மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

விமர்சனம்: ஜீனியஸ்!

விமர்சனம்: ஜீனியஸ்!

மன அழுத்தம் என்ற வார்த்தை வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உபயோகிக்கக்கூடியதாக மாறிவிட்டது. கல்வி முறையில் இருந்து பணிபுரியும் சூழல் வரை ஒரு செயற்கையான சுழலுக்குள் சிக்க வைக்கப்படுவதை ஒவ்வொருவரும் உணரலாம். இந்தச் சமகாலப் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது ஜீனியஸ் திரைப்படம். சுசீந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தைத் தயாரித்த ரோஷன் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார்.

நன்றாகப் படித்து நல்ல வேலையில் உள்ள தினேஷ் (ரோஷன்) மனநலம் பாதிக்கப்படுகிறார். ஏன் அவர் இந்த நிலைக்கு ஆளானார் என்பது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை மூலம் ஃப்ளாஷ்பேக்காக விரிகிறது. கல்வியை மட்டுமே வலுக்கட்டாயமாகத் திணித்து விளையாட்டு, கலை, பொழுதுபோக்கு என எதற்கும் அனுமதிக்காத பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் உடல்நலம், மனநலம் பற்றி கவலைப்படாமல் ஓர் இயந்திரமாகப் பாவித்து அதிகப்படியான உழைப்பை உறிஞ்சி, பின் தூக்கிப்போடும் நிறுவனங்கள் ஆகியவற்றால் அவரது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. தாங்கள் எதிர்பார்த்தபடி பொருளாதாரத் தேவைகள் அனைத்தும் நிறைவடைந்த மகிழ்ச்சியில் இருக்கும் பெற்றோர், மகன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளான் என்பதை அறிந்து அதிர்ச்சியாகிறார்கள். அதிலிருந்து எப்படி அவர் மீண்டுவருகிறார் என்பதாக ஜீனியஸ் படத்தின் திரைக்கதை நகர்கிறது.

அறிமுக நாயகன் ரோஷனின் நடிப்பில் உள்ள போதாமையை அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் மறைக்கிறது. சில இடங்களில் வந்தாலும் ப்ரியா லால் மற்றும் பிரிசில்லா கதாபாத்திரத்தில் வரும் பெண் ஆகிய இருவரும் கவனம் ஈர்க்கின்றனர். இடைவேளைக்குப் பின் அறிமுகமானாலும் சிங்கம் புலிக்கு முக்கியக் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் வரும் காட்சிகள் சில இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன. ஜெயபிரகாஷ், சிங்கமுத்து, தாடி பாலாஜி, ஈரோடு மகேஷ் ஆகியோரைத் தெரிந்த முகம் வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது கதாபாத்திரம் அழுத்தம் பெறாமல் போயுள்ளது.

இயக்குநர் தேர்ந்தெடுத்த கதையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சிறு வயதிலிருந்தே அதிக மன நெருக்கடிக்குள்ளாகும் குழந்தை வளர்ந்து ஒரு கட்டத்தில் மன நோயாளியாக மாறுகிறார் என்பதைப் படத்தின் டீசரிலேயே கூறிவிட்டார். படத்தின் இந்த ஒன்லைனை வலுவான காட்சிகளுடன் திரைக்கதையாக உருவாக்கத் தவறியுள்ளார்.

மன அழுத்தத்துக்கு மகனை உள்ளாக்கும் அப்பா கதாபாத்திரத்துக்குத்தான் சிகிச்சை தேவை என்பதை இயக்குநர் வலியுறுத்தவே இல்லை. பல காட்சிகளில் அவர்தான் அசாதாரண நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். பிற்பாதியில் மனம் திருந்துவதாகக் காட்டப்பட்டாலும் அதன் தாக்கம் பார்வையாளர்களுக்குக் கடத்தப்படவில்லை. தேய்வழக்கான காட்சியமைப்புகள், சுவாரஸ்யமற்ற திருப்பங்கள் ஆகியவை படம் நெடுக அமைந்து அயர்ச்சியை உண்டாக்குகின்றன.

தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய நிலையில் இருக்கும் ரோஷன் ஒரே பாடலில் முழுவதும் குணமாவதாகக் காட்டப்பட்டுள்ளது. திருமணத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அவரது அப்பா சம்பந்தப்பட்ட பெண் ஐந்து நிமிடங்கள் பேசிய உடன் அவள் சிக்கியுள்ள இடத்தில் இருந்து மீட்கத் தானே முன்வந்து பணம் கொடுக்கும் அளவுக்கு மனம் மாறுகிறார். க்ளைமாக்ஸில் தடை ஏற்பட வேண்டும் என்பதற்காகச் செயற்கையாக ஒரு தடையை ஏற்படுத்தி மொத்த குடும்பமும் பெண்ணை அழைத்து வருகிறது. இவை உட்படப் படத்தின் பல காட்சிகளை என்ன சொன்னாலும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற தொனியில் இயக்குநர் உருவாக்கியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘நீங்களும் ஊரும்’, ‘சிலு சிலு’ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஊரில் சிறுவர்களின் கொண்டாட்டத்தைப் பதிவு செய்யும் பாடலின் ஒளிப்பதிவு ஈர்க்கிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018