மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

சந்தை டிப்ஸ்: ஆடி ஆஃபரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்?

சந்தை டிப்ஸ்: ஆடி ஆஃபரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்?

நமக்குத் தேவை இருக்கிறதோ, இல்லையோ ஆஃபர் என்றால் அள்ளிக்கொண்டு வருவோம். அதுவும் ஆடி ஆஃபர் என்றால் கேட்கவே வேண்டாம்!

தள்ளுபடி ஏன்?

ஏன் ஆடி மாதத்தில் மட்டும் தள்ளுபடிகளை அள்ளி வழங்குகின்றன கடைகள்? நம் கலாச்சாரத்தில், ஆடி மாதத்தில் இறை வழிபாட்டுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மங்கல நிகழ்வுகள் மற்றும் வீட்டு விசேஷங்கள் கிட்டத்தட்ட நடப்பதே இல்லை. இந்த நேரத்தில், பொருட்களின் விற்பனையை அதிகரிக்க தள்ளுபடி வழங்குவது கடைகளின் வழக்கமாகும். ஆரம்பத்தில் சிறிய தள்ளுபடிகளை வழங்கிய கடைகள், இப்போது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், 90% வரை தள்ளுபடி, அதோடு நிற்காமல் 100 சதவிகிதம் கேஷ் பேக் என அதிரடிச் சலுகைகளை வழங்கி எதை வாங்குவது, எதை விடுவது என நம்மைத் திக்குமுக்காடச் செய்துவிடுகின்றன.

ஆதார் அட்டை உள்ள அனைவருக்கும் வட்டியில்லாத No Cost EMI வசதியை இப்பொழுது பல எலக்ட்ரானிக்ஸ் ஷாப்கள் வழங்குகிறது. இனி டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், காஸ் ஸ்டவ், வாட்டர் பியூரிஃபையர்ஸ், மைக்ரோவேவ் அவன் என ஒன்றையும் விடாமல், தேவையில்லையென்றால் கூட தள்ளுபடியில் வாங்கலாம்.

ஆஃபர் எல்லாம் அபாரம்தான். ஆனால், தள்ளுபடி என நம்பி எல்லாவற்றையும் கண் மூடித்தனமாக வாங்கிவிடக் கூடாது. ஒரு வாடிக்கையாளராக நம் பணத்தை செலவு செய்கிறோம். அதற்குத் தரமான பொருள் கிடைக்கிறதா என்பதை நாம் தான் உறுதிசெய்து கொள்ள வேண்டும். அசத்தலான தள்ளுபடியுடன் கூடிய தரமான பொருட்களை இந்த ஆடி மாதத்தில் நாம் வாங்க ஒரே வழி தரமான புராடக்டுகளை உண்மையான தள்ளுபடியில் விற்பனை செய்யும் கடைகளை நாடுவதுதான்.

சலுகை தூண்டில்!

முதலில் துணிக்கடையில் இந்தச் சலுகையை எதிர்பார்த்து, இப்பொழுது மின்னணு சாதனங்களான பிரிட்ஜ்,வாஷிங் மெஷின், டிவி, ரைஸ் குக்கர், இன்டெக்‌ஷன் ஸ்டவ் என வீட்டு உபயோகப் பொருட்களுக்குக்கூட தள்ளுபடி எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டோம். இதற்கு ஏற்ப மின்னணு பொருட்களை விற்கும் நிறுவனங்களும் இந்த ஆடி சீசனில் கல்லா கட்டுகின்றன. விலை குறைப்பு, ஜீரோ சதவிகித வட்டி, தவணையில் வாங்க சலுகைகள் எனப் பல சலுகைகளை அள்ளித் தெளிக்கின்றன.

ஒரு வகையில் நுகர்வோர்களுக்குத் தூண்டில் போடும் வேலைதான் இந்தச் சலுகைகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது முன்னணி பொருள் உற்பத்தி நிறுவனங்களே நேரடியாக விற்பனை மையங்களை வைத்துள்ளதால் உள்ளூர் பண்டிகைகளுக்கு ஏற்ப சலுகைகளை அறிவிக்கின்றன. சில தயாரிப்பாளர்கள் ஃபைனான்ஸ் நிறுவனங்களோடு கூட்டு வைப்பதன் மூலம் நுகர்வோருக்கான சலுகைகள் கொடுக்கின்றன.

ஜீரோ சதவிகித வட்டி

அவ்வப்போது அறிவிக்கும் இந்தச் சலுகையை, ஆடி மாதத்தில் மட்டும் ஸ்பெஷல் எனக் குறிப்பிடுவார்கள். தவணை தொகையை மட்டும் கட்டினால் போதும் என்றுதான் நினைப்போம். ஆனால், இதற்கான நடைமுறைக் கட்டணம், மறைமுகக் கட்டணம் என பெரும் தொகை போவது கண்ணுக்குத் தெரியாது. சில சமயம், கடன் தொகைக்கு மேலும், நமக்குத் தெரியாமல் நாமே பணம் கட்டிவிடுவோம். ஆகையால், கடன் வாங்கும்போது தெளிவாக எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இதைக் கணக்கிலெடுத்தால் தள்ளுபடி பெரிதாகத் தெரியாது.

பேரம் பேச முடியாது

பொதுவாக அதிகபட்ச சில்லறை விற்பனை விலை என்பது எல்லா தயாரிப்புகளுக்கும் நிர்ணயிக்கப்படும். இந்த விலைக்கு மேல் விற்பனை செய்யக் கூடாது என்பதற்காகத்தான் அதை குறிப்பிடுகின்றனர். இந்த விலையிலிருந்து பேரம் பேசினால் கணிசமாக விலையைக் குறைக்கலாம். இதிலும் ‘மேக்ஸிமம் ஆப்பரேட்டிங் விலை’ என்று ஒரு வரம்பு வைத்திருப்பார்கள்.

அதாவது லாபம் குறையாத அளவுக்கு ஒரு வரம்பு நிர்ணயித்திருப்பார்கள். 10,000 ரூபாய் அதிகபட்ச விலை என்று குறிப்பிடப்பட்ட பொருளை 1,000 ரூபாய் குறைத்து 9,000 ரூபாய்க்கு விற்பனை செய்வார்கள். இதிலிருந்தும் ரூ.500 வரை பேரம் பேசி குறைக்கலாம். இது வர்த்தகத்தில் உள்ள நடைமுறைதான். ஆனால் தள்ளுபடி சலுகைகளில் இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாது.

தேதியும் மாடலும்!

மின்னணு பொருட்களைத் தள்ளுபடியில் வாங்குவதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், அதன் தயாரிப்பு தேதி மற்றும் மாடல். பொதுவாக, தயாரிக்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டரை வருடங்களுக்கு மட்டுமே அந்த மாடலுக்கான உதிரி பாகங்கள் கிடைக்கும். இடைப்பட்ட காலத்தில் புதிய மாடலை கொண்டுவந்து விடுவார்கள்.

காரை ஓட்டிட்டு போங்க!

தள்ளுபடி சலுகைகளை பெற வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதம் வரை காத்திருக்க தொடங்கிவிட்டோம். இதைப் புரிந்துகொண்டு தற்போது செல்போன் விற்பனையாளர்களும் இறங்கிவிட்டனர். கார் விற்பனை நிறுவனங்கள்கூட ‘இந்த ஆடிக்கு வாங்க காரை ஓட்டிகிட்டு போங்க’ என அமர்க்களப்படுத்துகின்றனர்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018