மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

சிறப்புக் கட்டுரை: குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வால் யாருக்குப் பயன்?

சிறப்புக் கட்டுரை: குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வால் யாருக்குப் பயன்?

மனஸ் சக்கரவர்த்தி

பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதால் விவசாயிகள் பயனடைவார்கள் என்பதே பொதுப் புத்தியாக உள்ளது. சமீபத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டது குறித்து பாஜகவினர் பெருமை பேசி வருகின்றனர். விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்கான இலக்கின் ஒரு பகுதியாகவே குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.

நமது கேள்வி என்னவென்றால், குறைந்தபட்ச ஆதரவு விலையால் எந்த விவசாயிகள் பயனடைவார்கள்? நம் நாட்டில் சிறு விவசாயிகள், குறு விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், பெரு நில உரிமையாளர்கள் எனப் பல்வகை விவசாயிகள் உள்ளனர். பஞ்சாபிலும், ஹரியானாவிலும் உள்ள விவசாயிகளோடு ஒப்பிடுகையில் பிகார், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேறுபட்டவர்கள். அரிசி விவசாயிகள், உணவு தானிய விவசாயிகள், பருத்தி உற்பத்தியாளர்கள், கரும்பு விவசாயிகள் என ரகங்கள் ஏராளம். எந்த ரகம் அதிகம் பயனடைகிறது?

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) வெளியிட்டுள்ள அறிக்கையில், 2013ஆம் ஆண்டில் இந்தியாவின் விவசாயக் குடும்பங்களின் வருவாய், செலவினம், கடன்கள் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. 0.4 ஹெக்டேருக்கும் குறைவான நில உரிமை பெற்ற குடும்பங்களின் வருவாயில், விவசாயம் வாயிலான வருவாய் ஆறில் ஒரு பங்குக்கும் குறைவாகவே உள்ளது. இவர்கள் உயர்வான குறைந்தபட்ச ஆதரவு விலையால் நிச்சயமாகப் பயனடையப் போவதில்லை. நாட்டின் ஒட்டுமொத்த விவசாயக் குடும்பங்களில் இவ்வகை குடும்பங்கள் (0.4 ஹெக்டேருக்கும் குறைவான நில உரிமை பெற்றவர்கள்) மூன்றில் ஒரு பங்கு வகிக்கின்றனர்.

0.4 முதல் ஒரு ஹெக்டேர் வரை நில உரிமை பெற்ற விவசாயக் குடும்பங்கள் பெறும் வருவாயில், விவசாயம் வாயிலான வருவாய் ஐந்தில் இரண்டு பங்காக மட்டுமே உள்ளது. இவர்களும் நாட்டின் ஒட்டுமொத்த விவசாயக் குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறனர். இவர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையால் பயனில்லை.

மேற்கண்ட இருவகை விவசாயிகளையும் சேர்த்தால், நாட்டின் ஒட்டுமொத்த விவசாயக் குடும்பங்களில், ஒரு ஹெக்டேர் வரை நில உரிமை பெற்ற குடும்பங்களின் பங்கு 69.4 விழுக்காடாக உள்ளது. இவர்களது வருவாயை விடச் செலவினம் அதிகமாக இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதாவது, அவர்கள் கடன் பிரச்சினைகளில் சிக்கியுள்ளனர். இவர்களில் பலர் பயிர் சாகுபடிக்குத் தேவையான தொகையைப் பெற, கடன் வழங்குவோர், பணக்கார விவசாயிகள், பெரு நில உரிமையாளர்களையே நம்பியுள்ளனர். பல சமயங்களில் இவ்விவசாயிகள் தங்களது உற்பத்தியைக் கடன் வழங்கியோரிடமும், பெரு நிலக்கிழார்களிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். ரத்தினச் சுருக்கமாகச் சொன்னால், குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வால் 70 விழுக்காடு விவசாயக் குடும்பங்கள் பயனடைய வாய்ப்பில்லை.

மறுபுறம், நான்கு ஹெக்டேருக்கும் மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களின் வருவாயில், விவசாயம் வாயிலான வருவாய் நான்கில் மூன்று பங்குக்கும் கூடுதலாக உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த விவசாயக் குடும்பங்களில் இவ்வகை குடும்பங்கள் வெறும் 4.1 விழுக்காடு பங்கை மட்டுமே வகிக்கின்றன. கிராமப்புற பணக்காரர்களான இவர்கள், கிராமப்புற அதிகார வர்க்கமாகவும் உள்ளனர். இவர்கள் வருமான வரியும் செலுத்துவதில்லை. விவசாயக் கடன் தள்ளுபடியால் அதிகப்படியான பலன் பெறுபவர்கள் இவர்களே. குறைந்தபட்ச ஆதரவு விலை வாயிலாகவும் இவர்கள் நல்ல லாபம் ஈட்டுவார்கள். இதைச் சாந்தா குமார் குழுவின் அறிக்கையும் உறுதி செய்கிறது. அந்த அறிக்கையில், இந்தியாவின் 5.8 விழுக்காடு விவசாயக் குடும்பங்கள் அரிசி அல்லது கோதுமையைக் கொள்முதல் ஏஜென்சிகளிடம் விற்பனை செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் தங்களது உற்பத்தியில் ஒரு பகுதியை (14 முதல் 35 விழுக்காடு) மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விற்பனை செய்துள்ளனர் என்று இந்த அறிக்கை வாயிலாகத் தெரிகிறது. சாந்தா குமார் குழுவின் அறிக்கையில், “இந்த ஆதாரங்களின் வழியாக, இந்திய உணவுக் கழகத்தின் கொள்முதல் நடவடிக்கைகள் வாயிலான பலன்கள் மிகக்குறைவான விவசாயக் குடும்பங்களையே சென்றடைவது தெரியவருகிறது. அரசு ஏஜென்சிகளின் கொள்முதல் நடவடிக்கைகளின் வாயிலாகக் கிடைக்கும் பொருட்களில் பெரும்பகுதி, பெரு விவசாயிகளிடமிருந்தும், குறிப்பிட்ட சில மாநிலங்களில் (பஞ்சாப், ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர்) இருந்தும் வந்துள்ளன” என்று கூறப்பட்டுள்ளது. இந்த இடத்தில், மிகக் குறைவான விவசாயக் குடும்பங்கள் என்பது பெரு நிலக்கிழார்களையே குறிக்கிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதால் யாருக்கு இழப்புகள் ஏற்படும்? குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வால் பணவீக்கம் உயரும் என்று ஏறத்தாழ அனைத்துப் பொருளாதார வல்லுநர்களுமே ஒப்புக்கொண்டுள்ளனர். குறிப்பாக, கொள்முதல் நடவடிக்கைகளை அரசு உயர்த்தினால் பணவீக்கம் நிச்சயம் உயரும்.

பணவீக்கம் உயர்ந்தால் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்? நகர்ப்புற ஏழைகள், விவசாயத் தொழிலாளர்கள், வறுமையில் வாடுவோர் போன்றவர்கள் நிச்சயமாகப் பாதிக்கப்படுவர். பயிர் சாகுபடி செய்வோரை விட, விவசாயத் தொழிலாளர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். விவசாயத் தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் தாழ்த்தப்பட்டவர்களாக உள்ளனர். குறு விவசாயிகள் தங்களது உணவுத் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யமாட்டார்கள். அதனால் அவர்கள் சந்தையிலிருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

பெருவாரியான மக்களைத் துன்புறுத்துவதின் விளைவில் கிராமப்புற பணக்காரர்கள் பயனடைவது நல்ல அரசியலாகுமா? மேலும், அதிக வட்டி விகிதங்கள், போட்டித்தன்மையில்லா வேளாண் விலைகள், கொழுத்த நிதிப் பற்றாக்குறை, பயனளிக்காத ஊக்கத்தொகைகள் எனப் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை யார் கணக்கில் எழுதுவது? ஆதலால், குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படுவதால் வெற்று அரசியல் மட்டும் நடக்குமே தவிர, நடைமுறையில் எந்த மாற்றமும் ஏற்படாது.

கிராமப்புற பகுதிகளின் நெருக்கடியைப் போக்குவதுதான் ஆட்சியாளர்களின் நோக்கமென்றால், தெலங்கானா அரசின் வருமானப் பரிமாற்றத் திட்டம் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. எனினும், நீண்டகால அடிப்படையில், விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள வேலையின்மையைப் போக்குவதற்கு, விவசாயத் துறைக்கு வெளியே போதுமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதைத் தவிர மாற்றுவழி ஏதுமில்லை.

நன்றி: மின்ட்

தமிழில்: அ.விக்னேஷ்

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

திங்கள் 30 ஜூலை 2018