மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

குடிமக்கள் பதிவேடு விவகாரம்: ராஜ்நாத் சிங் வேண்டுகோள்!

குடிமக்கள் பதிவேடு விவகாரம்: ராஜ்நாத் சிங் வேண்டுகோள்!

“அசாம் என்.ஆர்.சி. பதிவேடு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்” என்று எதிர்க்கட்சிகளுக்கு உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) புதுப்பிக்கும் பணி 2015ஆம் ஆண்டு ஆரம்பித்தது. என்.ஆர்.சி. முழு வரைவு பதிவேடு இன்று (ஜூலை 30) வெளியிடப்பட்டது. தங்களின் பெயரைப் பதிவு செய்ய 3.29 கோடிப் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2.89 கோடி மக்களின் பெயர் மட்டுமே இப்பதிவேட்டில் இடம் பெற்றிருந்தது.

40 லட்சத்திற்கு மேற்பட்டோரின் பெயர்கள் விடுபட்டதற்கு காங்கிரஸ், திருணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இவ்விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

மக்களவையில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய திருணமூல் காங்கிரஸ் எம்.பி சுதிப் பந்தோபாத்யாயா, “மீதமுள்ள 40 லட்சம் மக்கள் எங்கே செல்வது? அசாமில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் மக்களுக்கு நீதி மறுக்கப்படக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார். இது மனிதத்தன்மையற்ற செயல், மக்களைச் சித்திரவதை செய்யும் முடிவு என்று கூறிய அவர், 40 லட்சம் பேரும் அசாமிலேயே வாழ்வதற்கு உரிய திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுந்து, “அசாம் மாநிலத்தின் உண்மையான குடிமக்கள் கேள்விகளை எழுப்பிவருகிறார்கள். மேலும் இது சாதி, மத அடிப்படையில் பிரிவினையை உருவாக்குகிறது” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இன்று என்.ஆர்.சி. வரைவுப் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. இதில் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. அனைத்து நடவடிக்கைகளும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படியே நடைபெற்றன. எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன” என்றார். இது உணர்ச்சிபூர்வமான விவகாரம் என்று குறிப்பிட்ட அமைச்சர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது தொடர்பாக மக்களிடையே பீதியைக் கிளப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இதில் மத்திய அரசு ஒன்றுமே செய்ய முடியாது. அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையிலேயே நடைபெறுகிறது என்று கூறிய ராஜ்நாத் சிங், “இது இறுதிப் பட்டியல் அல்ல. என்.ஆர்.சி. பதிவேட்டில் தங்கள் பெயர் இடம் பெறவில்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம். மக்கள் தங்களின் கோரிக்கைகளையும் ஆட்சேபணைகளையும் பதிவு செய்யலாம். மக்களின் கோரிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றமே இறுதி முடிவெடுக்கும்” என்றும் கூறியுள்ளார். இது உணர்ச்சிமயமான பிரச்சினை, எனவே எதிர்க்கட்சிகள் இதனை அரசியலாக்க வேண்டாம் என்றும் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 30 ஜூலை 2018