர்களுக்கு விற்க முடியாதபடி அரசு சட்டம் இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தாய்வழிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனால் இங்கு நிலமுள்ள பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதால் மட்டுமே வெளியிலிருந்து வருபவர்கள் இந்த மலைப்பகுதியை உரிமையாக்கிக்கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.

அதிகப்படியான தனியார் விடுதிகள் இல்லாத காரணத்தினாலும், பெரும்பான்மையான சுற்றுலாப் பயணிகள் ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்துவதாலும் இந்த மலைப் பகுதி இன்னும் காற்று மாசுப்படாத, பிளாஸ்டிக், காகிதக் குப்பைகள் நிறையாத இயற்கை அழகில் திளைக்கிறது.

சுற்றியுள்ள பகுதிகளைச் சுற்றிப் பார்க்க வாடகை கார் ஏற்பாடு செய்திருந்தோம். ஆந்திர அரசு சுற்றுலாத் துறையின் விடுதியில் தங்கும் அறை முன்பதிவு செய்திருந்தோம். காலையில் முதல் இடமாக சாப்பரை அருவியைக் காணக் கிளம்பினோம். எங்களுடன் வந்த ஓட்டுநருக்கு வழி தெரியவில்லை. அவருடைய அலுவலக மொபைல் ஆப் ஜிபிஎஸ் காட்டும் வழியையும் புரிந்துகொள்ள முடியவில்லை. நாங்கள் கூகுள் மேப்பில் வழி பார்த்துச் சொன்னாலும் அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. விடுதியிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே செல்போனில் சிக்னல் இல்லை. இன்னும் முழுமையான சுற்றுலா இடமாகவில்லை என்பதால் வழியில் பெரும்பாலும் கைக்காட்டி மரங்களோ, பெயர்ப் பலகைகளோ இல்லை.

(பயணம் நாளையும் தொடரும்…)

கட்டுரையாளர் மு. வித்யா, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வசிக்கிறார். திருநெல்வேலியில் பெண்கள் ஆடையகம் நடத்தி வருகிறார். இலக்கிய வாசிப்பும் பயணங்களும் வாழ்க்கை மீதான தன் பிடிப்பைத் தக்கவைத்திருக்கின்றன என்கிறார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018