மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

சிறப்புத் தொடர்: பழகினால்தான் தெரியும்!

சிறப்புத் தொடர்: பழகினால்தான் தெரியும்!

வெண்பா கீதாயன்

நீ கூடிடு கூடலே - 15: உறவுகளை அலசும் தினசரி தொடர்

பழக்கவழக்கம் என்றால் அதில் பலவிதமான விஷயங்கள் அடங்கும். முதலில் உடல் சார்ந்த பழக்கங்களை எடுத்துக்கொள்வோம். நம்முடைய துணை இருவேளை பல்துலக்கக் கூடியவராக இருக்கலாம். சாதாரணமாக கை கழுவ ஹேண்ட் சானிட்டைஸர் உபயோகப்படுத்தும் அளவிற்குச் சுத்தம் கொண்டவராக இருக்கும்பட்சத்தில் நாமும் அவர் இயல்புக்கு மாறுவது நன்று. சில காதலர்கள் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குளிப்பவர்களாக இருக்கலாம். அழுக்கு டி-ஷர்ட்டைக் குளித்துவிட்டு அணிபவராக இருக்க வாய்ப்புகள் அதிகம். அவருடைய ஜீன்ஸ் தண்ணீர் கண்டு வருடமாகியிருக்கலாம்.

இம்மாதிரி ஆட்களை வாரம் ஒருமுறை சந்திப்பதிலோ, தினமும் சிறிது நேரம் உடன் இருப்பதிலோ அவரது பழக்கவழக்கங்களைக் கண்டறிய முடியாது. உங்கள் முன் வரும்போது டியோடரண்ட் அடித்துவிட்டு ஃப்ரஷ்ஷாக இருப்பது போன்ற பாவனையில் வரலாம். ஆனால், ஒரே வீட்டில் தங்க நேர்ந்திடும்பட்சத்தில் இப்பழக்கம் உறுத்தும்.

இதெல்லாம் ஒரு விஷயமா என்று மேம்போக்காகக் கடந்துவிட இயலாது. ஏனெனில் நாம் சுத்தம் பார்க்கக் கூடியவராக இருந்தால் இத்தகைய செயல்களால் பெரிய சண்டை வர வாய்ப்புள்ளது. எனவே, யாராக இருந்தாலும் துணையின் சுத்தம் சார்ந்த எதிர்பார்ப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இருவருமே அழுக்குக் கூடையாக இருந்தால் பிரச்சினையே இல்லை. ஹவுஸ் ஓனர் வீட்டுக்கு வரும் அன்று மட்டும் குளித்தால் போதும்.

அடுத்து உணவுப் பழக்கம். இது உறவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இருவருமே ஒருவருக்கொருவர் தங்கள் துணையின் உணவுப் பழக்கத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். ஒருவர் சைவமாகவோ, மற்றொருவர் அசைவமாகவோ இருந்தால் சைவம்தான் சாப்பிட வேண்டுமென்றும் மாமிசம் சாப்பிடப் பழகு என்றும் சொல்வது மிகமிகத் தவறு. அவரவர் உணவுப் பழக்கத்தையே பின்பற்றலாம். உணவையும் தாண்டிக் காதல் வழிந்ததெனில் நான் உனக்காகச் சைவமாக மாறிக் கொள்கிறேன் என்றும் உனக்காக இந்த சிக்கனைக் கடித்துப் பார்க்கிறேன் என்றும் தானாக முன்வந்து பழகுவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

முன்பு சந்திக்கும்போது ரெஸ்டாரன்ட்டில் ஒரு துண்டு பீட்சா சாப்பிடும் காதலன், அரை தோசை சாப்பிட்டுவிட்டுப் போதுமென்று சொல்லிய காதலி, இப்போது வீட்டில் ஆறு தோசையோ, எட்டு சப்பாத்தியோ சாப்பிடலாம். அதைக் கண்டு அதிர்ச்சி ஆகிவிடக் கூடாது. வெளிப்படையாக foodie என்று சொல்லித் திரிபவர்களால் பிரச்சினை இல்லை. இந்த அரை கப் மில்க் ஷேக் போதுமென்று சொல்லிவிட்டு வீட்டில் ஒரு கால் லிட்டர் பால் அருந்திவிட்டு கமுக்கமாக இருப்பவர்களைக் கண்டறிவதுதான் கடினம். எனவே அதிகமாக உண்பது ஒரு பிரச்சினை அல்ல. உடலைப் பராமரிப்பதே முக்கியம். காதலுக்குக் கண்ணில்லை என்றாலும் பார்வைக்கு அழகாக இருக்க வேண்டியது முக்கியம். அதற்கு என்ன செய்யலாம்?

(காதல் தொடரும்)

(கட்டுரையாளர்: வெண்பா கீதாயன் எழுத்தாளர். சமகால நிகழ்வுகள், இலக்கியம், உளவியல், சமூகம் சார்ந்த கருத்துகளைப் பல்வேறு ஊடகங்களில் எழுதி வருகிறார்.)

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 30 ஜூலை 2018