மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

தலைவர்கள், அமைச்சர்கள் நலம் விசாரிப்பு!

தலைவர்கள், அமைச்சர்கள் நலம் விசாரிப்பு!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தேசிய, மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இன்று நலம் விசாரித்தனர்.

ரத்த அழுத்தக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் நேரில் நலம் விசாரித்த வண்ணம் உள்ளனர்.

நேற்றிரவு கருணாநிதியின் ரத்த அழுத்தம் குறைந்துகொண்டே வருவதாக வெளியான தகவலையடுத்து, திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு அதிகளவில் குவிய ஆரம்பித்தனர்.ஆனால்,“கருணாநிதி உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதாகவும், தீவிர சிகிச்சையின் காரணமாக இயல்பாகி வருவதற்கான முக்கிய அறிகுறிகள் தென்படுகின்றன” என்றும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், இன்று (ஜூலை 30) மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து நேரடியாக காவேரி மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு கருணாநிதியின் உடல்நிலை குறித்தும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தார்.

இலங்கை எம்.பி. ஆறுமுகத் தொண்டைமான், அமைச்சர் செந்தில் தொண்டைமான், உள்ளிட்டோர் கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர். கருணாநிதி நலம் பெற வேண்டி இலங்கை அதிபர் மைத்திரிபால சிரிசேனா அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை ஆறுமுகத் தொண்டைமான் ஸ்டாலினிடம் அளித்தார்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் மருத்துவமனைக்கு நேரில் வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோரிடம் நலம் விசாரித்தார்.

முன்னதாக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் மருத்துவமனையில் கருணாநிதியை நேரில் சந்தித்தனர். அவரது உடல்நிலை குறித்து ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடம் கேட்டறிந்தனர். இதுபோலவே அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜூ ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று, கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின், க.அன்பழகன் ஆகியோரிடம் நலம் விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “கலைஞரின் உடல்நிலை நன்றாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இவர்களைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரம ராஜா, கவிஞர் வைரமுத்து மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் நலம் விசாரித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “கலைஞர் உடல்நிலை சீராக உள்ளது. நேற்றிரவு 9 மணியளவில் இருந்த நிலையோடு ஒப்பிடுகையில், தற்போது மிகுந்த நலம்பெற்றுவருகிறார். அவரது உடல்நிலை தேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 80 ஆண்டுகளில் பல போராட்டங்களை நடத்தி அதிசயங்களை நிகழ்த்தியவர். மருத்துவமனையிலும் அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். பூரண நலம் பெறவும், இல்லம் திரும்பவும் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்தார்.

மருத்துவமனை முன்பு தொண்டர்கள் அதிகளவில் குவிந்துள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்று ட்விட்டரில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. வசதிகள் செய்யப்படும் என்று உறுதியளித்த எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “பத்திரிகையாளர்களுக்கு பிரியாணி, கழகத் தோழர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு மதிய உணவு, 5000 குடிநீர் பாட்டில்கள் சற்று முன் வழங்கப்பட்டது. மேலும் இரவு “Fried Rice” வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

திங்கள் 30 ஜூலை 2018