மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

குற்றங்களைத் தடுக்க கேமராக்களைச் சரி செய்ய வேண்டும்!

குற்றங்களைத் தடுக்க கேமராக்களைச் சரி செய்ய வேண்டும்!

புதுவையில் குற்றச் சம்பவங்களைக் குறைக்க வேண்டுமெனில், முதலில் பழுதாகியுள்ள சிசிடிவி கேமராக்களைச் சரி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல், செயின் பறிப்பு எனப் பல்வேறு குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க காவல் துறைக்கு மூன்றாவது கண்போல் உதவியாக இருக்கிறது சிசிடிவி கேமராக்கள். இந்த கேமராக்கள் பழுந்தடைந்துக் கிடக்கின்றன.

சுற்றுலாத் தலமான புதுச்சேரிக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதால் இரவு நேரங்களில் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குற்றச் சம்பவங்களைத் தடுக்க போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டும், வாகனச் சோதனை எனப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும், புதுவையில் ஆங்காங்கே குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாக, நகரப் பகுதிகளில் மோட்டார் பைக் திருட்டு மற்றும் மோட்டார் பைக்கில் வந்து வழிப்பறியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும், விபத்து ஏற்படுத்திவிட்டுச் செல்லும் வாகனங்களை அடையாளம் காணவும், போலீஸாருக்கு உதவும் வகையில், புதுச்சேரி பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மத்திய அரசின் நிதி உதவியுடன் 2015ஆம் ஆண்டு ரூ.2 கோடி செலவில், மாநிலம் முழுவதும் 220 இடங்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்து, பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்டன. இந்த கேமராக்களை ஒருங்கிணைத்து, கோரிமேட்டில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாட்டு அறையை நிர்வாகிக்க, போலீஸில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டது.

இதில் ஒயர்கள் மூலம் இணைக்கப்பட்ட கேமரா மற்றும் வயர்லெஸ் என இரண்டு வகையிலான கேமராக்கள் பொருத்தப்பட்டன. கேமராக்கள் அமைக்கப்பட்ட சில மாதங்கள் மட்டுமே அவை உதவியாக இருந்தது. தற்போது போதிய பராமரிப்பின்றி கேமராக்களின் ஒயர்கள் அறுந்து பழுதாகியுள்ளன.

தற்போதைய நிலையில், மாநிலம் முழுவதும் பொருத்தப்பட்ட அனைத்து கேமராக்களும் பழுதாகி, காட்சிப் பொருளாகவே தெரிகிறது. பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களைப் பழுது நீக்க, காவல் துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், புதுச்சேரியில் நடைபெறும் பெரும்பாலான குற்றச் சம்பவங்கள் தனியாரின் சிசிடிவி கேமரா உதவியுடனே கண்டுபிடிக்கப்படுகிறது. குற்றங்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதற்குக் காரணம் இந்த செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள் என்றே காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 30 ஜூலை 2018