மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

சிறப்புக் கட்டுரை: தாதாக்கள் கதையிலும் அழகுணர்ச்சி!

சிறப்புக் கட்டுரை: தாதாக்கள் கதையிலும் அழகுணர்ச்சி!

கேபிள் சங்கர்

அமெரிக்கப் படங்களுக்கும் மற்ற நாட்டுப் படங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். குறிப்பாக ஐரோப்பியப் படங்களுக்கும் ஹாலிவுட்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஆக்‌ஷன் கதைகளைக்கூட கொஞ்சம் அழகுணர்வோடுதான் அவர்கள் எடுக்கிறார்கள். கொஞ்சம் எமோஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஹாலிவுட் போல பிளாஸ்டிக்தனமாய் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

நம்மூர் படங்களுக்கும் கொரியப் படங்களுக்கும் உடை, உணவு போன்றவற்றில் வித்தியாசம் இருந்தாலும், குடும்ப அமைப்புகளில், உறவுகளில் உள்ள பின்னல்கள் எல்லாம் கிட்டதட்டத் தமிழ்ப் படம் போலவே இருப்பதால்தான் மிக எளிதாகச் சுட்டுத்தள்ள முடிகிறது.

படங்களைப் போலத்தான் வெப் சீரீஸ்களும். ஹாலிவுட் சீரீஸ்கள், கொரிய சீரிஸ்கள் என வரிசை கட்டி அணிவகுத்திருக்கும் நெட்ஃபிளிக்ஸில் நிறைய ஐரோப்பிய சீரீஸ்களும் உண்டு. சமீபத்தில் பார்த்த சீரீஸ் சுப்பூரா எனும் இத்தாலிய சீரீஸ். வாடிகனுக்குச் சொந்தமான நிலம் ஒன்று இருக்கிறது. அதை அடைய சமுராய் எனும் தாதா கும்பலும், அரசியல் பலமுள்ள ஒரு லாபியிஸ்ட் பெண்ணும், அந்த இடத்துக்குப் பக்கத்திலேயே இன்னொரு இடம் வைத்திருக்கும் இன்னொரு தாதா குடும்பமும் ஆசைப்படுகிறது. சமுராய் பெரிய தாதா. இதன் நடுவில் ஜிப்ஸிக்களின் தாதா கும்பல். தேவையேயில்லாமல் ஹெராயின் விற்று பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் ஒரு போலீஸ்காரரின் மகன். நேர்மையான அரசியல்வாதி ஒருவனை வைத்து அரசியலில் காய் நகர்த்த அவனை மிரட்டும் சமுராய்.

பிரச்சினை நிலம் சம்பந்தப்பட்டதுதான். ஆனால், பின்னணியில் வாடிகன், பாதிரிமார்களின் பாலியல் அபிலாஷைகள், கணவனுக்குத் துரோகம் செய்து போலீஸ்காரர் மகனுடன் சல்லாபிக்கும் லாபியிஸ்ட்… மெயின் தாதாவான சமுராய் எல்லா இடத்துக்கும் நேரடியாய் போய் பிரச்சினையை எதிர்கொள்ளும் விதமும், பயமுறுத்தும் விதமும் ‘ஸ்லீக்’ குத்துகள். அதே நேரத்தில் இன்னொரு தாதா ஜாயிண்டின் தலைவனை ஒழித்துக்கட்டச் சரக்கு விற்ற கல்லூரி மாணவனை வைத்தே கொல்வதும். அந்தப் பையன், ஜிப்ஸிகளின் இளவரசன், தாதாவின் பையன் மூவரிடையே உருவாகும் நட்பு. ஜிப்சியின் தன்பால் ஈர்ப்பு பிரச்சினை என தாதாக்கள் கதையானாலும் அழகாய் விரிவாய் சொல்லியிருக்கிறார்கள்.

நட்பினிடையே ஏற்படும் துரோகங்கள் தெரியவரும்போது நடக்கும் உணர்ச்சிப் போராட்டங்கள், தாதாவின் மறைவுக்குப் பிறகு அக்கா - தம்பிக்கிடையே ஏற்படும் துரோகப் பழிவாங்கல் காட்சிகள் என நிறைய நாடகத்தன்மையோடு ஆர்ப்பாட்டமில்லாத தாதாக்கள் கதையைச் சொல்லியிருக்கிறார்கள்.

அதிரடி எபெஃக்டுகள் கிடையாது. ஆர்ப்பாட்டமான இசை கிடையாது. ரேஸியான பத்து செகண்ட் எடிட் கட் கிடையாது. அடுத்தடுத்த காட்சிகளுக்குத் தாவிப் பாய்ந்து போலியாய்ப் பரபரக்கும் திரைக்கதை கிடையாது. ஆனால், ஒவ்வொரு எபிசோடும் நம்மைக் கட்டிப்போடும் அற்புதமான விஷுவல்கள். ரோமில் எங்கு கேமரா வைத்தாலும் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருக்கிறது. நடிகர்களின் தேர்ந்த நடிப்பு. குறிப்பாய் சமுராயாய் வரும் நடிகரின் கட்டுப்பாடான நடிப்பும் ஜிப்ஸி இளைஞனாய் வருகிறவரின் நடிப்பும் அட்டகாசம்.

இவர்களின் சீரீஸ்களில் ஆக்‌ஷன் இருந்தாலும் அதை ஆற அமர மிகவும் பொறுமையாகத்தான் கையாளுகிறார்கள். கொலைகளைக்கூடத் தடாலடியாய் திடுமெனச் செய்வதில்லை. சீனியர் தாதாவான சமுராய் இந்த டீலுக்காக இரவு பகல் பார்க்காமல் யாருக்கு எங்கே செக் வைத்தால் எங்கு வலிக்கும் என யோசித்து ஒவ்வொரு மூவாய் மேற்கொள்ளுகிறார். இடையறாத இந்த முயற்சியில் தூக்கமில்லாமல் வண்டி ஓட்டிக்கொண்டே தூங்கி விபத்துக்குள்ளாகும் காட்சியும் அபாரம். அந்த இடத்துக்காக சமுராயை மிரட்டும் அவனுக்கும் மேலான அதிகாரக் கூட்டம் அவரது வயதான தாய் மட்டுமே வசிக்கும் வீட்டில் வந்து உட்கார்ந்து மிதமாய் மிரட்டிவிட்டுப் போன பிறகு, அவரின் வயதான அம்மாவிடம் “ஒண்ணுமில்ல சின்ன பிசினஸ் மீட்” என்று சொல்ல, அம்மா அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் “இதுதான் உன் தூக்கத்தைக் கெடுக்குதுன்னா அது ஏன்?” என்று கேட்கிறார். இப்படி உணர்ச்சிகரமான பல தருணங்கள் சீரீஸ் முழுக்க உள்ளன.

எங்கேயும் விக்கி அழவில்லை. கண்களில் கண்ணீர் தளும்பி வழியவில்லை. ஆனால், எல்லாமே அளவாய், நாசூக்காய் வெளிப்படுகின்றன. விஷுவல்களில் தெரியும் இத்தாலியப் பெண்களின் நிர்வாண உடல்களில் இயல்பாகவே ஓர் அழகுணர்வு இருக்கிறதோ என்று தோன்றுகிறது. எத்தனை சுதந்திரம் இருந்தாலும், அதை தேவைக்கேற்பச் சரியாகக் கையாளுகிறார்கள். செக்ஸையோ, வன்முறையையோ திணிப்பதில்லை. ஆனால் இவர்களின் வாழ்க்கையில் செக்ஸும் போதையும் வன்முறையும் இழைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே இந்தக் கதையிலும் அவை இயல்பாகக் கலந்திருக்கின்றன.

தொடரின் கதை, எடுத்த விதம், நடிப்பு, காட்சிகளின் நேர்த்தி என எல்லா விதங்களிலும் சுப்போரே வித்தியாசமான அனுபவம். வெப் சீரீஸ்களில் திரைப்படத்துக்கு இணையான, சொல்லப்போனால் அதற்கும் மேலான அனுபவத்தைக் கொடுக்கும் இதுபோன்ற முயற்சிகள் தொழில்நுட்பத்தின் வீச்சு காட்சிக் கலையின் படைப்பாற்றலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருப்பதை உணர்த்துகின்றன. புதிய ஊடகம் தரும் சுதந்திரத்தையும் இந்த வெப் சீரீஸ்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நடக்கும் இந்தப் பாய்ச்சலுடன் போட்டிபோடும் நிலையில் இந்தி மொழியின் வெப் சீரீஸ்கள் இருக்கின்றன.

தமிழ்? வழக்கம்போலத்தான்!

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கேபிள் சங்கர் எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். ‘சினிமா வியாபாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ‘தொட்டால் தொடரும்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். மின்னம்பலம் பதிப்பகம் சார்பாக இவருடைய ‘கனவைத் துரத்தல்’ நூல் வெளியாகியுள்ளது. இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

திங்கள் 30 ஜூலை 2018