மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது: முதல்வர்

கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது: முதல்வர்

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 30) நேரில் சந்தித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த வெள்ளியன்று நள்ளிரவில் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேசிய மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நலம் குறித்து குடும்பத்தாரிடம் கேட்டறிந்தனர். இந்நிலையில், நேற்று (ஜூலை 29) மாலையில் கருணாநிதியின் ரத்த அழுத்தம் மீண்டும் வேகமாகக் குறைவதாக தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து மருத்துவமனையில் திமுக தொண்டர்கள் அதிகளவு குவியத் தொடங்கினர்.

பின்னர் இரவு 9.50 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில், “முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட தற்காலிக பின்னடைவு தீவிர சிகிச்சையின் காரணமாக இயல்பாகி வருவதற்கான முக்கிய அறிகுறிகள் தென்படுகின்றன. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தலைசிறந்த மருத்துவர்கள் அடங்கிய குழு அவருக்குச் சிகிச்சை அளித்து வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கருணாநிதியின் உடல்நிலை சீர் செய்யப்பட்டுவிட்டது என்று திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசாவும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 30) காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், காமராஜ், சி.வி.சண்முகம் ஆகியோர் இருந்தனர். கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்று அவரை நேரில் பார்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, “ திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல்வரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய கலைஞர் அவர்கள் உடல்நலம் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. நானும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கருணாநிதியை நேரில் பார்த்தோம். திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர்” என்று தெரிவித்தார்.

இதேபோல், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜகி வாசுதேவ் நாஞ்சில் சம்பத் உட்பட பலர் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தாரிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “நேற்று முன்னிரவில் கருணாநிதிக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கேள்விப்பட்டேன். பின்னர் மருத்துவ அதிசயமாக, மருத்துவர்கள் சிகிச்சை அளித்தாலும் தானாக அதிலிருந்து மீண்டு விட்டார் என்பது பெரிய அதிசயம். வாழ்நாள் எல்லாம் தமிழர் நலனுக்காக, தமிழ்நாட்டு நலனுக்காக பல சக்திகளை எதிர்த்துப் போராடியிருக்கிறார். அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடியிருக்கிறார். பலமுறை சிறைவாசம் கண்டிருக்கிறார். இப்போது எமனோடு போராடுகிறார், எமனையும் ஜெயித்து மீண்டு வருவார்” என்று தெரிவித்தார்.

முத்தரசன்

நேற்று கருணாநிதியின் உடல்நலம் குன்றியது உண்மைதான். ஆனால் அது விரைவில் சீர் செய்யப்பட்டு விட்டது. நேற்றைவிட இன்று அவர் நன்றாக இருக்கிறார். கருணாநிதி ஆகச் சிறந்த போராளி. வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களை சந்தித்து வெற்றிபெற்றிருக்கிறார். தற்போது இயற்கை அவரை எதிர்த்து போராடுகிறது. இதில், வெற்றிபெற்று வருவார் என்று நம்புகிறோம்.

நாஞ்சில் சம்பத்

என்னை தமிழகத்துக்கு அறிமுகம் செய்து வைத்தது கலைஞர்தான். அச்சம் நீங்கிய தமிழகத்தின் ஆணிவேர், மிச்சமிருந்த தமிழகத்தின் கடைசி நம்பிக்கை திமுக தலைவர் கருணாநிதி; அவரின் உடல்நலம் குன்றியிருப்பதை கண்டு கண்ணீர் வடிக்கிறேன்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 30 ஜூலை 2018