மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

காவேரி முன் குவியும் தொண்டர்கள்!

காவேரி  முன் குவியும் தொண்டர்கள்!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் நலம் விசாரித்து வருகின்றனர். அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் மு.கருணாநிதியை இன்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் சந்தித்த புகைப்படமும் வெளியிடப்பட்டது. மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், “காவேரி மருத்துவமனைக்கு சென்று கலைஞர் கருணாநிதியை சந்தித்தேன். அவருடைய உடல்நிலை குறித்து குடும்ப உறுப்பினர்களிடமும் மருத்துவர்களிடமும் விசாரித்தேன். அவர் சீராக இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். விரைவில் நலம் பெற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா, பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதி உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், “தொண்டர்கள் எழுப்பிய உணர்ச்சி முழக்கம் கருணாநிதியை அறியாமலேயே அவரது நாடி நரம்புகளில் புத்துணர்ச்சியைப் பாய்ச்சியுள்ளது. சிகிச்சை அளிக்கத் துவங்கிய உடனேயே ரத்த அழுத்தம் சீராகிவிட்டது என்று சொன்னார்கள். என்னை அரசியலில் வளர்த்து வார்ப்பித்தவர், தாயினும் பரிந்து பாசம் காட்டி என்னை ஊக்குவித்தவர். அவரது உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தேன். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனும் உடனிருந்தார். முழுமையாக தேறி வருவார் என்ற மன நிம்மதி எனக்கு ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

சீதாராம் யெச்சூரி குறிப்பிடுகையில், “இந்தியாவிலுள்ள மிக மூத்த அரசியல் தலைவர்களில் கலைஞர் கருணாநிதியும் ஒருவர். கருணாநிதி உடல்நிலை விரைவில் குணமடைந்து தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதற்கும் சேவை செய்ய வேண்டும். வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள் நடத்தி வெற்றிபெற்றுள்ள அவர், இந்த போராட்டத்திலும் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.

டி.ராஜா பேசும்போது, “கருணாநிதியின் உடல்நலம் உறுதியாக இருக்கிறது. மருத்துவர்களின் கருத்துப்படி அனைத்து பாரா மீட்டர்களும் சகஜமாக இருக்கின்றன என்று கூறினார்கள். அவருடைய உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் என்ற எங்களின் நல்விருப்பத்தை தெரிவித்துள்ளேன். கருணாநிதி சரித்திரத்தில் ஒரு மாபெரும் தலைவர். தமிழகத்தின் சரித்திரத்தை வென்றவர்” என்று தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், “திமுக தலைவரும் எனது நண்பருமான கருணாநிதி குணமடைந்து வர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. உலகெங்கிலும் வாழுகின்ற தமிழ் மக்களின் ஆசையும் அதுதான். நிச்சயமாக அனைவரின் ஆசையும் நிறைவேறும்” என்று கூறினார்.

குவியும் தொண்டர்கள்

கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய, திமுக தொண்டர்கள் தொடர்ந்து காவேரி மருத்துவமனை முன்பு குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அப்பகுதி சாலைகள் முழுவதும் இரண்டு நாட்களாக தொண்டர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனை குறிப்பிட்டிருந்த ஒருவர், “காவேரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ள கழக தொண்டர்களுக்கு உணவு பொட்டலம் & குடிநீர் பாட்டில்களை கழக சென்னை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஏற்பாடு செய்யலாமே” என்று ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு உடனே ரெஸ்பான்ஸ் செய்த ஜெ.அன்பழகன், “உங்கள் யோசனைக்கு நன்றி, நாளை முதல் கழகத் தோழர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் உணவு, குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படும்” என்று உறுதியளித்தார்.

காவேரி மருத்துவமனை அருகில் திமுக தொண்டரணியினர் டிராபிக்கை சரி செய்தால் நன்றாக இருக்கும் என்று ஒருவர் பதிவிட, அதற்கு, “நாளை காலை முதல் தொண்டர் அணியினர் களத்தில் இருப்பார்கள்” என்று அன்பழகன் பதிலளித்துள்ளார்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018