தேவ்: நம்பர் பிளேட் சொல்லும் சீக்ரெட் என்ன?


கார்த்தி நடிக்கும் தேவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.
கடைக்குட்டி சிங்கத்தை அடுத்து கார்த்தி தற்போது நடித்துவரும் படம் தேவ். அவருக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் இதில் நடிக்கிறார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் இதே இணை நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரஜத் ரவி ஷங்கர் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் தேவ் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கிறது. ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங்கை ரூபன் கவனிக்கிறார்.
இதன் டப்பிங் பணிகள் சமீபத்தில் நடந்துவந்த நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (அக்டோபர் 25) வெளியிடப்பட்டுள்ளது. இதை நடிகரும் கார்த்தியின் சகோதரருமான சூர்யா வெளியிட்டார். பைக் தனக்கு அருகில் நிற்க ஹெல்மெட்டைக் கையில் பிடித்தபடி கார்த்தி நிற்கும்விதமாக அந்த போஸ்டர் அமைந்துள்ளது. அவரது வண்டி எண் ‘k-17’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கார்த்தி தமிழில் கதாநாயகனாக நடிக்கும் 17ஆவது படம் இது. எனவே அதைக் குறிக்கும் விதமாகக்கூட k-17 என நம்பர் வரும்படி அதை அமைத்திருக்க வாய்ப்புள்ளது. மேலும் வண்டியின் பதிவு எண் TN-59 எனும் மதுரை வட்டாரத்திற்கான எண்ணைக் கொண்டிருப்பதால் இந்தப் படத்தின் கதை மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.