மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

எடப்பாடி குடும்பத்தைக் காப்பாற்றிய கருணாநிதி

எடப்பாடி குடும்பத்தைக் காப்பாற்றிய கருணாநிதி

தமிழக ஊடகங்களை மீண்டும் ஆக்கிரமித்திருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. அவரது உடல் நலம் பற்றி விசாரிக்க, கன்னியாகுமரியில் இருந்து பொன்.ராதாகிருஷ்ணன் முதல் காஷ்மீரில் இருந்து குலாம் நபி ஆசாத் வரை தேசத்தின் முக்கியமான தலைவர்கள் தினம் தினம் கோபாலபுரம் வீட்டுக்கும், காவேரி மருத்துவமனைக்கும் வந்துகொண்டிருக்கிறார்கள்.

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று காலை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கருணாநிதியைப் பார்த்துவிட்டு, ‘கருணாநிதியை சந்தித்தேன்’ என்று ட்விட் செய்திருக்கிறார்.

கடந்த 24 ஆம் தேதி இரவு முதல் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சமூக தளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து 25ஆம் தேதி செயல் தலைவர் ஸ்டாலின், “தலைவருக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நலமாக இருக்கிறார். எனவே வதந்திகளை நம்பவேண்டாம்’’ என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார். அதே சந்திப்பில், “ராணுவ விமானம் வழங்கியது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் பதில் அளிக்க வேண்டும். தனிநபருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்கிய தகவல் இப்போதுதான் வந்து உள்ளது. ஓ.பி.எஸ் மட்டும் அல்ல எடப்பாடி மீதும் ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ஆனால் 25 ஆம் தேதி இரவு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சக அமைச்சர்களோடு கோபாலபுரம் சென்று கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தார். இதையடுத்து திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கோபாலபுரத்துக்கு படையெடுத்தனர். கடந்த வெள்ளியன்று இரவு கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அடுத்து தமிழகம் முழுதும் அவரது உடல் நலம் பற்றிய பேச்சே எங்கும் எதிரொலிக்கிறது.

இதன் மூலம் தமிழகத்தையே உலுக்கி வந்த நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்டர் செய்யாதுரை உள்ளிட்டோரைக் குறிவைத்து நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டுகள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் முக்கியத்துவம் இழந்தன.

ஜுலை 16ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்டர் செய்யாதுரை அவரது மகன் நாகராஜ், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் ரெய்டு நடத்திய வருமான வரித்துறையினர் 183 கோடி ரூபாய் ரொக்கம், 105 கிலோ தங்க கட்டிகள், 2 கிலோ நகைகளைக் கைப்பற்றினார்கள். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 450 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதைக் கண்டுபிடித்த வருமான வரித்துறையினர் இதன் அடுத்த கட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோதுதான் கருணாநிதியின் உடல் நலம் பற்றிய விவகாரம் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

இதைப் பற்றிக் குறிப்பிடும் வருமான வரித்துறை அதிகாரிகள், “தமிழக முதல்வர் எடப்பாடியின் குடும்பத்தை கருணாநிதி தற்காலிகமாக காப்பாற்றிவிட்டார்” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன ஏதென்று வருமான வரி வட்டாரங்களில் விசாரித்தோம்.

“ஜூலை 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தமிழகத்தில் நடந்த மெகா ரெய்டில் கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது, செய்யாதுரை, நாகராஜனை இயக்குவது யார் என்பதையெல்லாம் ஆதாரங்களோடு கண்டுபிடித்துவிட்டனர் வருமான வரித்துறை அதிகாரிகள். முதல்வர் எடப்பாடியின் சம்பந்தி சுப்பிரமணிக்கும் இதில் தொடர்புள்ளது என்று புகார்கள் வந்தபோது அவர் பல ஆண்டுகளாக தொழில் செய்வதாக முதல்வர் தரப்பினரே விளக்கம் அளித்தனர். ஆனாலும் செய்யாதுரைக்குப் பின்னால் இருப்பது முதல்வர் எடப்பாடியின் மகன் மிதுன் என்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதி செய்துவிட்டனர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினரோடு பார்டனர் ஷிப்பில் முதல்வர் எடப்பாடியின் மகன் தொழில் செய்வது பற்றியும், அந்தத் தொழிலுக்கான முதலீட்டு முகாந்திரங்கள் பற்றியும் ஆவணங்களை கைப்பற்றிவிட்டனர். மேலும் வளைகுடா நாடுகளில் தாவூத் இப்ராஹிமுக்கு நெருக்கமானவர்களோடு இணைந்து எடப்பாடியின் மகன் தொழில் செய்து வருவதற்குரிய ஆதாரங்களையும் சேகரித்துவிட்டனர். வெளிநாடுகளில் தொழில் செய்து அதன் மூலம் முறைகேடாக வருமானம் ஈட்டுவதெல்லாம் அமலாக்கத்துறையின் கீழ் வரும். இது தொடர்பாக வருமான வரித்துறை அமலாக்கத் துறைக்கும் தகவல்கொடுத்து இரு துறைகளும் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருந்தன.

சரியாக அந்த நேரத்தில்தான் கருணாநிதியின் உடல் நிலை தீவிரம் அடைந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நேரத்தில் தமிழக முதல்வரின் மகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அடுத்து அது தமிழக முதல்வரை நோக்கியும் செல்லும். அப்போது தமிழகத்தில் அரசின் செயல்பாடு நிலைகுலைய வாய்ப்புள்ளது.

முன்னாள் முதல்வரும் முக்கியத் தலைவருமான கருணாநிதியின் உடல் நிலை இவ்வாறு இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒரு அரசியல் குழப்பம் வேண்டாம் என்று மத்திய அரசு கருதுகிறது. இப்போது தமிழகத்தில் ஒர் அரசின் இருப்பு முக்கியம் என்று மத்திய அரசு கருதுகிறது. அதனால்தான் முதல்வரின் குடும்பத்தின் மீதான அடுத்த கட்ட நடவடிக்கையை தள்ளிவைக்குமாறு வருமான வரித்துறைக்கும், அமலாக்கத் துறைக்கும் உத்தரவு போயிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அடுத்த கட்ட நடவடிக்கை வெடிக்கும் ’’ என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018