மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

டிஜிட்டல் திண்ணை: தேர்தலுக்கு செலவு செய்வது யார்? மதுரை ஆலோசனை!

டிஜிட்டல் திண்ணை: தேர்தலுக்கு செலவு செய்வது யார்? மதுரை ஆலோசனை!

அலுவலகத்தில் வைஃபை ஆனில் இருந்தது. வாட்ஸ் அப்பில் இருந்து, “தூங்கா நகரத்தில் இருக்கிறேன்!” என்ற மெசேஜ் காலையிலேயே வந்து விழுந்தது. மதியத்துக்குப் பிறகு வந்தது இந்த மெசேஜ்.

“தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நேற்று இரவு குற்றாலத்திலிருந்து கிளம்பி மதுரை வந்து சேர்ந்தார்கள். மதுரையில் உள்ள பாப்பிஸ் ஹோட்டலில் அனைவருக்கும் ரூம் போடப்பட்டிருந்தது. அந்த ஹோட்டலில் மொத்தம் 22 அறைகளை தினகரன் அணி புக் செய்துவிட்டது. சென்னையில் இருந்து டிடிவி தினகரனுக்கு இரவு 7.25 மணி இண்டிகோ விமானத்தில்தான் டிக்கெட் புக் செய்யப்பட்டு இருந்தது. அவருடன் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனுக்கும் டிக்கெட் போடப்பட்டு இருந்தது. ஆனால், தினகரன் என்ன நினைத்தாரோ திடீரென, ‘நான் கார்லயே வந்துடுறேன். நீங்க ப்ளைட்ல போய்டுங்க...’ என்று சொல்லிவிட்டு, மாலை 4 மணி அளவில் மதுரையை நோக்கி காரில் புறப்பட்டுவிட்டார். ராஜா செந்தூர் பாண்டியன் மட்டும் இரவு விமானத்தில் மதுரைக்கு புறப்பட்டார். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு நகல் முழுமையாக ராஜாசெந்தூர் பாண்டியன் கையில் இருந்தது. அதை விமானத்தில் படித்தபடியே அவர் பயணித்தார்.

இரவு 11 மணி அளவில் தினகரன் மதுரைக்கு வந்து சேர்ந்தார். பாப்பிஸ் ஹோட்டல் வாசலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் வந்து நின்று வரவேற்றனர். தஞ்சாவூரை சேர்ந்த இளைஞர் அணி நிர்வாகி ஒருவரும் அந்த நேரத்தில் அடித்துப் பிடித்து மதுரை வந்து சேர்ந்திருந்தார். அவரைப் பார்த்த தினகரன், ‘நீங்க தஞ்சாவூர்தானே... இங்கே எதுக்கு வந்தீங்க. இங்கே நான் யாரையும் வரச் சொல்லவில்லை. 18 பேரைத் தவிர வேற யாரையும் நான் ஹோட்டல் பக்கம் பார்க்கக் கூடாது எல்லாம் கிளம்புங்க...’ என அந்த நேரத்திலும் சத்தம் போட்டார். ‘நீங்க எல்லோரும் என்ன மனநிலையில் இருப்பீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. இப்போ எதுவும் பேச வேண்டாம். எல்லாம் ரெஸ்ட் எடுங்க. காலையில் சந்திப்போம். எல்லோரும் சாப்பிட்டீங்களா?’ என்று கேட்க, ‘எல்லோரையும் சாப்பிட வெச்சுட்டேன் சார்..’ என்று தங்க தமிழ்ச்செல்வன் சொன்னார்.

இன்று காலை, சரியாக 10 மணி அளவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை மட்டும் பாப்பிஸ் ஹோட்டலில் உள்ள கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு வரவழைத்துப் பேசினார் தினகரன். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சிலர் தவிர வேறு யாரையும் அந்த அறைக்குள் அனுமதிக்கவில்லை. தினகரன்தான் முதலில் பேசியிருக்கிறார்.

‘நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துடுச்சு. இனி அதை விமர்சனம் பண்ணிட்டு இருக்கிறதால எதுவும் ஆகப்போறது இல்லை. அடுத்த கட்டமாக நாம என்ன செய்யணும்னு யோசிக்கணும். இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யப் போறீங்களா... இல்லை தேர்தலை சந்திக்கப் போறீங்களான்னு என்னைப் பலரும் கேட்டாங்க. ‘இது நான் மட்டும் முடிவெடுக்கும் விஷயம் இல்லை. உங்க எல்லோரையும் கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன். அதுக்காகத்தான் உங்களோடு பேச வந்திருக்கேன். உங்க முடிவு எதுவாக இருந்தாலும் சொல்லுங்க. அதை நான் ஏத்துக்குறேன். ஏன்னா மனதளவில் நீங்க அடைஞ்சிருக்கும் பாதிப்பை என்னால் உணர முடியுது. எந்த சூழ்நிலை வந்தாலும் நான் உங்களை விட்டுட மாட்டேன். தைரியமாக இருங்க...’ என்று பேசியிருக்கிறார்.

அதன் பிறகு தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது, ‘துணைப் பொதுச்செயலாளர் சொன்னது போல எனக்கு ஒரு கருத்து இருக்கும். உங்களுக்கு ஒரு கருத்து இருக்கும். எல்லோருக்கும் ஒருமித்த கருத்து இருக்கணும் என்பது அவசியம் இல்லை. அதனால் என் மனசுல இருக்கிறதை நான் சொல்லிடுறேன். நீங்களும் உங்க கருத்துக்களை சொல்லுங்க. என்னைப் பொறுத்தவரை மேல் முறையீடு போகலாம்னுதான் தோணுது. அதே நேரத்தில் அதுக்குள்ள தேர்தல் வந்தால் அதையும் சமாளிக்க ரெடியாக இருக்கணும். எனக்கு இரண்டிலும் உடன்பாடு உண்டு. முதல் சாய்ஸ் மேல் முறையீடுதான்...’ என்று சொன்னாராம்.

செந்தில் பாலாஜியும், ‘மேல் முறையீடு போகலாம். அதுதான் சரி’ என்றாராம் அரூர் தொகுதி முருகன் மட்டும், ‘தேர்தலை பார்த்து நாங்க பயப்படலை. ஆனால், செலவு யாரு செய்வாங்க? தேர்தல் செலவுகளை கட்சி பார்த்துக்கும் என்று சொல்லுங்க. எத்தனை தேர்தலை வேண்டும்னாலும் சந்திக்க ரெடியாக இருக்கோம்.’ என்று சொல்ல... பதில் எதுவும் சொல்லாமல் சிரித்திருக்கிறார் தினகரன். எல்லோரும் பேசி முடித்ததும், ‘மேல் முறையீடு போகலாம் என்பவர்கள் கை தூக்குங்க...’ என டிடிவி சொன்னதும், அங்கிருந்த அத்தனை பேருமே கையை மேலே உயரத்தி இருக்கிறார்கள். ‘சரி... மேல் முறையீடுதான் உங்க விருப்பம்னா அதையே செஞ்சுடலாம். சட்டப்படி அதை எதிர்கொள்ள எல்லா ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லிடுறேன்... அதே நேரத்தில் இப்போ எப்படி எலோரும் ஒற்றுமையோடு இருக்கோமோ அதே ஒற்றுமை எப்போதும் இருக்கணும்..’ என ஏதோ பயத்துடன்தான் அட்வைஸ் கொடுத்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018